யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 1-கவிஜி

முதலில் அனைவருக்கும் வணக்கம்... இந்த "யுகங்கள் தாண்டும் சிறகுகள்" தொடரில் எனக்கு முதலாவதாக எழுத வாய்ப்பளித்த கவித்தாசபாபதி சார்க்கு எனது பணிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள்...

சரி என்ன எழுதலாம்... என்று யோசித்த போது அவர் கூறிய நாலைந்து தலைப்புகளில் முதலில் சுய விமர்சனம்.... அதோடு கூட சக படைப்பாளிகள் இருவர் பற்றிய ஒரு அலசல்....என்று முடிவெடுத்தேன்.... சரி என்னைப் பற்றி ஓகே.. ஆனால் அந்த இருவர் யார்... என்று யோசிக்கையில் தளத்தில் கிட்டத்தட்ட அனைவருமே நண்பர்கள்தான் என்ற போதும் இருவர் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று தொடரின் விதிப்படி நான் இருவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்....தொடருங்கள்..... தொடர் சலிக்காது என்றே நம்புகிறேன்.... நம்பிக்கை தானே எல்லாமே.... எல்லாம் என்றால்... இல்லாமையும் கூட நம்பிக்கையில் தானே இல்லாமல் போகிறது.....

"விண்ணுக்கு ஒரு கல்பனா சாவ்லா....
மண்ணுக்கு ஒரு ஜூகி சாவ்லா...."

எனது பதினெட்டாவது வயதில் நான் முதல் முதலாக எழுதிய வரிகள் இது... ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே கதை எழுதி தலைமை ஆசிரியரிடம் அடி வாங்கியது வேறு கதை...(பாருங்கள் நமது கல்வித் துறையின் செயல்பாடுகளின் ஓர் உதாரணத்தை...(இன்று வரை அப்படியே தான் இருக்கிறது ))
முதலில் வரிகளை நான் எழுதிய சூழல்.... அப்பப்ப்பா........ நினைக்கும் போதே உயிர் வலிக்கிறது.... அது ஒரு பின்னிரவு.... மும்பையில் ஒரு 12 வது மாடியில் என் வீடு.... குதித்து விட அன்று காலையில் இருந்தே யோசித்துக் கொண்டிருந்தேன்....வழக்கம் போல... எல்லாரும் தூங்குகிறார்கள்.... எதிர் பால்கனியில் ஹனி நிற்கிறாள்.... நான் கவனிக்கவில்லை... நான் பால்கனியின் சுவர் மேல் அமர்ந்து கால்களை வெளியே தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறேன்.... ஹனி... ஹைதராபாத்காரி.. அவள் மொழி எனக்கு தெரியாது.. என் மொழி அவளுக்கு தெரியாது.. ஆனாலும் சிரித்துக் கொள்ளும் அளவுக்கு மொட்டைமாடி பழக்க மொழி...இன்று மாலை அவள் மொட்டைமாடியில் அவள் தோழிகளுடன்... கல்பனா சாவ்லா பற்றி ஆங்கிலத்தில் ஏதோ பேசிக் கொண்டிருந்தது.... (கல்பனா சாவ்லா விண்வெளி போன சமயம் அது) அருகே அமர்ந்து தற்கொலை பற்றி யோசித்துக் கொண்டிருந்த எனக்குள் சென்றிருக்க வேண்டும்...

