வேண்டுதல் வேண்டாமை

ஊர் தோறும்
தெருக்கள் தோறும்
வீதிகள் தோறும்
இன்னும் -
சாதி, குலம், மதம்
இனமென சகட்டுமேனிக்கு
சாமிகளின் இல்லங்கள்.

காற்று வெளியெங்கும்
நிறைந்து வழிகின்றன.
சுயநலத்தின் சுருங்கிய
வேண்டுதல்கள்.

ஆசைகள் நிறைவேறாத
அலுப்பிலும் - சலுப்பிலும்
வலுக்கின்றன - அவநம்பிக்கையின்
அறைகூவல்கள்.

உரிமைப் பிரச்சனையில்
உயர்கின்றன - இறையின்பால்
தராத வரங்களுக்கு
தரமில்லா நிந்தனைகள்.

மழைவேண்டி - மகா யாகம்
இலை தழைக்க -
இன்னொரு யாகம் - என்ன
விலை கொடுத்தேனும் நீர்
விளைய நிதமொரு
யாகங்களென உரத்த குரலில்
யாசிப்பின் உச்சங்கள்.

துளி விழும் - தடயம்
துளியும் இல்லை.
பழி கூடிடுமோ - மழை
பொய்த்திடுமோ என
மருகிடும் பொழுது .

எங்கோ ஓர் கிராமத்தில்
விபத்தில் சிச்கிய
சிறுமுயலின் -
தாகம் தணிக்க
நீர் வேண்டி முணுமுணுத்த
சின்னச்சிறுமியின்
தன்னலமில்லா யாசிப்பில்

மேகம் திரண்டு
வானம் இருண்டு
பூமி மருண்டு
பெய்யெனப் பெய்தது மழை.

--- " செல்லம் " ரகு. ( 94437 75974 )

எழுதியவர் : (17-Mar-15, 4:13 pm)
பார்வை : 161

மேலே