என்னை விட்டு போகாதே பகுதி 4

மாலையில் கதிரவனும் மறைந்து போனான். இன்னும் அவள் வரவில்லை. அவளது கைபேசி எண் ணிற்கு தொடர்பு கொண்டான் அவன். அழைப்பு ஏற்க படவில்லை.
என் மீது கோபத்தில் இருக்கிறாளா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? அவனது மனம் குழம்பியது. அவள் இல்லாமல் தனியே அவன் அமர்ந்திருப்பதை காண விரும்பாமல் மலர்களும் தங்கள் தலையை தாழ்த்தி கொண்டன. தன்னை ஏதோ ஒரு வெறுமை ஆட்கொண்டதாய் உணர்ந்தான் அவன். இதுவரை அவளை தேடி அவளது விடுதிக்கு அவன் சென்றதில்லை. இன்று அவனால் அங்கு செல்லாமல் இருக்க முடியாது என்றே தோன்றியது அவனுக்கு.
அவனது வண்டியை அவளது விடுதி நோக்கி செலுத்தினான். அங்கே மாடியில் அவளின் தோழி மலர் நிற்பதை கண்டான். அவளை நோக்கி கையசைத்தான். அவளும் கை அசைத்தாள் புன்னகைத்தபடி. கீழே இறங்கி வர சொல்லி செய்கை காட்டினான். இறங்கி வந்தாள் அவள்.
“கவியரசி எங்கே சென்றுவிட்டாள் ? வழக்கமாய் நாங்கள் சந்திக்கும் பூங்காவில் அவளுக்காக காத்திருந்தேன். அவள் வரவில்லை. என் அழைப்பையும் ஏற்கவில்லை. என்ன ஆனது அவளுக்கு? “ என்றான்.
“உன்னிடம் அவள் சொல்லவில்லையா? அவள் அவசரமாக அவளது சொந்த ஊருக்கு சென்று இருக்கிறாள். உன்னிடம் சொல்லி இருப்பாள் என்றே எண்ணி இருந்தேன். காரணம் தெரியவில்லை” என்றாள்.
தன்னிடம் சொல்லாமல் அவள் எங்கும் சென்றதில்லை. இப்படி சென்றிருப்பது இதுவே முதல்முறை. அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது. வேதனையாகவும் இருந்தது. சிந்தனையில் மூழ்கியவாறே தனது வண்டியை தொடக்கி பயணித்தான்.
வண்டியை சரியாய் செலுத்தும் மன நிலையில் அவனில்லை. அவன் கைகள் தடுமாறியது. வழியில் பல முறை வண்டியை நிறுத்தினான். அவள் அழைத்திருக்கிறாளா அல்லது அவளிடம் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று அறிய கைப்பேசியை எடுத்து பார்த்தான்.
அழைப்பு எதும் வரவில்லை. விரக்தியுடன் வீட்டை அடைந்தான். வீட்டினுள் நுழைந்ததும் ஒரு முறை அவளது கைபேசி எண்ணீர்க்கு அழைப்பு விடுத்தான். பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் “வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை” என்றது. அவனது கவலை மேலும் அதிகரித்தது.
தனது கைப்பேசியை கட்டிலின் மீது வீசி எறிந்தான். கட்டிலில் சரிந்தான். பலமுறை அவனையும் மீறி அவந்து கை கைப்பேசியை எடுத்தது. அவனது விழிகள் எதையோ எதிர்பார்த்து எங்கும் குழந்தை போல அவளி டம் இருந்து வரும் குறுஞ்செய்தியை பார்ப்பதற்காக ஏங்கி இருந்தது.
அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். “எங்கே சென்றாய் ? ஏன் என்னிடம் பேசவில்லை ? “ என்று. இது அவன் அனுப்பும் பதினேழாவது குருஞ்செய்தி.
பல மணிநேர காத்திருப்பிற்கு பின் அவனது கைபேசி ஒலி எழுப்பியது. வேகமாய் அதை தான் கையில் எடுத்தான். அவளிடம் இருந்து தான் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. “அவசரமாக புறப்பட வேண்டியதாகி விட்டது.இங்கு தொடர்பு சரியாய் இல்லை. இரு முறை உன்னை அழைத்தேன். அழைப்பு செல்லவில்லை. இரண்டு நாட்களில் திரும்பி விடுவேன். மற்றவை நேரில் சொல்கிறேன்” என்றது அது.
அந்த இரு நாட்களும் அவன் அனுபவித்த வலிக்கு அளவே இல்லை. அவனுக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் அவன் மீது தென்றல் காற்றினை வீசி அவனை தேற்ற நினைத்தன அந்த பூங்காவின் மனிதர்களாகிய மரங்கள்.
இரண்டு நாட்கள் உருண்டோடியது அவனுக்கு யுகங்களை கடந்த உணர்வை தந்தது. அவளை காணும் நொடிக்காக அவனது உள்ளம் ஏங்கி இருந்தது. இதற்கு முன் அவள் பலமுறை அவளது ஊருக்கு சென்று இருக்கிறாள். இந்த முறை ஏனோ அவள் தன்னை விட்டு வெகு தூரம் சென்றதை போல் உணர்ந்தான் அவன். அவனது இதயம் கணத்தது.

இதோ அவளுக்காக காத்திருக்கிறான் மனதில் ஒரு குழந்தையை போல் அழுதபடி. பூங்காவின் கதவுகள் திறக்கின்ற ஒலி கேட்கும் போது எல்லாம் அவனது விழிகள் அந்த திசையை நோக்கி திரும்புகின்றன ஏக்கத்துடன்.
சில முறை திரும்பி பார்த்த அவனது கண்கள் அவள் இல்லை என்ற ஏமாற்றத்தால் சோர்ந்து விட்டிருந்தன. அவனது மனம் இனியும் ஒரு முறை ஏமாற விரும்பவில்லை. இப்போது கதவு திறக்கும் ஒலி அவனது செவிகளில் விழுந்திடவில்லை.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (22-Mar-15, 6:06 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 384

மேலே