பாதரச விளக்குகள்
.மனிதத்தை தொலைத்தவர்கள்
மனிதனைத் தேடி
ஒளியாண்டுகளில்
பிரபஞ்சப் பயணம் செய்தபோது
அவ்வையின் வருகைக்கு சுட்ட பழங்கள்
மரத்தில் காத்துக் கிடந்தன.
காக்கைப் பறவைகளோடு
மனிதனும்
காத்துக் கிடந்தான்
எச்சில் இலை சோற்றுக்காய்..
.
சருகுகள் தொலைத்த சரித்திரம்
சாளரங்கள் பூட்டிய இருள் மாளிகையில் .
வெளிச்சம் படாமலே
வெளுத்துப் போய்.......
விலாசங்களைத் தொலைத்து
பனிக்குடங்களை உடைத்து
படுக்கையில் பிறந்து .......
பதவி ஊஞ்சலில் அட்டினக்கால் தோரணையில்
ஆடிய ஆட்டங்கள் பார்த்து
அமுதூட்டிய மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள்
சாத்தான்களைப் பெற்ற சாவித்திரிகள் .
சலனப்பட்ட மனங்களுக்கு
சஞ்சீவி மரம் நட்டு
வட்டப் பாதையில்
ஆரங்களைத் தொலைத்தவருக்கு
விட்டம் காட்டு.
புதினங்கள் ஏதும் செய்யாமல்
பொய்யர்களின் வெற்று கூச்சலில்
கலங்குகிறது கவிதைகள்
காகிதக் கப்பலில் கடற்பயணம்
கரையில் மீன்கள் முட்டையிட்டன
மனிதர்கள் அசுத்தக் காற்றை சுவாசித்து
பிராண வாயுவை வெளியிட்டார்கள் ......
அவ்வமயம்
ஆலயச் சிலைகள் இருந்த இடத்தில்
மனிதன் இருந்தான்
மனிதனை அந்த ஆண்டவன்
விழுந்து கும்பிட்டான்.
அப்போது-
ஆண்டவன் அதுவரை கண்டுபிடிக்கப் படாத
அயல்கிரக வாசியானான்.