என்னைத் தேடி நான்

என்னைத் தேடி நான்... (அம்மா)
~~~~~~~~~~~~~~~~

இலுப்பைப் பூ இனிப்பும் அற்ற என்
இ-மெயில் உலகம் தேடி எள்ளுருண்டையாய் வரும் அம்மாவிடமிருந்து
இன்லேன்ட் லெட்டர்

முகவரி மட்டும் ஆங்கிலத்தில்
முத்து முத்தாய்
முன் வீட்டு பள்ளிச் சிறுமியின் கையெழுத்தில்...

மடக்கி ஒட்டிய கடித ஓரத்தில் மணக்கும் காய்ந்த இட்லித் துண்டு,
மனதில் காயாத நினைவுகள்!

விடியும் முன்பே எழுந்து அம்மா செய்யும் வேலையின் சத்தத்தில்,
விழித்துப் பதறிக்கொண்டு கூவும் சேவல்கள்!

சூரியன் உதிக்கும் முன்பே காத்திருக்கும் சூடும் சுவையும் நிறைந்த இட்லியும் சாம்பாரும்!
வீட்டில் நடந்த இட்லி வியாபாரத்தில் நடு நடுவே, பரஸ்பரம் பாசத்தையும் கண்ணீரையும் பரிமாறிக் கொண்ட அம்மாவும் மக்களும் !

பிரித்த கடிதத்தினுள் என்றென்றும் தன்னைப் பற்றிக் கவலைப் படாது, என்னைப் பற்றியே கவலைப்படும் வார்த்தைகள்...

துதிக்கை தூக்கிய யானைகள் போல் ஆங்காங்கே பழைய ‘னை’ ‘லை’ கள்...

நடுக்கத்தின் குழந்தையாய் கடிதமெங்கும் சிதறி ஓடிய எழுத்துக்கள்.

கைப்பட எழுதிய அம்மாவின் கடிதத்தில் கவிதையாய் தெரியும் பாசம்.

ஒருமுறை கூட பதில் எழுதியதில்லை நடுக்கமற்ற என் கைகள்...

வெறும் அலைபேசி வார்த்தைகளில் வடிந்துவிடும் பாசம்... வெற்றுக் காரணங்கள் பல சொல்லும் வாய் மட்டும் வெட்கமில்லாமல்!

இயந்திர வாழ்க்கை,
இ-மெயில் எரிச்சல்கள், அலைபேசி அவலங்கள் இல்லாத தேசம் அன்னை மடி!

நினைத்ததும் செல்லத்தான் முடிவதில்லை எனக்கு....

தேடும் ‘என்னை ’ தொலைத்துவிட்டு
தொலைந்த
'என்னை ’ மீட்க....

(இன்றும் வேலையையே ஓய்வாகக் கொள்ளும் என் தாய்க்கு....)

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (4-Mar-15, 6:05 am)
பார்வை : 461

மேலே