நட்பு=காதல்=அன்பு 1

2)

• நல்ல காதலியானால்
காயத்துக்கு
ஒத்தடம் கொடுப்பாள்
கள்ள காதலியானாள்
காயம் பட்டதும்
காணாமல் போவாள்
-------------------------------------நன்றி் ---பரிதி முத்துராசன் (04.09.2012)

----------------------------------------------------------------

• நட்பு சூழ்ந்த வாழ்வு பூக்கள் சிரித்திடும் சோலைவனம்.
• அங்கு அன்பு சுரம் கூட்டும்
• பண்பு பல்லவி பாடும்,
• உண்மை மணம் பரப்பும்,
• உதவி நடனமிடும்,
• உவகை உலா வரும் ­

• ஆனால் இப்படிப்பட்ட நட்பின் பிரிவில் ஒருவரிடம் ஆழ்ந்த சோகமும் மற்றவரிடம் புறக்கணிப்பு மட்டும் இருக்கும்! • ஆனால் நாகரீகமற்ற நயவஞ்சக பொய் முகம் தாங்கிய துரோகச் செயல் இருந்தால் கூடாது……!

• மகன் தராத பாசம்,
• பெற்றோர் அளிக்காத பாதுகாப்பு,
• உற்றார் கொடுத்திடாத உதவி, நண்(பி)பன்தருவான்(ள்).

• சம்சாரம் தீர்க்காத சஞ்சலம் தீர்க்கும் சஞ்சீவி நண்(பி)பன்!
• சங்கட ரேகைகளை சந்தோஷக் கோடுகளால் மாற்றுபவன்(ள்).

• நண்(பி)பன்!
• இன்ப வாழ்வின் சந்தோஷப் பாட்டு
• ­ துன்ப இருட்டினை விரட்டும் மகிழொளிக் கீற்று
• ­ ஒற்றுமையை ஓதிவரும் மாபெரும் கீதம்
• ­ சிரம சிலந்தி வலை நம்மை பிணைத்திடும் போது உதவியின் பொருள் விளைக்கும் வேதம்
• ­ நம் வளர்ச்சியின் கண்ணாடி…

• ……….என்றெல்லாமும் இன்ன பிறவாகவும் நாளெல்லாம் நண்(பி)பன் விளக்கப்படுவான்(ள்).. நட்புப் போற்றப்படும்

• எவர் பின்னாலும் செல்லாத சுயமரியாதை
• ­ எவர் முன்னிலையிலும் சரணாகதியாத தன்மானம்
• ­எப்போதும் குனிவு கும்மி அடிக்காத வணங்காமுடி நண்(பியி)பனிடம் மட்டும் விதிவிலக்கு!
• ஏன் எனில் நாம் நிஜமெனில் அவன்(ள்). நிழல்!
• நிழலை அழித்திட நிஜங்கள் இன்னும் யுத்தங்களைத் தொடங்காத காலம் இது !

• நட்பில் பிரிவு சூரியப் பிரிவென்றால் பிரிவு நிரந்தரம் ­
காவிரிப் பிரிவெனில் மீண்டும் களிப்பு சூழும் !

• எவரும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக எப்படி இருப்பது..?
எவருக்கும் எங்கு வேண்டுமானாலும் எதுவுமாகவும் எப்படியாகவும் இருந்திட ஆசைதான் !
• சூரிய நமஸ்காரத்தின் பாதம் ஒட்டிய மண்ணாக,
• சாக்கடையின் பாலிதீன் பையின் கொசுவாக,
• டீசல் கலந்த நீரின் வானவில் நிறமாக ,
• சுமக்கப்பட்டு போன பிணத்தின் உதிர்ந்த பூவிதழ்களாக,
• சோலையில் கடற்கரைமணலில், மண்முகட்டில், நசித்த வீதியின் நடைபாதையில் ஒரு அடையாளம் உள்ள மனிதனாக..
• நட்பில் மட்டுமே இது சாத்தியமாகும்...நண்பனோடும் நண்பியோடும் மட்டுமே...!!

• அன்றியும் நாம் நாமாக தொடர்ந்து ஒரு நட்பைத் தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்…?

• நேற்றைய நிலா போல் இன்றில்லை வெளிச்சம் !
• இன்றைய உஷ்ணம் நாளைய சூரியன் தராது;
• மழைவெள்ளம் தள்ளி வந்து போட்ட கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாய் !
• இன்றைய வேப்ப நிழல் ‘பளீர்’! ­ நேற்றைய குளிர் !
• இன்றைய வெப்பம் ! நேற்றைய பகைமை இன்றைய சினேகிதம் எனில் இன்றைய சினேகிதம் நாளையும் தொடர என்ன செய்வது?

சிலருக்கு இது ஒரு கலை ­ :பலருக்கு கவலை!

• முனகலோடு முறிந்த நட்பு.........,
பிசிறு தட்டிய விசும்பலோடு வீழ்ந்த நட்பு........., தேம்பலில் மூழ்கி நாட்களின் ஓட்டத்தில் ஒளிந்த நட்பு! …
இப்படியெல்லாம் இருக்கிறது நட்பு !

மாறாய் குணம் நாடி குற்றமும் நாடி இவற்றுள் மிகை நாடி நட்பு பாராட்டியவன்(ள்) நயவஞ்சக துரோக இழைகளாய் நம்மை துயர நெசவில் நெய்யும் செயல் வியப்பல்லவா? வேதனை அல்லவா? நட்பை விட்டுவிட முடியுமா ?

• உலர்ந்து உதிரும் மலரிதழ்களின் பிரிவில் வடுக்களாய்ப் பிஞ்சு,
மறுபிறப்பாய்கனி,
• வாரிசாய் விதை!

• கருத்து மறையும் மேகங்களின் பிரிவில் வடுக்களாய்த் தூறல்,
மறுபிறப்பாய் நீராவி,
• வாரிசாய் பசும்புல்!

• இது இயற்கை கட்டமைப்பின் விதி தானே! மாறாய் பிரிவில் துரோகத்தையும் இதுநாள் வரை இருந்த நட்பின் வாரிசாய் பகைமைத்தனம் நிறைந்த கயமைத்தனம் பரிசளித்து செல்பவனை(ளை )
என்ன செய்வது?

கண்டிப்பதா? -மறு துரோகம் மூலம் தண்டிப்பதா?
இதுதான் நட்பில் புரிவதில்லை..!

• சாலையின் மரநிழல்,
• கட்டட ஓரங்கள் டீக்கடை மேசைகள்,
• துணிக்கடை அளவுகோல்கள்,
• பெட்ரோல் பங்க் குழாய்கள்
நீள் வீதியின் மின் கம்பங்கள்,
• பூங்கா புல்வெளிகள்,
• உன் வீட்டு வாசற்படி,
அவன்(ள்) வீட்டு மொட்டை மாடியின் துணிக் கயிறுகள்,..
• இவையெல்லாம் தணலாய் சினமுற்று சோர்ந்து போகும். உங்கள் சூரியப் பிரிவில்! சேர்ந்திருந்த காலங்களின் கணங்கள் உனக்குள் அமிலக் கொப்புளங்களையும் கருதி உயர் அழுத்தத்தையும் தானே அளிக்கும்..!

• … இப்படி நட்பின் காயங்கள் பலருக்கும் இருக்கலாம் ­ பதிவாகாத சங்கதிகள் பல இருக்கலாம்!

அசை போடுவோம்.....

இன்னும் தேடுவோம்

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (11-Mar-15, 6:53 pm)
சேர்த்தது : agan
பார்வை : 145

சிறந்த கட்டுரைகள்

மேலே