இப்போது அவள் என்னை கை தட்டி அழைக்கிறாள். நான் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்க்கிறேன்... காரணமே இல்லாமல் கல்பனா சாவ்லா பற்றிய நினைவு வருகிறது.. அன்று மதிய வேளையில் சாருக் ஜூகி சாவ்லா நடித்த ஒரு படம் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.... அவள் "தூங்கலையா" என்று ஜாடையில் கேட்கிறாள்... நான் சட்டென பின்னால் திரும்பி காலை உள் பக்கம் போட்டு இறங்கி என் அறைக்குள் வந்து மேசையில் இருந்த லட்டெர் பேடில் எதோ எழுதுகிறேன்.. எழுதியதைப் படிக்கிறேன்... அது தான் நீங்கள் மேலே கண்ட இரண்டு வரிகள்.. என் மரணத்தை சற்று தள்ளி போட்ட அந்த இரண்டு வரிகள்.... கொடுத்த உற்சாசம்... அடுத்தடுத்து நிறைய எழுதினேன்... அது கவிதையா கதையா... உரையாடலா... மொக்கையா(அன்று இந்த வார்த்தை கண்டு பிடிக்கவில்லை) எதுவும் தெரியாது.... எழுத வேண்டும்... எழுதினால்... மனம் நன்றாக இருக்கிறது.... மனதுக்குள் அடைத்து வைத்த எதுவோ... பறப்பது போல ஒரு சுக அனுபவம்... ஆக, எழுதுவது தொடர்ந்தது...... இன்று வரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்....

எழுத எழுத தீர்ந்து கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு... ஆக, தீராமல் இருக்க படிக்கத் தொடங்கினேன்... அறிமுகமே தாஸ்தாவெஸ்கி..... தெரிந்தோ தெரியாமலோ... வெண்ணிற இரவுகள் படிக்க நேர்ந்த இரவில் என் அறை எங்கும் நிலவு முளைத்த கனவு சுழலத் தொடங்கியது... கனவுகள் பேசுவதும்... கவிதைகள் வீசுவதும்... கதவு திறந்தது போல ஆன, ஒரு நாள் நான் எங்கு நிற்கிறேன்...? என்றொரு கேள்வி எனக்குள் இருந்தே முளைக்கத் தொடங்கியது.... கேள்வி கேட்பவேனே மனிதன்.... கேட்க கேட்க கிடைத்ததுதான் யாவும்....அதன் பிறகு, மக்சிம் கார்க்கி, ஜிப்ரான், மிகைல் நெய்மி, பைபிள், குர்ரான், பகவத் கீதை, ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், ஜி, நாகராஜன், பா.செயபிரகாசம், கலாப்ரியா, ஞானக்கூத்தன், தமிழன்பன், புவியரசு, சிற்பி, பாப்லோ நெருடா, சாத்தர், ஓஷோ, புத்தர், பெரியார், சே, பிடல் காஸ்ட்ரோ, இந்திய வரலாறு, கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய்,பாரதி, பாரதிதாசன், வண்ணதாசன், கண்ணதாசன், புதுமைப் பித்தன், இப்படி என் கேள்விகளுக்கு பதிலை இவர்களில் இன்னும் இவர்கள் தாண்டியும் நிறைய தேடிக் கொண்டே இருக்கிறேன்...

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.... கேள்விக்கு தானே இந்த வாழ்க்கையே....கேள்விகளற்ற பொழுதில் அங்கு மரணம் தானே பதிலாய் நீண்டு கிடக்கிறது....சம கால படைப்புகளை உள் வாங்காதவன் எழுதவே முடியாது ... அப்படியே எழுதினாலும் அதில் முழுக்க "நான்" மட்டுமே இருக்கும்.... படைப்புகள் என்பது "நான்" என்பதோடு மட்டும் சுருங்கி விடுவது நல்லதல்ல... அதையும் தாண்டி உணர வேண்டுமானால் சக படைப்புகளை படித்தே ஆக வேண்டும்.... நான் ஓரளவுக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றே நம்புகிறேன்....என்னை நானே வெளியே நின்று பார்க்கையில் நான் இரண்டு விதமாக தெரிகிறேன்... ஒருவன் இருண்மை சார்ந்தவன்,.,... ஒருவன் வெளிச்சத்தில்......

