முதல் அழுகை

காரிருள் போர்வை..
நிசப்த பேரிரைச்சல்..
இனம்புரியா நெகிழ்வில்
நனவு தொலைத்த நேரம்..
இம்முறையேனும்..
பூ காயாகி கனியுமோ
வைகறையோடு கேட்ட பெண்மை..

கண்ணாடி நிறைகுடுவை..
தளும்பா நிதானம்...
அருஞ்சுவைகளில்
புளிச்சுவை இனிப்பாகும்...
தினந்தோறும் விரல்பூக்கள்
திங்களின் எண்ணிக்கை
திரும்ப திரும்ப சரிபார்க்கும்..

இரண்டாம் இருதயம்
அடிவயிற்றில் துடிப்பு ...
பிஞ்சுப் பாதங்கள்
கறுப்புச் சுவரில்
கோட்டோவியம்
தீட்டும் புல்லரிப்பு..

பெண்மையின் பூரணம்
குறிக்கும் நாளுக்காய்
பயம்கலந்த எதிர்பார்ப்பு..
ஆயிரம் இடிகள்
அடிவயிற்றில் இறங்க
உயர்ந்த ஓலங்கள்.. ...
வித்திட்ட வித்தகனை
ஒருகணம் சபிக்கும்...
பூகுடம் மெல்ல உடைய
உயிர் ஒன்றின்
முதல் அழுகை கேட்டு
பெருமூச்சுக்கள் வெளியே...
தேகத்தின் பாகப்பிரிவினை
மனங்களை நிறைத்தது...

வலிகளும் வாக்குறுதிகளும்
இட்ட பொய் சாபங்களும்
காற்றில் கரைந்தோட
தாய்மையங்கு பெருமையோடு
புன்முறுவல் பூத்தது !

எழுதியவர் : ஜி ராஜன் (16-Mar-15, 4:38 pm)
Tanglish : muthal azhukai
பார்வை : 125

மேலே