எங்க ஊரு பண்ணையாரு -Mano Red

வெறும் பேருக்கும்,
எங்க ஊருக்கும்,
அவரு தான் பெரியாளு,
சந்தனத்த நெஞ்சுல பூசி
சாக்கடை வாசம் வீசுவாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!

சீமையில இருந்து
சில்லுனு வந்தாரு ,
சிலுக்கு சட்ட போட்டு
கிளுக்குன்னு சிரிச்சாரு,
உதவின்னு கேட்டா போதும்
ஊர விட்டே ஓடுவாரு,
காஞ்சு போன கையால
காக்கா வெரட்ட மாட்டாரு . !!

பொத்தாம் பொது அடயாளமா
வெக்கங்கெட்ட அவுகளுக்கு
எட்டு மொழத்துல
வெள்ளை வேட்டியும்,
மானங்கெட்ட அவுகளுக்கு
மஞ்ச பூசுன
ரெண்டு மைனர் துண்டும்..!!

தலையாரி அவரு தான்,
தர்மகர்த்தா அவரு தான்
கோயிலுக்கு போனா
மசமசன்னு நிக்காம
மால மரியாதையெல்லாம்
வெரசா வாங்குவாரு,
தறுதலை அவரு தான்
நியாய தர்மம் பேசுவாரு .!

துப்புகெட்ட மனுசன் அவரு
பொட்டலத்து வெத்தலைல
பொகையிலை மடிச்சு வச்ச
பொழிச்சுன்னு துப்புவாரு,
கொஞ்சமா பேசுனாலும்
பொய்யாத்தான் பேசுவாரு ..!!

ரோடு போட்ட காசுலதான்
நாலு வீடு போட்டாரு,
கெணறு வெட்ட
யோசன சொல்லி
காரு வாங்கி வந்தாரு,
இனிக்க இனிக்க பேசியே
இளிச்சவாயன் ஆக்குனாரு..!!

மாடா உழச்சு
ஓடாப் போனாலும்
கூலி கூட்டித் தர மாட்டாரு,
வேலி நாங்க
சொந்த பயிர மேஞ்சாலும்,
மயிராத்தான் பேசுவாரு,.!

பொழப்பு கேட்டு நாங்க போனா
வாழ்க்க தேர இழுத்து
நடுத்தெருவுல விடுவாரு..!!
வெளஞ்ச எல்லாத்தையும்
அம்சமா அமுக்கி வச்சு
ஏழை வயித்துல அடிப்பாரு !
ஆனா அவரு மட்டும்
குளுகுளு அறையில
கும்மாளம் அடிப்பாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!

எழுதியவர் : மனோ ரெட் (24-Mar-15, 11:34 am)
பார்வை : 97

மேலே