வகுப்பறைக்கு வெளியே - நூல் விமர்சனம்-பொள்ளாச்சி அபி

வகுப்பறைக்கு வெளியே.! -இரா.தட்சிணாமூர்த்தி
நூல் விமர்சனம்-பொள்ளாச்சி அபி

“அன்புள்ள அண்ணாவுக்கு தங்கை எழுதுவது, வணக்கம். எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.கடந்த பத்து நாட்களாக என்னால் உண்ணவும் உறங்கவும் முடியவில்லை. இவ்வளவு நாட்களாக அண்ணனாக இருந்த உங்களை நான் எப்படி அப்பாவாக..,” ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி எழுதியிருந்த முற்றுப் பெறாத இந்தக்கடிதத்தின் பின்னுள்ள ஒரு குடும்பத்தின் சோகம்,அந்த மாணவியின் படிப்பை எவ்வாறு பாதித்தது.?
****** ************ **********
சார்,நான் இந்தக் கிரில் கடையில்தான் வேலை செய்யுறேன்.சம்மட்டி அடிப்பேன்,கம்பி வெட்டுவேன்,பெயிண்ட் அடிப்பேன்..கூட்டுவேன்,டீ வாங்கிட்டு வருவேன்.இதெல்லாம்தான் என்வேலை சார்..,எனக்கு அம்பது ரூபா சம்பளம் தாராங்க சார்..” பல வண்ணப் பெயிண்ட்டுகள் படிந்து கிடந்த கிழிந்த ட்ரவுசர்,டீ சர்ட்டுடன் நின்று கொண்டு,பெரிய மனிதனைப் போலப் பேசிக் கொண்டிருந்த ‘பாயாசம் பரமசிவம்’ இந்த வருடம் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவன்.
***** ********* **********
டிக்கெட் வேணுமா சார்..என்ற குரலைக் கேட்டுத் திரும்பியபோது,எனக்கு முன்பாக அவன் நின்று கொண்டிருந்தான்.“டேய் வினோத்..என்னடா சினிமா டிக்கெட்டா விக்கிறே..?”

ஆமா சார்,நல்ல துட்டு சார்,புதுப்படம் ரிலீசாகும்போது நாளொன்னுக்கு ஆயிரம் ரூபாகூட கிடைக்கும் சார்.

“என்னடா இது,நீ ஸ்கூலுக்கு வரலேயேன்னு உங்க வீட்டுக்குப் போய்க் கேட்டுட்டு வந்தேன்..”

“இல்ல சார்,இதுக்கப்புறம் நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன் சார்.படிச்சா மட்டும் நல்ல வேலையாக் கெடைக்கப் போவுது..இப்பவே நல்ல காசு கிடைக்குது சார்..”
******* ********** *************
தன்னிடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்களில் இதுபோல சிலரைச் சந்திக்க நேர்ந்த பின்,மறு நாள் பள்ளிக்கு சென்ற ஒரு ஆசிரியர், வகுப்பு பதிவேட்டில் இருக்கின்ற அந்த மாணவர்களின் பெயருக்கு நேரே,கை நடுக்கத்துடனும்,சிந்துகின்ற கண்ணீருடனும், “இடைநிறுத்தம்” என்று சிவப்பு மையால் அடிக்கோடிட்டு எழுதும்போது, எதிர்கால சந்ததியின் மீது நாம் கட்டிவைத்திருந்த மனக்கோட்டைகள் மெதுவாக சரிந்து விழுகின்றது. அதுநேரம் வரை நாம் தேக்கிவைத்திருக்கின்ற சோகம்,அணையுடைத்த வெள்ளமாய் நமது கண்ணீரை சிந்த வைக்கிறது.

புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவராக தற்போது பொறுப்பு வகித்துவரும் திரு.இரா.தட்சிணாமூர்த்தி,தமிழாசிரியராய்ப் பணியாற்றியபோது, இதுபோன்று பல மாணவர்களுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை “வகுப்பறைக்கு வெளியே..!.” என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.

இந்த நூல்,வெறுமனே அனுபவப் பகிர்வு என்றில்லாமல்,மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தனியொரு குடும்பத்தின் சூழலை மட்டும் சார்ந்ததன்று.மக்களை வழிநடத்தவேண்டிய அரசுகளின் அரைகுறைத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எவ்வாறு சார்ந்திருக்கின்றன என்று விவாதிப்பதுடன்,அந்த விவாதத்தில் வாசகனையும் பங்கேற்கச் செய்கிறது.

“மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மத்தியஅரசின் கல்வித்துறை,ஒரு மாணவனின் தேர்ச்சியை மதிப்பெண் மட்டுமே நிர்ணயிக்கும் முறையால்,மதிப்பெண் வள மேம்பாட்டுத்துறையாகிப் போனது. மதிப்பெண் எடுக்கவைப்பது மட்டுமே கல்விநிலையங்களின் வேலையாகவும் ஆசிரியர்களின் கடமையாகவும் போனது.

நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கும் பள்ளிகளுக்கும்,தன்னுடைய பாடத்தில் நூறுசதவீதத் தேர்ச்சிகொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டும் பரிசுகளும் விருதுகளும் குவிகின்றன.தன் பள்ளியில்,தன் வகுப்பில் எத்தனை மாணவர்கள் இடையில் நின்றார்கள்.நிறுத்தப்பட்டார்கள் என்று எந்தப்பள்ளியும் தகவல் தருவதில்லை.நூறு சதவீதத் தேர்ச்சிக்காக ஒரு மாணவனை வகுப்பின் இடையில் நிறுத்தியிருந்தாலும்,அது எப்படி நூறு சதவீதத் தேர்ச்சி ஆகும்.? முதல் வகுப்பில் சேரும் நூறு மாணவர்களில் 42 மாணவர்களே மேல்நிலைக் கல்விக்கு வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.மீதி உள்ள 52 மாணவர்கள் என்ன ஆனார்கள்.?அவர்களை பள்ளியை விட்டு விரட்டியது யார்;;..?” என்றெல்லாம்,நமது நாட்டின் கல்வித்திட்டத்தைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களின் மனதில் உள்ள கேள்விகளை நூறுசதவீதம் இந்நூல் வெளிப்படுத்துகின்றது.

அதேபோல்,பொருளாதாரக் காரணங்களால்,மாணவர்களின் இடைநிற்றல் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக,சத்துணவு,சீருடை,இலவசப் பாடநூல், சைக்கிள்,காலணிகள்,கல்வி உபகரணங்கள் என்று அரசுகளால் வழங்கப்பட்ட போதிலும்,இடைநிற்றல் தொடர்ந்து நிகழ்கின்றதெனில் அதன் பின்னனியில் நிகழ்வதென்ன..?

இதுபோன்று நாடு முழுவதும் இடைவிலகும் மாணவர்கள், படிக்கமுடியாமல் போனதற்குக் குடும்பமும்,பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால், சமூகமும்,பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதையும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவர் திரு.த.பரசுராமன் குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேணடியதாக இருக்கிறது.

இந்த நிலையில், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத்தேர்வுகள் என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை,ஒரு மிகப்பெரிய, கொண்டாட்டமான திருவிழாவைப் போலன்றி,மாபெரும் பந்தயங்களாகவே இருக்கின்றன.

இந்தப் பந்தயங்களில் நாக்கு வெளித் தள்ளி,மூச்சுத்திணறத் திணற,ஓடிக் கொண்டிருக்கின்றவர்களாக மாணவர்களும்,அவர்களுடைய நினைவுகளின் மீதமர்ந்து விரட்டிச் செல்லும் ஜாக்கிகளாகப் பெற்றோர்களும்,இந்தப் பந்தயங்களை ஊக்குவிக்கும் பெருமுதலாளிகளாக பள்ளி நிர்வாகங்களும் இருக்கின்றன.

முன்னனிக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்புப் பெறுவதும்,அங்கிருந்து பெற்றுத் தரப்படும் அயல்நாட்டு வேலைகள், டாலர்களில் சம்பளங்கள்,ஆடம்பர வசதிகள் ஆகியவை,வருடம்தோறும் நடைபெறுகின்ற இப்போட்டிகளில் வெற்றிக்கான பரிசுகளாகக் கிடைக்கும் என அடையாளப்படுத்தப்படுகின்றன அல்லது ஆசைகள் காட்டப்படுகின்றன.

இடைவிலகும் மாணவர்கள் ஒருபுறமும்,இறுதிவரை பந்தயத்தில் ஓடிக் கொண்டேயிருக்கும் குதிரைகளாக ஒருபுறமும் மாணவர்கள் இருவேறு விதமாக இருப்பதற்குக் காரணமென்ன..?

“வகுப்பறைக்கு வெளியே.!” என்ற இந்தச் சிறுநூல்,வாசிப்பவர்களின் மனதிற்குள் மிகப்பெரும் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போய், அதற்கான பதில்களைத் தேடும் பொறுப்பை நமக்கே வழங்கியுள்ளது.

வரலாறுகளை மாற்றி எழுதிடவும்,அதனைப் பாடத்திட்டமாக நுழைப்பதிலும் அக்கறை காட்டிக் கொண்டிருக்கும் மத்திய மாநிலஅரசுகள்,கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்களைக் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை ஒரு விவாதமாக நாடு முழுவதும் எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்துவதில்,இந்த நூலுக்கும் ஒரு பங்குண்டு என்பதை அவசியம் இங்கு குறிப்பிடவேண்டும்.!

தகவலுக்காக
நூல்-வகுப்பறைக்கு வெளியே..!
ஆசிரியர்-இரா.தட்சிணாமூர்த்தி
பக்கம்-65 விலை.ரூ.35
பதிப்பகம்-பாரதி புத்தகாலயம்.
தொடர்புக்கு-94432 34522,94433 60007
-----

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (16-Mar-15, 2:50 pm)
பார்வை : 166

மேலே