புரியாத கவிதைகள் என்று சொல்லப்படும் எனது படைப்புகள் எல்லாமே நான் யோசிக்காமல் அந்த இருண்மைக்குள் இருந்து ஓரிரு நிமிடங்களில் எழுதியவையே....பாதாளம் கடக்காமல் நீங்கள் சொர்க்கம் செல்லவே முடியாது தோழர்களே...(பாதாளம் சொர்க்கம் என்று சொல்வது வழக்கத்தில் இருப்பவை அல்ல)

"யோசிக்காமல் இரு
கவிதை வரும்"

என்பது நான் எழுதி எனக்கு பிடித்த வரி...

நான் யோசித்த கவிதைகள்... வெளிச்சத்தில் இருந்து எழுதியவை. பெரும்பாலும் எனக்கு பிடிக்காதவை...இங்கு பிடித்தல் பிடிக்காதவை என்பதை தாண்டி ஒரு படைப்பு எழுதிய பின் அது படிப்பவர்க்கு சொந்தமாகி விடுகிறது.... ஒரு வாசகனை வெறும் வாசனாக மட்டுமே காலம் முழுக்க வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... ஒரு வாசகனின் அடுத்த கட்ட நகர்தல் அவனும் படைப்பதே... படைப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.... படைப்பு என்பது கவிதை கதை மட்டுமல்ல என்பது என் எண்ணம்

ஒரு படைப்பாளி சோகத்தில்தான் தனது உச்ச பட்ச படைப்பை வழங்குகிறான்.... என்னைப் பொருத்தவரை என் எல்லா நாட்களும் கவிதையாகவே விடிகின்றன... மடிகின்றன... கவிதை என்பது எனக்கு இருவகை... ஒன்று நான் யோசித்து எழுதுவது.... இன்னொன்று யோசிக்காமல் எழுதுவது....

பித்த நிலைக்குள்
போகும் உன்னத தருணம்
மொத்தக்
கொடியில் ஒத்த ஆடை...

தாவரங்கள் துருவங்கள்
இலைமறையாய்
உள்ளங்கை
மறைக்கும் உயிரோசைக்குள்
காடு கொண்ட ஒற்றையடி...

மதி கொண்ட நிறத்தின்
மௌன மொழி மண்டிய
பயத்தில் முயங்கித்
திரிவது பூனை
மறந்த மதில்...

சொல்லுதல் செய்தல்
இடைவெளி இல்லாத
நூலகத்தில் பாசி படர்ந்து
தூசுகளூடே சிறு கீற்று
வெளிச்சம்....

தத்தம் கண்களின் கவிதை
கொன்று குவிக்கும்
குருட்டுச் சிந்தனைக்குள்
மயிரடர்ந்த
மயக்கத் தாழ்...

இரு கைகள் ஆணி
இறங்க
இன்னும் இரு கைகள்
நீட்டியவனே
சம்பளம்...
-இது யோசிக்காமல் எழுதியது.

கவிதை எழுதும் நிலை என்பது ஒரு வகை பித்த நிலை... யுத்த நிலையும் கூட... கண்ணதாசன் சும்மாவா கூறினார்... "ஒருவரின் துடிப்பினிலே விழைவது கவிதையடா..." என்று....கவிதை என்பது ஒரு வகை சூட்சுமம்... வெளிப்பாடு.... அதில் ஏதாவது ஒரு சொல் உங்களைக் காட்டிக் கொடுத்து விடும்... தீ சுட்ட புண் போல... நீர் சுட்ட பெண் போல... அது முக்திக்கான வழி காட்டுதல்..... அவரவர் கவிதையில் அவரவர் கடவுள் அல்லது சாத்தான்.... இருவரையும் ஒன்றாக உள் வாங்குவதில்தான் நான் எழுதுகிறேன் என்றே நம்புகிறேன்..எழுத ஆரம்பித்து வைத்தது மரணத்தின் நெருக்கமாக இருப்பினும் தொடர்ந்து எழுத வைப்பது உயிர்ப்புதான் எனக்கு... ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சாத்தானோ கடவுளோ என்னுடன் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்...(கடவுள் சாத்தான் வழக்கத்தில் இருப்பவை அல்ல) என்னை எழுத வைப்பதில் அவர்கள் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்... ஒவ்வொரு முறையும் நான்தான் எழுதுகிறேன்... "நான்" தாண்டும் போது அவரகள் மகிழ்வார்கள்.... அதன்பிறகு என் வெற்றுக் காகிதம் கூட கவிதை தான்...அதுவரை என் பறவை சிறகடித்துக் கொண்டேதான் இருக்கும்... சிறகடிக்காமல் அது என்ன பறவை... என்பதோடு என் சுயவிமர்சனம், வானம் போர்த்திக் கொள்கிறது.. அடுத்த காட்சியில்.... நான் சமீம காலமாக படித்து யோசித்த படைப்புகள் திரை விரிக்கின்றன....


