சின்ன வழிபாடு
எண்ணற்ற கட்சிகள்
(எண்ணற்ற சாதிகள் போல்)
இந்தியத் திருநாட்டில்’;
குடியாட்சி அல்லவா
கொடிகட்டிப் பறக்கிறது.
அரசியலும் சினிமாவும்
எல்லோர்க்கும் பிடித்தது
இரண்டிலும் கவர்ச்சியுண்டு
வெவ்வேறு வடிவங்களில்
வாரிசுகளுக்கும் வழியுண்டு
சேர்த்த சொத்தைப் காப்பாற்றிப்
பலமடங்காய்ப் பெருக்க.
மூடப் பழக்கங்களை முன்னிறுத்தி
கவர்ச்சியாய்க் காட்டி
மக்களின் மனங்களை மொத்தமாய்க்
குத்தகைக்கு எடுக்கப் பலவித வழிகள்.
இரண்டிற்கும் பலமே
சிந்திக்கத் தெரியாதவர்கள்
சிந்திக்க முடியாதவர்கள்
சிந்திக்க விரும்பாதவர்கள்;
பொருளியம் பற்றி மட்டும்
நன்றாகத் தெரிந்தவர்கள்
உடனடி இலாபத்தில்
உல்லாசம் காண்பவர்கள்.
இரண்டு சாக்கடைகளில்
எதில் விழுந்தாலும்
சமத்துவம் இருப்பதால்
படித்தவர் படிக்காதவர் என்ற
வேறுபாடெல்லாம் தெரியாமல்
வழிபாடு ஒன்றையே
தெளிவாகத் தெரிந்தவர்கள்.
எண்ணற்ற கட்சிகள்
அலையலையாய் எழுவதால்
சின்னங்களுக்குத் தட்டுப்பாடு
செருப்புக்கும் துடைப்பத்திற்கும்
தனி மரியாதை உண்டு.
முறம் மட்டும் ஒதுக்கப்பட்டு
முடமாகிக் கிடக்கிறது.
நடிகைகளுக்கு கோயில் கட்டி
தெய்வமாக்கி வழிபடும் நாட்டில்
செருப்புக்கும் துடைப்பத்துக்கும்
தனித் தனிக் கோயில் கட்டி
வழிபடும் நாளும் வரும்
காத்திருப்போம் அந்நாளைக்
கண்குளிரப் பார்த்து மெய்சிலிர்க்க.