எனக்கான நிலா
முன்பெல்லாம் நான்
தூக்கம் வாராத
இரவு பொழுதுகளில்
என் ஜன்னல்
திரைசீலையை ஒதுக்கி
தூர தெரியும்
வெண் நிலவை
ரசித்து கிடப்பேன்
சில நினைவுகளை
அசை போட்டபடி
அப்படியே தூங்கியும்
போவேன் நானும்
தூங்கா நிலவோடு!
இப்போதோ நான்
தேடுவதே இல்லை
அந்த நிலவை
எனக்கான என் நிலா
அதுவும் என் அருகில் !
மூடிய உன் விழிகள்
என்னிடம் கவிதை
பேசி கொண்டிருக்கிறது
இன்னமும் கூட
மொட்டுக்குள் ஒளிந்திருக்கும்
மரகந்தத்தை போலதானே
சின்ன போர்வைக்குள்
சுருண்டு கிடக்கிறாய் நீ
நாள் முழுவதும்
செய்த சேட்டைகளுக்கு
சம்பந்தமில்லா உருக்கொண்டு
பால் முகத்தோடு
ஓய்ந்து கிடக்கிறது
இந்த மலர்
அம்மா அது என்ன
ம் ம் இது என்ன
என்று ஓயாமல்
கேள்வி கேட்ட
உதடுகள் உறங்குகிறது
விடிகாலை பனியின்
அழகை பூசினாற்போல
அடம் பிடித்து
ஆர்பாட்டம் செய்து
என் பொறுமையை
எப்போதும் சீண்டிபார்க்கும்
உன் குறும்புத்தனம்
கொஞ்சம் விடுப்பு
எடுத்து கொண்டதோ
நீ புரண்டு படுக்கையில்
உன் பிஞ்சு விரல்களின்
மெல்லிய ஸ்பரிசம்
என்னை மீண்டும்
தாய்மடி தேடும்
குழந்தையாக்குகிறது
நிம்மதியாய் தூங்கும்
உன் நிசப்தத்தின்
மவுனஅழகிடம்
தோற்றுபோய்
நிற்கிறது நிலா
விழி மூடாமல் உன்னை
ரசித்து கொண்டிருக்கிறேன்
அப்படியே தூங்கியும்
போகிறேன் நான்
எனக்கான என்
பிள்ளை நிலவோடு !