என் தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்து

என் அம்மா வாங்கி வந்த
அழகு முத்தாரம்!
தவமிருந்து பெற்றுக்கொண்ட
அமுதக் கிண்ணம்!

என் அன்னையின் துயரம் நீக்கிய
குட்டி அரசன்!
என் அப்பாவின் சுமை தாங்கிய
சுட்டிக் கடைக்குட்டி!

இச்சிறு வயதில் உன்
பண்பிலும்,சிக்கனத்திலும்
என்னை நீ வியக்க வைக்கிறாய்!

உன் அதிரடிப் பேச்சில்
பயந்து தான் போகிறேன் நான்!
உன் பொறுப்பினைக் கண்டு
பூரித்து தான் போகிறேன் நான்!

கல்லூரி முடிந்து வரும் வேளையில் என்
களைப்பை ஆற்றிட நீ தரும் தேநீர்
கரும்பினும் இனிமையாகும்
என்மீதான
உன் பாசத்தினாலே!

மனமுடைந்து போகும் வேளையில்
மனதிற்கு இதமான உன் பேச்சு
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு!

என் உடல் நலனிலும்
உடையிலும் அக்கறை காட்டும்
இன்னொரு அப்பா நீ!

உன் பாசத்தினை வெளிப்படுத்தத்
தெரியா குட்டி ராட்சசன் நீ!
அன்பினால் நம் வீட்டை ஆளும்
இளவல் நீ!

உன் கல்வி சிறக்க
உடல் உள நலமுடன் வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறேன்!
எனதினிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சின்னவனே!

எழுதியவர் : பபியோலா (8-Mar-15, 12:02 am)
பார்வை : 46327

மேலே