நினைவுகள்

பச்சை வயல்களுக்கிடையே
ஓர் ஒற்றையடி பாதை
கான்கிரீடுகளை அறியாத
களிமண் குடிசைகள்
தூக்கி எறிந்த கல்லை
ஒரே மூச்சில் எடுத்துவரும்
கிணற்று போட்டிகள்
எலந்தை பழத்திற்கும்
குண்டு நெல்லிக்கும்
அலைந்து திரிந்த காடுகள்

அணில் பிடிக்க வலைகட்டி
காத்திருக்கும் கோமண தாத்தா
ஒருபக்கம் அடைத்துவிட்டால்
மறுபக்கம் ஓடிவந்து
அகபட்டு நிற்கும் வயல் நண்டு

காணும் பொங்கலில்
பாட்டியின் தட்டை முறுக்கு
தாத்தாவின் வெள்ளை வேட்டி
சொக்காயுடனான மீசை முறுக்கு
காலில் விழுந்து பெற்ற
ஒன்று முதல் ஐந்து ரூபாய்கள்

பம்பரத்துடன்
பரபரப்பாய் இருந்த வீதிகள்
விளம்பரத்தில் கம்பீரமாய்
நின்ற தெருகூத்துகாரர்கள்

அஞ்சல் கூட அதிசயமாய்
இருந்த நாட்கள்
ஐந்தாவது படித்தாலே
ஐ.ஏ.எஸ் என்ற நினைப்பு

ம்ம்ம்
நினைவுகளில் இவையெல்லாம்
ஊசலாடிக்கொண்டிருக்க
சாய்வு நாற்காலியை
ஆட்டி விட்டு
தாத்தா வெளிய போலாம்
ஐஸ்கிரீம் வேண்டும்
என்றாள் பேத்தி

எழுதியவர் : கவியரசன் (5-Mar-15, 11:15 am)
Tanglish : ninaivukal
பார்வை : 63

மேலே