இருண்மை...

அந்தப் படைப்புகள் கிட்டத்தட்ட இருண்மை சார்ந்தவை... அதாவது உள் நோக்கிய பயணம் கொண்டவை... மலை உச்சியில் நின்று பின்னிரவில் கத்திக் கொக்கரிக்கும் தனிமை சார்ந்தவை... மிகப் பெரிய தேடலை வீட்டின் ஜன்னல் திறந்ததும், கொண்டவை...பூக்களில்லாத சோலையில் பூ நட்டிக் கொண்டே நகரும் மழைத் துளிகளின் பிளவு அது... காற்றையும் கவிதையாக்கி சுவாசிக்கும் பெருஞ்சுவரின் வெளிகளானவை..நிழல்களின் பயணத்தில் இருட்டை தூவிக் கொண்டே செல்லும் உன்னத தூரம்.... ஒரு படைப்பில்

"சருகுகள் மூடியிருந்த
அந்தப் பாதையின்
முடிவில்
எரிந்து கொண்டிருந்த
சிறு நெருப்பின்
விளிம்பில்
தன்னந்தனியாய்க்
கிடந்தது,
நிழல் இல்லாத
முகமொன்று..."

இப்படி முடிக்கிறார்.... நான் மறுதலித்து மயங்கிச் சரிவதை தவிர வேறு வழியில்லை என்று சிறு நெருப்பாய் சிதறினேன்....

என் முகம் கிழிந்து
வேர்களுக்குள்
புதைந்து கொண்ட நான்...
மீண்டுமொருமுறை
மரணிக்கத்
தொடங்கினேன்...
இதற்கு முன்பு
சில முறை
மரணித்ததைப் போலவே...

இப்படியும் ஒரு கவிதை முடிகிறது.... தோழர்களே... இவ் வரிகளை உள் வாங்க முடிகிறதா... சொல்ல வரும் கருவை பொத்தி பொத்தி வைத்து பனிக்குள் பறக்க விடும் சூட்சுமம்.. இங்கு நெளி நெளியாய் மொழி ஆகி இருக்கிறது.. படிக்க படிக்க கை பிடித்து அழைத்துச் சென்று ஒரு காட்டுக்குள் விட்டு விடுவது போல இந்த படைப்பாளியின் ஒவ்வொரு கதையும் கவிதையும்...புரியாமல் போவதற்கு ஒன்றுமே இல்லை... உங்களுக்கு என்ன புரிகிறதோ அது தான் கவிதையின் வீச்சு... எனக்கு அது பெருங்காடு.... உங்களுக்கு அது சிறுகாடு... இன்னொருவருக்கு அது காடு... ஆகமொத்தம் அது காடு...காடும் கவிதையும் ஒன்று தான்... தொலைதல் வேண்டும்... ஒற்றையடி தானாக கிடைத்து விடும்...

