செப்பலோசை - ஏந்திசைச் செப்பலோசை Dr VK Kanniappan

செப்பலோசை - ஏந்திசைச் செப்பலோசை

செப்பலோசையை அடிப்படையாகக் கொண்டது வெண்பா என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். அச்செப்பலோசை ஏந்திசைச் செப்பலோசை, தூங்கிசைச் செப்பலோசை, ஒழுகிசைச் செப்பலோசை என மூன்று வகைப்படும்.

ஏந்திசைச் செப்பலோசை:

வெண்பாவைப் பொருத்தவரை இன்னிசையை வழங்கக் கூடிய சீர் காய்ச்சீரே ஆகும். காய்ச்சீர் நேரசையால் (காய் முன் நேர் எனப்படும் - வெண்சீர் வெண்டளை) ஆரம்பிக்கும் அடுத்த சீருடன்தான் இணையும். முழுக்க முழுக்க வெண்சீர் வெண்டளையால் அமைந்த வெண்பா ஏந்திசைச் செப்பலோசை உடையது ஆகும். ஈற்றுசீர் கணக்கில் கொள்ளக்கூடாது. ஆதலால் ஈற்றுச்சீரொழிய ஏனைய 14 சீர்களும் வெண்சீர் வெண்டளை கொள்ளுமாயின் அவ்வெண்பாவின் ஓசை ஏந்திசைச் செப்பலோசை எனப்படும்.

ஏந்திசைச் செப்பலோசையுடைய வெண்பாக்கள்:

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

அந்தரத்தில் நிற்கிறாயே ஆற்றுக்குள் வீழ்ந்திடாதே
சந்திரனே விண்ணிலுந்தன் சாகசமோ ? - சிந்தைமகிழ்
புந்தியரும் பாடிடுவார் பொன்னிலவே உன்னழகை
வந்திடுவாய் கீழிறங்கி நீ! 1 - சியாமளா ராஜசேகர்

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

மேனிமுன்னை யாரைநறு வேளைமணித் தக்காளி
யானைநெருஞ் சின்முசுக்கை யப்பைநெடுங் – கானிலுறை
மூக்குறட்டை நல்வசலை முன்பிவைக ளிற்கீரை
யாக்குவர்வா யுத்தேகர்க் காய்ந்து. 1 - மருத்துவ வெண்பா

மந்திரங்கள் ஒன்றுமில்லை மாயங்கள் தானுமில்லை;
தந்திரங்கள் ஏதுமில்லை; தன்போக்கில் -எந்தநாளும்
முன்னிருக்கும் மேல்வானை மூழ்கடிக்கும் வண்ணத்தால்
என்னென்ன வோசெய்வ தார்? 2 - எசேக்கியல்

கற்றதுவோ ஏகமெனக் காட்டுவதற் கேதுமிலை!
பெற்றதமிழ் என்பிறப்பால் பெற்றதுவே! – உற்றயிந்த
நன்னிலையோ நற்பண்பு நண்பரினால்! வேறிங்கே
என்னிலையில் இல்லையுயர் வு! 3 – எசேக்கியல்

முத்தங்கள் தந்தாரோ மோகத்தால் பூவுனக்கு
சித்திரங்கள் தீட்டியதார் செவ்விதழால்? - நித்தமுமே
பூத்திடுவாய் வெண்பூவே போற்றிடுவேன் வெண்பாவால்
காத்திருப்பேன் நீமலர்வா யென்று! 4 - சியாமளா ராஜசேகர்

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் – பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றித் தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ! 5 - கீதா

இந்த வெண்பாவிற்கான விளக்கம்:

தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.

அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

முக்கியக் குறிப்பு:

கீதா என்பவர் வெண்பா எழுதும் முதல் முயற்சியிலேயே, நற்கருத்துடன் கூடிய முற்றிலும் காய்ச்சீர்கள் அமைந்த, ஏந்திசைச் செப்பலோசையுடைய இரு விகற்ப நேரிசை வெண்பா இயற்றியிருக்கிறார். போற்றத்தக்கது. இன்னும் முக்கியமாக ஈற்றடியின் ஈற்றுச்சீரில் ’தீ’ என்ற நெடில் ஓரெழுத்து நேரசையில் அமைத்திருக்கிறார்.

பல விகற்ப இன்னிசை வெண்பா

காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து
கல்லாகி போனோமே கண்திறந்து பாருமைய்யா
உள்ளாரும் செல்லாகி மண்மீது வீழும்முன்
நல்லாட்சி நல்கிடுவாய் நீ. 1 - வெங்கடாசலம் தர்மராஜன்

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லாம் நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா. 2 - உமா

சொந்தமான, பந்தமெல்லாம் என்றும், முதல் இரண்டடிகளில் , வந்திங்கே என்று தனிச்சொல் அமைந்திருந்தாலும், ஆறெல்லாம், ஊரெல்லாம் என்று மூன்றாம், நான்காம் அடிகளில் எதுகைகள் வேறு வேறாக அமைந்ததனால் இவ்வெண்பா இன்னிசை வெண்பாவாகிறது.

பட்டுப்போல் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள் - எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டுக் காணாதக் கால்! -அகரம்.அமுதா

இந்த வெண்பாவும் முன்னே சொல்லியது போல தனிச்சொல் அமைந்தும், என்னெழிலை, கண்கொண்டு என்று எதுகை வேறுபடுவதால் இன்னிசை வெண்பாவாகிறது.

செத்துவிடப் போகின்றாய் சேர்ந்தவர்கள் உன்னுடலை
மொய்த்துவிடப் போகின்றாய் மொய்த்தாலும் சற்றழுவார்
சுட்டுவிடப் போகின்றார் சூழ்நிலைக்குத் தக்கனவாய்
நட்டமென்ன வாழ்ந்துவிடு நன்கு! - புரட்சி தாசன்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

அத்திருமால் மாருதிக்கு ஆதர்ச நாயகனாம்
பித்தனைப்போல் இக்குரங்கும் பின்னால்தான் சென்றானாம்
முத்தமிழில் நானுமெந்தன் மூத்தவனைப் போற்றிடுவேன்
அத்திறனை ஆண்டவனே தா! - இலவசக் கொத்தனார்.

திருக்குறளிலும் சில ஏந்திசைச் செப்பலோசையுடன் அமைந்த குறட்பாக்கள் உள்ளன.

உதாரணம்:

யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. 397 கல்வி

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல்ல வர். 973 பெருமை
=================================================

பின் குறிப்பு: இது Dr. வ.க .கன்னியப்பன் அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/231577-ல் கருத்திடவும். (இங்கு கருத்து இட இயலாது

எழுதியவர் : Dr . வ.கே. கன்னியப்பன் (22-Mar-15, 7:29 pm)
பார்வை : 351

மேலே