நான் கவிஞனில்லை----அஹமது அலி-------
சத்தியமாய்
நான் கவிஞனில்லை
சராசரி மனிதனே!
பத்திய வார்த்தைகள்
எனக்குப் பழக்கமில்லை
பக்குவ மொழியும்
அறியவில்லை!
வலித்தால்
அழத் தெரியும்
பழித்தால்
பழி மீட்கத் தெரியும்
கோபம் தனிவுடமை
மானம் பொதுவுடமை
பக்தி அறிவுடமை!
ஓர் ஆண்
ஓர் பெண்
மூலம் மனித இனம்
எனும் நம்பிக்கை உள்ளவன் நான்!
கருப்போ
சிவப்போ
நிறபேதம் இனபேதம் இல்லை
நீயும் நானும்சகோதரனே!
ஒருவனை உயர்த்தி
ஒருவனை தாழ்த்தினால்
நீ தாழ்த்துபவனை
நான் உயர்த்திப் பிடிப்பேன்!
ஒருவனை தீர்த்தனாகவும்
ஒருவனை தீட்டாகவும் பார்த்தால்
நீ தீட்டென்பவனை
நான் கட்டி அணைப்பேன்!
நீ என்னையும் அவனையும்
சூத்திரன் என்றால்
நான் என்னையும் அவனையும்
ஏன் உன்னையும் சேர்த்தே
ஆதமின் மக்கள் என்பேன்!
எட்டி உதைக்கும் கால்களுக்கு
செருப்பாக இருக்க மாட்டேன்
கட்டியணைக்கும் கரங்களுக்கு
உறவாக சிறப்பேன்!
அநீதிக்கெதிரான மெளனம்
சுமூகமென்றால்
அக்கோழைத்தனம்
என் அவமானம்!
நீதிக்கெதிரான கூச்சலில்
ஆதரவான என் சிறு முனங்கல்
என் தன்மானத்திற்கு
தக்க சன்மானம்!
ஏகனுக்கன்றி
எவருக்கும் குனியாது
என் தலை!
கொள்கைக்கன்றி
அற்பங்களுக்கு குனியாது
என் பேனா!
சரித்திரம் படித்த பேனா
சரித்திரம் படைக்காமல் போனாலும்
தரித்திரங்களை சாடாமல் போகாது!
ஓர் மொழிக் கவிஞனல்ல
எல்லா மொழிக்குமான
வெளிக்காற்று நான்!
மொழித் தீண்டாமை
எனக்கில்லை
எத்தேசத்தின் காற்றோடும்
எனக்கு ஒவ்வாமை இல்லை!
என் பேனா எழுதி முடிக்கும்
எண்ணமோ அதை எட்டிப் பிடிக்கும்
காகிதப் பதிவோடு ஓய்ந்து போவதில்லை
களம் காணுவதே பிறவிக்குணம் !
நான் செல்லும் வழியில்
சுவர்க்கச் சோலைகள்
சகோதரா உன்னை அழைக்காத
சுயநலமும் எனக்கில்லை!
சமத்துவம் கிடைக்கும் வரை
தத்துவம் போதிப்பேன்
சத்தியம் வெல்லும் வரை
அசத்தியத்துடன் மோதுவேன்!
எனக்காக போராடும் போது
உனக்காகவும் போராடும் நான்
எனக்காக பிராத்திக்கும் போதும்
உனக்காகவும் பிரார்த்திக்கும் நான்!
நமக்கான நாளைகளை
புலரச் செய்ய
பூமியை புரட்டப் போவதில்லை
புத்தியை தீட்ட புறப்படுகிறேன்!
நான் கவிஞனில்லை
எந்தவொன்றும் என்
கைகளை கட்டி விடாது
படைத்தவனுக்கஞ்சி
கடமை செய்யும் காலம் வரை!