அகதியின் மடல்
மீள்பதிப்பு
என்மகளே அறிவாயோ
என் நிலைமை இது என்று
தென்கிழக்கு கடல்தாண்டி
அவுஸ்ரேலிய தீவு சிறையில்
தாய் தேசம் பிரிந்ததனால்
தவிக்கிறோம் விடை இன்றி
முள்ளி வாய்க்கால் போரிலே
உன் அன்னை மாண்டபின்பு
உனக்காக என்வாழ்க்கை -என
உயிர் பெற்று நான் எழுந்தேன்
எனை பெற்றோர்
உனை வளர்க்க
காணி வித்த காசிலே
கடல் கடந்து
கரை தொட்டேன்
அக்கணமே சிறைபட்டேன்
இத்தீவில்
உதிர்ந்து விழுந்த பால்பற்கள்
அதில் ஒளிர்ந்து நின்ற
புன்னகையும்
குதிரைவால் கொண்டையிட்டு
குதிக்கும் உன் குறும்பும்
எப்போது காண்பேனோ
என்மனம் ஏங்கும்
நத்தார் பொங்கல் என்று
மதம் கடந்து மகிழ்ந்தோம்
கடல் கடந்து தரைகிடந்து
தனி தனி தீவானோம்
உறுதியாய் காத்திரு
உருகி நீர் விடவேண்டாம்
உன் கையெழுத்தை அழகாக்கு
கால பிழைகளை
அது சரியாக்கும்
வெளிநாடு நமக்கெதற்கு
நாளை நம் தேசத்தில்
நம் வாழ்க்கை
விடியும் என்ற நம்பிக்கையோடு
தமிழன்