விந்தைகளின் விசித்திரக் குகை - உதயா
குகை ஒன்றினைக் கண்டேன்
அதன் பிரமாண்ட
கதவினை திறந்துவிட்டு
காலடி எடுத்து வைத்தேன்
கனவுகளை எண்ணமெனும்
நூலால் கட்டிக்கொண்டிருக்கும்
ஓர் அழகியது உருவத்தைக்
கண்டேன் வியந்தேன்
எரிமலைகளின் சீற்றலில்
பூக்களின் ஜனனம் கண்டேன்
புயலின் வேகத்துள்
பல உயிர்களின் பிறப்பு கண்டேன்
நிலவினையும் பரிதியினையும்
ஆயுள் கயிதியாய் கண்டேன்
பனி பிரதேசங்களில்
புழுக்கத்தின் உணர்வைக் கண்டேன்
விண்ணையும் மண்ணையும்
விண்மீனையும் கார்முகிலினையும்
பெண்ணிற்கு அங்கமாய் பொருத்தும்
குயவனைக் கண்டேன்
வானவில்லை வளைத்து
ஊஞ்சலாய் வடித்து
ஆகாயத்தில் கட்டி விளையாடும்
தச்சனைக் கண்டேன்
கவிகளும் இசைகளும்
ஊற்றெடுத்து பயணிக்கும்
ஓர் சலனமில்லா
அருவியினைக் கண்டேன்
கோபங்கள் கனலாய்
கொந்தளித்து எழுந்து
சூறாவளியாய் வீசும்
கடலினைக் கண்டேன்
தென்றலை பிடித்து
அதற்கு பரிசொன்று கொடுத்து
காதல் தூதென அனுப்பும்
காதலனைக் கண்டேன்
காணும் திசையெங்கும்
கண்காணா காட்சிகள்
குகையின் அளவோ
முடிவில்லா தொடர்ச்சிகள்
குகையின் மதிலில்
பொறிக்கப்பட்டிருந்தது
குகையின் பெயர்
மனம் என்று
குகையின் நீளத்தை
கணிக்க முடியாது
குகையின் பயணத்தில்
சுவாரசியங்களுக்கு குறையிருக்காது
குகையில் இல்லாமையென
எதுவுமில்லை அவையனைத்தையும்
கண்டவன் ( உணர்ந்தவன் ) இங்கு
அறிஞ்சனாய் ஆவாமல் போவதில்லை