கண் தானம்
காரிலே தூரப்பயணம் –
இரவிலே துவங்கிய பயணம்
இன்னமும் தொடர்கிறது!
புலர்கின்ற பொழுதின்
சில்லென்ற காற்றினால்
விழித்த விழிகள்-
பரந்து விரிந்த உலகத்தை
பார்வையில் பரிசிக்கின்றது!
பச்சைப்பசு மலையையும்
நீலநிற வானத்தையும்
இரவெல்லாம் இணைத்திருந்த
வெண்ணிற மேகமவள்-
புணர்ச்சியினால் பெற்றிட்ட
செங்கதிரோன் முகம் கண்டு
அங்கமெல்லாம் பூரிப்பாய்
மெல்லிய ஆடையை
மெலிதாய் விலக்கியே செல்லும்
மென்மையான காலை!
மூடுபனியின் குளிரை
முழுமதியின் துணையோடு
முழுதாய் அனுபவித்த
முக்கோடி உயிர்களும்,
முன்னமே எழுந்திட்ட
ஆதவன் எழில் கண்டு – அங்கே
சோம்பல் களையும் வேளை!
வண்ண வண்ண மேகதினிடையே,
ஓங்கி உயர்ந்த பனைகளுக்கிடையே
கண்ணாமூச்சு ஆடும்
காலைக் கதிரவன்!
சுதந்திரக் காற்றை
நிரந்தரமாய் அனுபவிக்கும்
சிறியதும் பெரியதுமாய்
விதம் விதமாய் பறவைக்கூட்டம்!
பூமிமகள் கட்டியிருந்த
பச்சைப் பட்டாடையில்
வைரங்களை அள்ளி இறைக்கும்
நீர் வீழ்ச்சியும் ஓடையும்!
உள்ளத்தை வருடும்
மெல்லிய தென்றலின்
புல்லாங்குழல் இசைக்கு
மெதுவாய் தலையசைக்கும்
வகை வகையாய் பூக்கள்!
எத்தனை ஜென்மங்கள்
காத்திருந்தேனோ?
இத்தனை இன்பங்கள்
என் இதயத்தை நிறைப்பதற்கு!
எல்லையில்லா ஆனந்தத்தை
கண்ணிமைக்காமல்
என் எண்ணப்பேழையில்
எழிலாய் படம் பிடித்தேன்!
திடீரென இடியென
ஓர் சத்தம்!
ஓ...
கணநேரம்...
ஓலமிடும் அலறல்கள்...
எங்கள் கார் ....
உருள்கிறதா...
பறக்கிறதா...
ஒன்றையும் என்னால்
உணரத்தான் முடியவில்லை....
உடலையும்
உறவையும்
உணர்வையும்
கடந்து போகின்ற
ஓர் நிலை ...
‘நான் யார்’ என்னும்
இதயத்துடிப்பு ..
‘எனக்கில்லை’ என்று
அடங்கப்போகிறது...
சட்டென ஏதோ ஓர் எண்ணம்..
என் கண்ணுக்குள்
பொத்திவைத்த
எழிலான படங்களை
கண்ணை மூடி மண்ணுக்குள்
புதைக்க எண்ணமில்லை...
நின்று கொண்டிருக்கும்
சுவாசம்...
தொண்டைவழியே ...
யாருக்கேனும்
கேட்காதோ..என்ற
ஈனக்குரலில் ....
‘என் உடலுக்கு உயிர் போதும் –என்று
கொடுத்தவன் முடிவு செய்தான் –
என் விழிகளுக்காவது
உயிர் கொடுங்கள்’....
சொல்லும்போது உணர்வுகள்
விடுதலை ஆனது...
‘நிச்சயம் மீண்டும்
உலகம் காண்பேன்...’
என்னும் நம்பிக்கையில்
நினைவும் கரைந்தது....
சோ.சுப்பிரமணி
19-03-2015.