மிச்சமாகிப் போன சில நினைவுகளில் கவிஞர் தேடும் பொருள் உன்னதமானவை... அது மிச்சமாகிப் போன வானத்தின் வண்ணம்.. மேகத்தின் முந்தின கடைசி நொடிக் காரிருள்.... இருள் என்பதே கொஞ்சம் வெளிச்சம் என்று கூறிய பாரதியின் தத்தரிகிட தத்தரிகிடவுக்குள் இருக்கும் அவிழ்ந்து விழும் கூந்தல் இரவு..... வெடித்து விடாத இதயத்தின் சிவப்பு, நிறம் மாறி சொல்லும் துடிப்பில் விளைந்தவை...இரவுக்குள் ஜன்னல் தட்டும் குறும்புத்தனம்... ஆங்காகே.... ஜன்னலே தட்டும் தலை விரித்தாடல் ஆங்காங்கே. முள் மேல் நடக்கும் பாதங்களில் கீறல் இல்லாமல் ஆகும் தருணம் ஒரு வித போதையானது.... அது வரிக்கு வரி பரவிக் கிடக்கும் படைப்புகள்... எனக்குள் ஒரு வித சிறகடிப்பை உண்டாக்கியது என்று சொன்னால் அது மிகை அல்ல... மிகைப்படுத்தலுக்கு முந்தைய கட்டுக்குள் பளீரென தெரியும் நிலவின் மறுபக்கத்தில் வடை சுடும் பாட்டியின் பிம்பம் இடது புறமாக தெரிவது போல எனக்குள் மட்டுமல்ல படித்த யாவருக்குள்ளும் மின்னும் என்பதே இந்த படைப்பாளியின் மின்னல் வரிகள் என்பது என் திண்ணம்...

"சரி ஓகே... எந்தக் கவலையும் பயமும் இல்லாம வாழ்க்கையை இந்த நொடி மட்டுமே அனுபவித்து வாழ்ந்துரலாம்... ஒத்துக்கறேன்...அப்படியே இருக்கட்டும் ... அட ராமா , அப்போ இந்த நொடி , வாழ்க்கைல மினு மினுன்னு மின்னிக் கொண்டிருக்குற பிரச்சனைகளை எங்க கொண்டு
போய் தள்ள ..."

"என்ன வாழ்கைடா இது"-என்ற படைப்பில் இப்படி ஒரு வசனம் வருகிறது.... யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.... சக்கரத்தில் முன் பக்கம் ஏது... பின் பக்கம் ஏது..... என்பது போல கடந்து விட முடியாத இருபக்கம் இது,.... ஒரு கை ஓசை கேட்குமா... என்றால் அங்கு இன்னோர் கை தானே பதில்.... அதன் தேடலின் சூட்சும தத்துவமே... உறைவதும்.... உணர்வதும்....படைப்பாளி உணர்ந்த தருணத்தில் எல்லாம்... உறைந்தும் போய் இருக்கிறார் என்பதை நன்றாக புரிய முடிகிறது... வாழ்வின் நிஜத்தை தேடும் இருண்மைக்குள் இருட்டாகவே நுழைகிறார்... வெளிப்பக்கம் பக்கமாகினும் இருட்டுக்குள் நுட்பம் மட்டுமே கடக்க முடியும்.. வரிக்கு வரி நுட்பங்கள் கொண்டு தைப்பதில் வல்லவராக இருப்பதில்தான் படைப்புகள் ஒவ்வொன்றும் மிச்சம் வைத்துக் கொண்டிருக்கிறது படிப்பவரின் கடைசி உணர்தலையும்...

அத்தனை தீர்க்கத்திலும் கண் மூடி வானம் பார்த்து "ரைட்டா....... ரைட்டா"....... என்று விளையாடும் சிறுபிள்ளையின் ரெட்டை ஜடையை ஆங்காங்கே ஒவ்வொரு படைப்புகளிலும் காணலாம்... இன்னும் கொஞ்சம் விரிக்கத் தொடங்கினால் கிருத்திகா தாஸ் என்ற இவரின் படைப்புகள் யுகம் தாண்டும் என்பதில் ஐயமில்லை....


