யுகம் தாண்டும் சிறகுகள் 8

எனது முதல் கவிதை எது?.. சத்தியமாக ஞாபகமில்லை. நான் எப்போது எழுதத்தொடங்கினேன் என்பதும் நினைவில்லை. எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எழுதிக் குவித்ததுமில்லை. சில சமயங்களில் கவிதை என நினைக்கும் ஒன்றை எழுதி முடித்து மறுவாசிப்பு செய்யும்போது உலகிலேயே மிகவும் மோசமான கவிஞன் நான் தான் என்ற எண்ணம் தோன்றும். கடுகைப்பிளந்து கடலைப்புகட்டும் முயற்சியில், இருந்த ஒரு கடுகையும் இரண்டாக பிளந்துவிட்டோமே என்ற கவலை மட்டுமே மீள்ந்திருக்கும். நான் எழுதியது எனக்கே அந்நியமாய் தோன்றும். முக்கோண மூக்குள்ள வேற்றுகிரகவாசியொன்று அவசரத்தில் அரைகுறையாய் கிறுக்கி விட்டு சென்றதைப்போல் அந்த கவிதை தோற்றமளிக்கும். இருந்தாலும் பரவாயில்லை என்று அதற்கு சிறகு பொருத்தி பறக்கவிட்டு விடுவேன். அருவிகள் வறண்ட ஒரு நிழலற்ற வனப்பிரதேசத்தை கடந்து செல்லும் போது அது அழகாயிருந்ததாக பார்த்தவர்கள் சொல்வார்கள். இரு கண்களையும் அகல விரித்து அவர்களை ஏமாற்றி விட்டு கன்னத்தில் கைவத்து உட்கார்ந்து கொள்வேன். பொருத்த மறந்திருந்த சிறகுகள் அடுத்த பறவைக்காக காத்திருக்கும்.

"பிடுங்கப்பட்ட இறகுகளில்,
மிஞ்சிய பறவைகளை,
புதைக்க வேண்டும்.
தோண்டுகிறேன்.”

விமர்சனம் ஒரு விசித்திர பிராணி. அதற்கு ஐந்து கால்கள் உண்டு, நகங்கள் கிடையாது.ஒரு வாய்க்குள் பத்து நாக்குகள். கண்களும் தலைகீழ்தான்.
ஒரு தேர்ந்த பெருச்சாளியை போல எல்லாவற்றையும் சுரண்டிப் பார்க்கும். அடுத்தவன் தோட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் வரை பலருக்கும் சிலாக்கியம்தான். நல்ல பெருச்சாளி. தப்பித்தவறி தனது பக்கம் திரும்பினால் குட்டியை தொலைத்து விட்ட டைனோசரைப் போல காட்சியளிக்கும். நானும் எப்போதாவது பாதை மாறிய டைனோசர் ஒன்று எனது தோட்டத்தின் பக்கம் வரலாம் என்று கதவை திறந்தேதான் வைத்திருந்தேன். ஒரு பெருச்சாளி கூட வரவில்லை. நானே டைனோசராக மாறவேண்டிய காலத்தின் கட்டாயம் வந்த போது தோட்டத்தை காணவில்லை.

"நல்லதோர் விடியல் வேண்டி
நடுசாமம் என்று அறியாமல்,
நாசி நெறித்து கூவுகிறது,
யாரையும் எழுப்பாத சேவலொன்று."

லட்சுமியிடம் எத்தனை சிவப்பு கவுன் இருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது, எல்லா நாளும் சிவப்பு கவுன்தான் அணிந்திருப்பாள். கவுன் என்றால் நீங்கள் நினைப்பது போல கொசுவலைத்துணியை சுருள் சுருளாகத் தைத்து கணிசமாக ஜிகினா ஊசி குத்திய ரகம் இல்லை. மோட்டாத்துணியில் பனியனையும் பாவாடையையும் சேர்த்து தைத்தது போலிருக்குமே அதுதான். எப்போதும் சிரித்தபடியே இருப்பாள் லட்சுமி. அடிக்கடி சிலேட்டில் அவளுடைய பெயரை எழுதி காண்பிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பாள். அவளுடைய திண்ணைச்சுவற்றில் தென்னை மரத்தையோ, ஒட்டு வீட்டையோ, அதற்கு மேல் உதிக்கும் சூரியனையோ, சூரியனைவிட பெரிதாக இருக்கும் கோட்டோவிய பறவைகளையோ பார்க்க முடியாது. அஷ்ட கோணலாக வளைந்திருக்கும் “அ”னாவையும் , திசைமாற்றி சுழிக்கப்பட்ட "ஆ”வன்னாவையும் மட்டும்தான் காணமுடியும். மற்ற எழுத்துக்கள் அனைத்தும் அடுக்கு அடுக்காக கிடக்கும் வேட்டுத்திரி கட்டுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும். அந்த எழுத்துகளை பார்ப்பதற்காகத்தான் லட்சுமி அத்தனை வேகமாக திரி சுற்றுகிறாளோ என்று கூட சிலசமயம் தோன்றும். எத்தனை வேகமாக சுற்றியும் கட்டுகளும் தீரவில்லை, எழுத்துகளும் தெரியவில்லை.

