இன்று அறிவியல் நாள்
இன்று அறிவியல் நாள்
நாள் முதலாய் நள்ளிரவு நுனிவரை
தோள் கொடுத்துத் துயர் துடைக்கும்
அறிவியல் ஓர் அற்புதம்!
காலனாய் மாறாமல்
ஞாலத்தில் காலத்தைப்
பொற்காலமாக்கிடும் அறிவியல்
ஓர் அதிசய வரம்-
அதில் உயிர் வாழும் மனி்த இனம்
அமிர்தமும் அதுவே
அன்று ஹிரோஷிமாவிலும்
போபாலிலும் ஆலகாலமும் அதுவே
அமிர்தம் ஏற்போம் ஆலகாலம் மறுப்போம்
அறிவியல் ஒரு வீணை-
சுரமும் அபஸ்சுரமும்
மீட்டுவோர் விரல்களிலே
அறிவியலால் பெருகின
தோட்டங்கள் உள்ளங்கையளவில்
தோட்டாக்களோ உலகளவில்
மனித நேயமோ உதட்டளவில்
மரண பயமோ உலக அளவில்
மனிதனின் பலமும் பலவீனமும்
அறிவியல்தான்
கண்டங்களை ஒன்றாக்கிடும்
அறிவியல் ஒரு விந்தைப்பாலம்
ஆனால்
உருக்குலைய உடைத்தெறிந்து
நொடியில் பொடிபொடியாக்கும்
அறிவியல் ஒரு பாவம்
பாலம் ஏற்போம் பாவம் மறுப்போம்
ஆக்கப்பணி ஆற்றும் வி்ஞ்ஞானியை
ஆண்டவன் என்போம்;
அழிவுக்கு அடிவருடும் வி்ஞ்ஞானியை
மனித சாதியிலின்று நீக்குவோம்
தனியுடைமைத்தழைத்திடப்
பிறந்த நாட்டைத் துறந்து
வளர்த்த வீட்டை மறந்து
அன்னை மடி துறந்து
அன்னிய மண்ணில் மூளை விற்கும்
இந்நாட்டு வி்ஞ்ஞானியை
இழித்துப் பேடியென்போம்
தாயகத்தில் காலூன்றி
விண்ணகத்தில் அறிவூன்றி
பொதுயுடைமைப் பூங்காவிற்கு
ஆக்கப்பணியாற்றும் வி்ஞ்ஞானியை
கை தொழுவோம் வாரீர்