வெளிச்சம்.....

"அரசு கஜானா
தள்ளாடும் போதெல்லாம்
தாங்கிபிடிக்கிறார்கள்
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்."

இப்படி ஒரு பகடியில், அரசியல் நையாண்டியில், கோபத்தில் வெளிச்சத்தை வீசிக் கொண்டே இருப்பதில் இவர் கை தேர்ந்தவர்...வெளிச்சம் இல்லாத எதுவும்... எதற்கு இங்கு என்று மொத்தமாய் சத்தமாய் யுத்தமாய் வெடிப்பதில் இவர், கவிதை சூறாவளி.... நினைத்ததை எழுதி விடும் தைரியசாலி.. எழுதுபவன் ஒரு போதும் கோழையாக இருக்க முடியாது.. கூடாது.. அப்படி இருந்தால் வேறு ஒரு நல்ல வேலைக்கு போய் விட்டு ஊர் கோடியில் ஒரு வீடு கட்டிக் கொண்டு காலம் முழுக்க இன்ஸ்டால்மென்ட் கட்டிக் கொண்டிரு என்பது இவரின் மொழி....ஆட்சியின் முகமூடிகளை கிழித்தெரிவதில் இவரின் வரிகள் நகம் கொண்டு சீறும். இருக்கும் நிஜங்கள் ரத்தம் தெறிக்கும் என்பதில் ஐயமில்லை...

வானத்தில் போதி மரம் கண்ட வைரமுத்துவின் வரிகளை தியானித்து.... நூல் பிடித்தார் போல அடுத்தடுத்த எல்லைக்குள் தன் சிறகை விரிக்கும் இவர்...அரசியல் மாற்றம்... சமுதாய மாற்றம்... கல்வி சூழல் மாற்றம்...என்று மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் வரிகளை விதைத்துக் கொண்டே இருப்பவர்...சோர்வடையா எழுத்துக்கு சொந்தக்காரர்... நான் காணும் வரிகளிலெல்லாம் வெளிச்சம் நிரம்பித் ததும்பும்.. வெண்ணிலா கூட இவருக்கு பகலில் தோன்றும்.... பெண்ணிலா எப்போதும் எங்கேயும்... ரயில் பயணங்களில் எல்லாம்... இவரின் கவிதைகள் தட தடக்கும் தழும்பலைக் கொண்டாடும்... கொண்டாடித் தீர்க்கும் தூரங்களில் இவர் காகிதம் நிறம் மாறும்.....

"செரிந்தநீல நீர்ச்சேலையுடுத்திய ஆழியலைகள்
திரிபுறமும் உன் தேன்கவிகள் பாடினாலும்,.
விரித்த கார்க்கூந்தலோடு நவீன கண்ணகிகள்
வீதிவீதியாய் சிலம்பெனும் கற்புத்தொலைத்து
நீதிமன்றவாசலில் நீதிக்கேட்டு தொலையட்டும்"

மூடர் கூடத்தை வேரோடு பிடுங்கிப் போடும் வரிகளை நீதிமன்ற வாசலில் ஏற்றிக் கொண்டே இருக்கும் தோட்டாக்களை கூழாக்கி,மையாக்கி தெறிக்க விடுவதில் ஆளுமை,இவர் ஆளும் மை...... பழமை உடைத்தெறியும் புதுமையை புதிர் போடாமல் பட்டென்று உடைத்து விடும் செம்மொழி.. இவர் மொழி... நம் மொழி திகைக்கும் இம்மொழி... நிஜமாலுமே செம்மொழி...

"உண்மையில்,
கவிதை மழலையுடன்,
விமர்சனங்களில்
மரணித்த
ஒரு கவிஞனும்
பிரசவமாகியிருப்பானாம்........!"