"வேட்டு ஒரு பாக்கெட்டு
விலை ஆயிரம் ரூவாண்ணே.
நோட்டு புஸ்தகம் பேனா
வெறும் அம்பது ரூவாண்ணே.”

திங்களின் கிரணங்கள் தங்கமாய்ப் பொழியும் ஓர் அந்திப் பொழுதில் வானவில்லை துவைத்து செய்த சல்வாரின் மீது மேகத்தை உருவி துப்பட்டாவாக அணிந்து கொண்டு தகிக்கும் தார்ச்சாலைக்கு தாகசாந்தி தருவது போல சிரிப்பை சிந்தியபடி தனது ஸ்கூட்டி பின் சீட்டில் எனது பிறவிப்பயனை கட்டி இழுத்துச் சென்ற ஒரு தேவதையைப் பார்த்த தருணத்தில், சடாரென்று பிரசன்னமான சரஸ்வதி தேவி, தனது இரண்டாவது வலது கையில் இருந்து ஒரு லேசர் கற்றையை பாய்ச்சி எனது கையில் ஒரு எழுத்தாணியை தருவித்து, இன்றிலிருந்து நீ கவிஞனாக அறியப்படுவாய் என வரமளித்து சென்ற பிறகு கையை கட்டிப்போட முடியுமா?

"உன்
இருவிழிக்குளிர் படும்,
இமைநிழல் பகுதியில்,
இடம் பிடிக்க கடும் போர்,
இடி, மின்னல், மழைகளிடையே.”

வானும் நிலவுமற்ற இரவுப்பொழுதில் தூக்கமும் அற்றுப்போன கணத்தில் கனவுக்குள் தொலைந்ததாக நினைவு. நினைவு தோன்றிய இடத்தில் எதையோ நோக்கிய பயணத்தில் ஒட்டம். என்னைச்சுற்றிலும் என்னைப்போலவே என்னைத் துரத்திக்கொண்டு பலர். ஓடும் வெளி விரிவடைய விரிவடைய ஒடுபவர்கள் அதிகரித்து ஓடும் வெளி சுருங்குகிறது. திசையறியா பயணத்தின் பாதைகள் வட்டமாகவே இருப்பினும் பாதை இருக்கும் வரை கால்கள் அயர்வதில்லை.கால்கள் அயரும்போது பாதையும் முடிகிறது. பாதை முடிந்த இடத்தில் நின்று நிமிர்ந்து பார்க்கையில் வானும் இல்லை நிலவும் இல்லை ஒளியும் இல்லை.

"எனக்கான தேடல்களனைத்திலும்,
தேடுபவனாகவும், தேடும் பொருளாகவும்
நானே இருப்பதால்,
நான் காணும் முதுகுகள்,
எனதாகவே இருக்கின்றன.”

ஒரு கவிதையின் தீவிரம் என்பது அதை நாம் மேலோட்டமாக பார்க்கும்போது எத்தனை வேகத்தில் நம் மண்டையில் உரைக்கிறது என்பதில் அல்ல. அதை வாசிக்கும் போது, அதன் வரிகள் நம்மை எடுத்துச் செல்லும் பயணத்தில், அதன் மொழி நமக்குள் ஏற்படுத்தும் கிளர்ச்சியில், பழைய ரணங்களுக்கு களிம்பிட்டோ, புதிய ரணங்களுக்கு உரமிட்டோ செல்வதில் தான் இருக்கிறது. எனது எழுத்தின் ஆதி மறந்து போனதால் எப்போது எழுத உட்கார்ந்தாலும் அப்போது புதிதாய் தொடங்குவதாகவே உணர்கிறேன். இந்தக்கட்டுரையில் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள எனது சிறகுகள் யுகங்கள் தாண்டுவது சந்தேகமே, இருந்தாலும் அவற்றை கூண்டுக்குள் அடைக்காமல் பறக்க விட்டுவிட்ட நிறைவே எனக்கு போதுமானதாக இருக்கிறது.

வாய்ப்பு கிடைப்பின் இதே களத்தில் என்னை பாதித்த பல கவிதைகளைப் பற்றி, படைப்பாளிகளைப் பற்றி தொடர்ந்து பேசலாம் நண்பர்களே.

(எனக்கு எழுத வாய்ப்பளித்து, நான் அநியாத்துக்கு காலதாமதப்படுத்தியும் பொறுமையாய் இருந்து என்னை எழுத ஊக்கப்படுத்திய தோழர் கவிதாசபாபதிக்கு நன்றிகள்)

எழுதியவர் : ஈ.ரா. (24-Mar-15, 6:22 pm)
பார்வை : 191

மேலே