என் முகத்தில் எச்சில்கள் - சந்தோஷ்

குப்பைத்தொட்டியில்
பயன்பாடுகளை
சேகரித்த சிறுவன்
வாய்மொழியால் அல்லாமல்
ஒரு உடற்மொழியால்
ஒரு கவிதை சொன்னான்.

”உங்கள் அசுத்தங்களை
நான் சுத்தப்படுத்துகிறேன்
பள்ளிக்கூட தெருக்களிலும்”

சட்டப்பையிலிருந்த என் பேனா
மனச்சாட்சியை குத்தியது,
உள்ளிருக்கும் மனச்சாட்சித்தானே
அதுக்கிடக்கிறது குப்பையென்று
பெரிய மனிதப்போர்வையில்
ஓரு வறுமை குடிசைக்குள்
உலாவியது என் விழிகள்.
அங்கே
ஒரு தகப்பன் சற்றுநிமிடங்களுக்கு முன்
கலவிமுடித்த வியர்வையில்
தனது நான்காவது மகளின்
மூன்றாவது மகனுக்கு
தாலாட்டு பாடிக்கொண்டிருக்கிறான்.
கூட்டத்திலிருந்த
ஓரு சிறுமி
கவிதை கேள்வி எழுப்பினாள்.

”நீ எழுதிக்கிழித்த
கவிதையின் மிச்சத்தில்தானோ
என் கிழிசல் ஆடைகள்
தைக்கப்பட்டிருக்கின்றன?”

ஒரு பெண்
கவிதையில் கேட்டாள்

”உங்கள் இலக்கியத்தில்
குடும்ப கட்டுப்பாட்டிற்கு
என்ன விளக்கம் இருக்கிறது
வறுமையா? வளமையா ? ”

மற்றொரு ஆண்
காத்திரத்தில் கேட்டான்

”உபயோகித்த ஆணுறைகள்
கிலோவிற்கு கிடைக்குமா?”

இம்முறை என் பேனாவின்
கொதிநிலையில் அனலேறியது
என்னிதயம் சூடுப்பட்டது.

வழியில் ஒரு
பைத்தியக்காரன் சொன்னான்

”நீ எழுத்தாளனா?
என்ன மசிரை புடுங்கினாய்?
உனக்கும் எனக்கும்
பெரும் வித்தியாசமில்லை”
போ போ என்றான்.

விரக்தியில் என் பேனாவை
விட்டெறிந்தேன்..
அது ஒரு பொந்துக்குள்
விழந்தவுடன் முனகலொன்று கேட்டது.
என் கூரிய
காதுகளை விசாரிக்க அனுப்பினேன்.

மார்பகங்கள் சிதைக்கப்பட்ட
ஒரு பெண் கூறினாள்
என் பெண் குறியில்
வழிந்த குருதியை
தொட்டு தீட்டி நீயெழுதிய
கவிதை பரிசு பெற்றாகிவிட்டதா..?

சற்று பொறுங்கள்
என் முகத்தில் வழியும்
சமூக காறிஉமிழ்தல்களை
துடைத்துவிட்டு வருகிறேன்.

நான்
நாவல் எழுதவேண்டும்
சமுதாய மாற்றத்திற்கு அல்ல
சாகித்திய அகாடமிக்கு. ..!

-------------
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (21-Mar-15, 1:20 pm)
பார்வை : 136

மேலே