எனக்கு தெரிந்து இங்கு விமர்சனங்களால் அதிகமாக ஆளப் பட்டவர் இவராகத்தான் இருக்கும்... வாங்கும் அடிகளையெல்லாம் கவிதையடிகளாக்கும் நெஞ்சுரம் கொண்ட கவிஞன்.... போருக்கு புறப்பட்ட பின் அடுப்பு எரியுது.. பால் பொங்குது என்றால் தூக்கி போட்டு மிதி என்று கூறும்...போராட்ட கூர்முனை பேனாவுக்கு சொந்தக்காரன்... பிரசவம்தான் ஒவ்வொரு கவிதையும் என்று உணர்ந்ததாலே இவரின் படைப்புக்களில் உணர்ச்சி அதிகம் இருக்கும்... உணர்வுகளைப் போல தொடுவானம் ஒன்று எப்போதும் நம்மை சுற்றிக் கொண்டே இருப்பதில்தான் மீண்டும் மீண்டும் நாம் எழுதிக் கொண்டே இருக்கிறோம் என்பதை இவரின் படைப்புகள்,... எப்போதும் எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கும்...

புதுக் கவிதையை உடைக்கும் முயற்சி நிறைய உண்டு.... மொழியை உடைத்து நேராக்கி கூராக்கும் செயல் தானே கவிதை......விளக்கம் கேட்டால் அவர் விளக்கம் அவர் தருவார்.... இப்படித்தான் விளக்கம் வேண்டும் என்றால், பாவம் அவர் என்ன செய்வார்... விளக்க, மீண்டும் எழுதுவார்... ஒரு விளக்க கவிதை... கவிதை என்பது விளங்குவது.... விளக்குவது அல்ல... என்பது அடுதடுத்த அவரின் கவிதையின் போக்கு...தடாலடியாக இவர் விமர்சிக்கும் படைப்புகள் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போகும் சாலை... அது எத்திசையில் போகிறது என்பது ஆழம்... யோசிக்க யோசிக்க பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்... நான் அவர் சாலையில் பயணித்த போது என் வாகனத்தின் தவறுகளை அவருக்கே தெரியாமல் சரி செய்ததுண்டு,....பழக இனிமையான நண்பன்...பழகிய பின்னும் இனிமையான நண்பன்... வேறு யார்... நம் சந்தோஷ்......

வானம் பாடி இயக்கம் வந்த பிறகு தான்... நம் வீட்டுக் கட்டாந்தரையும் புதுக் கவிதை பாட ஆரம்பித்தது...கவிதை ஒருவனுக்கு மட்டும் சொந்தமான முதலாளித்துவமா... அது சமத்துவம்... சமூகத்துவம்... யார் வேண்டுமானும் எழுதலாம்... அறிவுள்ளவன் பிழைத்துக் கிடப்பான் என்பது போல...நாம் எழுதிக் கிடப்போம்... எழுதுவது எல்லாம் கவிதையா என்றோரு கேள்வி வருகிறது... சரி எது கவிதை என்று கூறுங்கள் என்றால் யோசிக்க வேண்டி இருக்கிறது.... சித்திரமும் கை பழக்கம்... கவிதை கூட கை பழக்கம் தான்... பழக பழக இந்த பால் புளிக்காது என்பது தான் கவிதையின் மிச்சம்....படைப்பவனே பிரம்மன்... இப்போது நீங்களும்.... கூட நானும்....

இப்படி இருண்மையும் வெளிச்சமும் எனக்கு பிடித்த கவிதைகளாகி இருக்கின்றன...கவிதை செய்ய முடிவெடுத்த பின் காகிதம் தடை அல்ல... என்பதோடு என் அலசலை இங்கு நிறுத்திக் கொள்கிறேன்....

நன்றி..... மீண்டும் ஒரு முறை கவிதாசபாபதி சார்க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (4-Mar-15, 2:08 pm)
பார்வை : 472

மேலே