கொஞ்சும் மழலை

நெஞ்செல்லாம் நெருங்கி வரும் நேசம்
கொஞ்சு மொழிப் பிஞ்சினில் அன்பு
மிஞ்சுகின்ற செவ்விதழின் சிரிப்பு
பஞ்சல்ல பட்டுடலின் மென்மை
கெஞ்சுதம்மா கொஞ்சுதற்கு உறவு
மெத்தென்ற மலர் தானோ பாதம்
முத்துமணி ரத்தினமோ கண்கள்
சத்தமின்றி ஓசை தரும் இதழ்கள்
இத்தனையும் முத்தமிடத் தந்தனவோ
தொட்டு விட தொட்டுவிட துடிக்கும் உறவு
தன் மடியில் தரக் கேட் கும் அண்ணன்
பட்டு மேனி பார்த்து மகிழும் தங்கை
பரவசமாய் பாடி வரும் தந்தை
மழலை என்றால் மடி நிறையும் மனம் நிறையும்
தவழ்ந்து வரும் போது தாவி அணைத்திட
பாசமுள்ள உறவுகள் ஓடி வரும்
கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும்
குவிந்து வரும் மழலை இன்பம் போல் வருமா
மனசெல்லாம் இலேசாகி மழலையின் வசமாகி
மகிழ்ச்சி பொங்க மலர்ந்து நிற்போம்
மழலை என்னும் மாசற்ற ஓவியத்தால்
சின்ன சின்ன அடி எடுத்து சித்திரம் போல்
நடந்துவர செம்பவள வாயில் சிரிப்பு ஒன்றும் தவழ்ந்து வர
சித்திரமே உன்னை சிரிக்கவைக்க அம்மாவும் அப்பாவும்
அண்ணன் தங்கை அனைவருமே
ஆவலுடன் காத்து நிற்போம்
மனமெல்லாம் நிறைந்திடும் உந்தன் மழலை சிரிப்பாலே