இன்னிசை இருநூறு 11
இரண்டாவது அதிகாரம் – அறம்
இன்னிசை வெண்பா
மெய்யறிவன் நூலின் விதித்த விலக்கிய
செய்தலுஞ் செய்யா விடலுந் திகழறன்
மைதீர் மனநாவாற் காயத்தால் வாய்ப்பன
செய்கவெஞ் ஞான்றுந் தெரிந்து! 11
- இன்னிசை இருநூறு
பதவுரை:
மெய்யறிவன் நூலின் – மெய்யறிவனாகிய திருவள்ளுவரின் நூலாம் திருக்குறளில் சொல்லப்பட்டவைகள்
விதித்த விலக்கிய – அறநூல்களில் சொல்லி விதியாக்கப் பட்டுள்ளவைகளை, சொல்லித் தவிர்க்கும்படி விலக்கப்பட்டவைகளை
செய்தலுஞ் செய்யா விடலும் – விதித்தவற்றை செய்பவர்களாகவும், விலக்கப்பட்டவற்றைச் செய்யாதவர்களாகவும்
திகழ் அறன் – நீங்கள் விளங்குவீர்களாயின் அதுவே அறமாகும்; அறவழி நின்றவர்களாகவும் ஆகும்.
மைதீர் – குற்றமில்லாதபடி
மன, நாவால், காயத்தால் – மனத்துள் கொள்ளும் நினைவாலும், சொல்லும் சொற்களாலும், உடலால் ஆற்றும் நற்செயல்களாலும்
வாய்ப்பன – உங்களுக்கு வாய்த்த வழிகளிலெல்லாம்
எஞ் ஞான்றுந் தெரிந்து – எப்பொழுதும் முழுவதுமாக அறிந்து
செய்க – ஆற்றுவீர்களாக
தெளிவுரை:
மெய்யறிவனாகிய திருவள்ளுவரின் நூலாம் திருக்குறளில் சொல்லப்பட்டவைகளையும், அறநூல்களில் சொல்லி விதியாக்கி விதித்தவற்றையும் செய்பவர்களாகவும், சொல்லித் தவிர்க்கும்படி விலக்கப்பட்டவைகளைச் செய்யாதவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்களாயின் அதுவே அறமாகும்; அறவழி நின்றவர்களாகவும் ஆகும்.
ஆதலால், குற்றமில்லாதபடி மனத்துள் கொள்ளும் நினைவாலும், சொல்லும் சொற்களாலும், உடலால் ஆற்றும் நற்செயல்களாலும் உங்களுக்கு வாய்த்த வழிகளிலெல்லாம் எப்பொழுதும் முழுவதுமாக அறிந்து நற்செயல்களை ஆற்றுவீர்களாக என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.
விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

