ஏற்றுக
![](https://eluthu.com/images/loading.gif)
வானின்று மண்வீழும்
நீரதன் வீழ்ச்சியோ வாழ்வு?!
அது வீழ்கின்ற பாதையில்,
வான்பாதை மேல்வரும்
கோன்-காற்றின் புகுதலோ தாழ்வு?!
தாழ்வதும், தழைப்பதும்,
வீழ்வதும், விரிவதும்,
யாவுமே மாயமென் றத்தனை ஞானியர்
பகன்றதன் கருப்பொருள்,
நுதற்கண்ணில் காண்கிறேன்..!
நுண்பொருள் புரிபட,
விதிர்க்கிறேன்... வியர்க்கிறேன்..!
கண்பொருள் காட்டிடும்
காட்சியும் காட்சியென்
றித்தனை நாட்கொண்ட
நம்பிக்கை நைந்ததே!?
தும்பிக்கைத் துண்டிக்கத்
துவண்டோடும் கரிமலை,
எரியதை நெஞ்சத்துள்
கொண்டாங்கே துவளற்போல்,
கரியதை முகத்தின்மேல்
மெய்ப்பொருள் பூசவும்,
பொய்க்கண்கள் இரண்டிங்கே
குருடென்று உணர்கின்றேன்!!
இருட்கண்ணுள் மிகுகின்ற
நிறக்கூடல் யாவுமே,
இருள் தூக்கத்தெழும் கனா
எனக்கண்டு இழிகின்றேன்..!
நானெனு மவந்தனைப் புறந்தள்ளி,
ஆசையா மழுக்கினைப் புறந்தள்ளி,
இன்பமா மினிக்கின்ற விஷந்தனைப் புறந்தள்ளி,
துன்பமாம் மயக்கிடும் போதையைப் புறந்தள்ளி,
மும்மலச்சேற்றையும், நான்வகைத் தீட்டையும் புறந்தள்ளி,
நல்லதுங்கெட்டதும் புறந்தள்ளி,
நல்லதோர்க் கிண்ணமா முள்ளத்துள்,
பற்றற்ற எண்ணமாம் நல்லெள் நெய் ஊற்றியே,
அன்பெனுந்திரியொடு ஏற்றினே னெரிகின்றதே....தீ!
**சுந்தரேசன் புருஷோத்தமன்**