காதலால் கசிந்துருகி-வித்யா

காதலால் கசிந்துருகி....!!-வித்யா
என்னிதயம்
என்னோடில்லை...
இதயம் கழற்றி
என் காலடியில் வைத்து
முறையிட்டுவிட்டு,
திரும்பி பார்க்காமல்
நீயும்
விரும்பியும் ஏற்காமல்
நானும்
சென்ற நாள் முதலாய்..!
மௌனங்கள்
போர்தொடுத்தும்
வார்த்தைகள்
விரதமிருந்தும்
காதலில் கசிந்துருகி
நீ கொடுத்த கடிதங்கள்
கிழித்தெறிந்த
நாள் முதலாய்..!
என
காதல் கொண்டதின் சுகந்தங்களை
சொல்லிக் கொண்டேப் போகலாம்
என் பாதங்களின்
வெஞ்சுரம் தாங்கும்
உன் நெஞ்சோடு
என் இதழ்களில்
புன்னகைக் கோர்க்கும்
உன் அன்போடு
என் கண்ணீரின்
சுவைதனை மாற்றும்
உன் காதலோடு
துளித்துளியாய் நான்
சிதற
சில்லுசில்லாய் நீ
உடைய
எல்லாமே புதியதாய்
புடை சூழ
நாம் மட்டும்
பழைய காதலோடு
வாழ்ந்திருப்போம்
இடறிய மழையில்
தவறிய நிலவாய்
நனைந்து நானும்
நனைத்து நீயும்
மோட்சம் பெறுவோம்
விதிப் புத்தகத்தின்
கடைசி உயிரெழுத்தையும்
சேர்ந்தே உச்சரிப்போம்
வானம் தொலைத்த
நிலவென நானும்
நிலவு தேடும்
வான் நீயுமென
கண்ணாமூச்சி ஆடுவோம்
உனதறையில் நீ
புதுக்கவியோடும்
எனதறையில் நான்
மரபுக் கவியோடும்
வாழ்ந்த நாட்களை
நமதறையில் நாமே
கவியாகிப் பேசுவோம்
முடிக்கத் தெரியா
இக்கவிப் போலவே
காதலில் நீண்டிடுவோம்........!!