வெண்கலிப்பா புகையின் தீமை DrVKKanniappan

வெண்கலிப்பா
------------------
சு.ஐயப்பன் என்ற கந்ததாசன் அவர்களின் ’புகைபுகைத்து போகாதே புகைந்து’ என்ற பாடலை ஆராய்ந்த பொழுது இப்பாடல் ’வெண்கலிப்பா’ என்றறிந்தேன். எனவே வெண்கலிப்பா பற்றியும், அவர் பாடலின் கருத்துக்கேற்ப அமைந்த மற்றொரு பாடலையும் விளக்கியிருக்கிறேன்.

வெண்பாவின் தன்மையும் கலிப்பாவின் தன்மையும் இணைந்தது கலிப்பா என்பதைப் புரிந்து கொள்ளலாம். கலித்தளைகள் அமைந்து கலியோசை கொண்டும், வெண்டளைகள் அமைந்து வெண்பா ஓசை கொண்டும் ஈற்றடி சிந்தடியாக, ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடிவது வெண்கலிப்பா எனப்படும்.

வெண்கலிப்பாவை வெண்கலிப்பா, கலிவெண்பா என இரண்டு வகைப்படுத்துகின்றனர் உரையாசிரியர்கள்.

வெண்கலிப்பா

கலித்தளையுடன் வெண்டளைகள் மற்றும் பிறதளைகள் சேர்ந்து ஈற்றடி சிந்தடியாய் வருவது வெண்கலிப்பா.

காய் முன் நிரை வருவது கலித்தளை ஆகும்.

உதாரணம்:

ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து. - (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இப்பாடலில் ஏர்மலர் - நறுங்கோதை; வார்மலர்த் - தடங்கண்ணார்; தார்வரை - அகன்மார்பன்; சீர்மலி - கொடியிடை; கொடியிடை - சிறந்த - என்னும் சீர் இணைப்புகளிடையே வருவது ஆசிரியத்தளை.

நறுங்கோதை - எருத்தலைப்ப; எருத்தலைப்ப - இறைஞ்சித்தண் போன்ற இணைப்புகளில் வருவது கலித்தளை.

வருந்தியவென் - தார்வரை போன்ற இணைப்புகளில் வருவது வெண்சீர் வெண்டளை.

புகைபுகைத்து போகாதே புகைந்து

புகையிலையை புகைக்காதே அதுவுனக்கு மெதுநஞ்சு
புகைத்துவிடும் புகையெல்லாம் பொதுநஞ்சாம் பிறர்க்குஎமன்
புகையிலைதான் எனினுமதை சுவைக்காதே யதுநமனே
புகைபுகைத்து போகாதே புகைந்து - சு.ஐயப்பன் என்ற கந்ததாசன்

புகைபுகைத்து போகாதே – வெண்சீர் வெண்டளை தவிர மற்ற இடங்களிலெல்லாம் காய் முன் நிரை வருவது கலித்தளைகள் ஆகும்.

இப்பாடலில் வெண்சீர் வெண்டளை இல்லாமல் அதுவும் கலித்தளையாக இருந்தால், இப்பாடல் கலிப்பா.

கலித்தளைகளுடன் வெண்சீர் வெண்டளை இருப்பதால் இப்பாடல் வெண்கலிப்பா ஆகும்.

கருத்து:

புகைக்காதே மெதுநஞ்சு
புகைவிடாதே பொதுநஞ்சு
புகையி(ல்) லை தான் என்றாலும் சுவைக்காதே யதுநமனே

நல்ல கருத்தமைந்த வெண்கலிப்பா இது என்று கருதுகிறேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, கந்ததாசன். எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சென்ற வாரம் ஒரு திருமண நிகழ்ச்சியில் 60 வயது நிறைந்த என் உறவினரைப் பார்த்தேன். பான் பராக் தொடர்ந்து போட்டதால் வாயில் புற்று நோய்.

மற்றொரு மருத்துவரின் மனைவி நுரையீரல் புற்று நோயால் இறந்தார். அவரது கணவர் புகைத்ததை சுவாசித்ததால் (Passive smoking), அவருக்கு புற்று நோய் வந்ததாம். புகையிலை எந்த விதத்திலும் ஆட்கொல்லிதான்.

வெண்கலிப்பாவை வெண்கலிப்பா, கலிவெண்பா என இரண்டு வகைப்படுத்துகின்றனர் உரையாசிரியர்கள்.

கலிவெண்பா

முழுமையும் வெண்டளைகளால் அமைந்து பல அடிகளால் வரும் பாவைக் கலிவெண்பா எனக் காட்டுகிறது காரிகை உரை. 'சுடர்தொடீஇ கேளாய்...' எனத்தொடங்கும் கலித்தொகைப் பாடலை உதாரணமாகக் காட்டுகிறது.

வெண்டளையால் அமைந்து பல அடிகளால் 5 அடி முதல் 12 அடி வரை வருவது பஃறொடை வெண்பா எனப்படும்.

அதற்குமேல் அடிகள் கொண்டு வருவது கலிவெண்பா என்று வேறுபடுத்துவர் சிலர்.

ஒரு பொருளைப் பற்றி மட்டும் சொல்வது கலிவெண்பா;
அவ்வாறு அல்லாதது பஃறொடை வெண்பா என்பது மற்றொரு வேறுபாடு.

என் தகப்பனார் அவர் கைப்பட சில நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு தாளின் இரண்டு பக்கமும் எழுதி வைத்திருந்தார்கள்.

அதில் ஒன்று:

பல விகற்ப இன்னிசை வெண்பா

'கண்புகையும் நெஞ்சுலருங் கைகால் அயர்ந்துவிடும்
வெண்புகையால் மேனிவெ ளுக்குமே - பண்பாய்கேள்
ஈரல் கருகிவரும் இந்திரியம் நஷ்டமாம்
பாழும் புகையிலையின் பண்பு' - தேரையர்

என்று என் தகப்பனாரும்,

சுருட்டு தீதாதல்

பல விகற்ப இன்னிசை வெண்பா

கண்புகையும் நெஞ்சுலரும் கைகால் அயர்ந்துவிடும்
வெண்புகையால் மேனி வெளுத்துவிடும் - திண்புகையால்
ஈரற் கருகிவிடும் இந்திரியம் நட்டமாம்
பாழும் புகையிலையின் பண்பு” - சிலேடை பாடிய [நயினை] நாகமணிப்புலவர்
என்றும் பண்டிதர் கொழும்பு மு ஆறுமுகன் சொல்கிறார்.

இதையே,

இரு விகற்ப நேரிசை வெண்பா

கண்புகையும் நெஞ்சுலரும் கைகால் அயர்ந்துவிடும்
வெண்புகையால் மேனி வெளுத்துவிடும் - திண்புகையால்
ஈரற் கருகிவிடும் இந்திரியம் நட்டமாம்
பாரில் புகையிலையின் பண்பு.

- வ.க.கன்னியப்பன்

கருத்து:

முதல் இரண்டடிகளில் ஒரு எதுகையும், தனிச்சொல்லும் அமைத்து, 3, 4 ஆம் அடிகளில் வேறு வேறு எதுகைகள் புலவர்கள் அமைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. புகையிலையின் கொடுமையான தீமைகளைக் காட்ட பாழும் என்று பின் வந்தவர்கள் மாற்றியிருப்பார்கள் என்றெண்ணி, பாரில் என்றமைத்து 'இரு விகற்ப நேரிசை வெண்பா' வாக ஆக்கியிருக்கிறேன்.

பின் குறிப்பு: இது Dr. வ.க .கன்னியப்பன் அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/238037-ல் கருத்திடவும். (இங்கு கருத்து இட இயலாது )

எழுதியவர் : Dr . வ.கே. கன்னியப்பன் (21-Mar-15, 8:27 pm)
பார்வை : 266

சிறந்த கட்டுரைகள்

மேலே