இது விழி ஆகாரம்2 - சந்தோஷ்
விழி ஆகாரம்..
காதல் பசியில்
செரிக்கும் கவிதைகள்
----------------------------------------
கடந்துப்போன நிழற்களையெல்லாம்
தின்று செழித்துக்கொண்டிருக்கும்
எனது கவிதைகளை
எண்ண நதிகளில்
நினைவுப்பரிசல்களில் நீந்தவிடுகிறேன்.
இவைகள் செல்லட்டும்...
எங்கேனும் செல்லட்டும்
எந்த ஒரு முதிர்கன்னியின் விழிகளில்
கிறக்கத்துடனோ
இரக்கத்துடனோ
வாசிக்கப்படுமாயின்
எந்தன் எழுத்துக்கள்
அக்கன்னியின் கழுத்தில்
தாலியை கட்டிக்கொள்ளட்டும். அந்த
அங்கீகாரத்தில் என் கவிதை
திருமணப்பரிசும் பெற்று தொலையட்டும்.
இனியெந்த கவிதையிலும்
எந்தன் பெயர் வேண்டாம்.
இனியெந்த கவிதையிலும்
அவளும் கருவாக வேண்டாம்.
எத்தனைமுறைதான்
அவளின் நினைவுவிந்துவினால்
இறந்த காதலை
கர்ப்பமாக்கிக்கொண்டிருக்க முடியும்?
சிசுக்கொலைகள் சட்டப்படி தவறு.
கவிதையின்படியும் தவறு.
இவ்வாறுதான், இவ்வாறே தான்
முடிவெடுத்து, முடிவெடுத்து
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
வெற்றிகரமான ஒரு கவிஞனாக..!
வெள்ளை நீரோடையில்
சுழுலும் கருமுழிகளுடைய
அவள்.. எந்நேரமும்
புகைப்படமாய்... புகையாய்
என் நுரையீரையும்
என் மூளையையும்
புற்றுநோயை விட
கொடியதாக தாக்குகிறாள்.
வேதனைத்தனலில் நானெது
காதல் கொதிப்பின்
குருதி உமிழும் கொடுமையாக
கவிதை கவிதை கவிதை
என்று எழுதி எழுதி
நசுங்கிய காதல்நரம்புகளை
அறுத்துக்கொண்டே இருக்கிறேன்.
அறுந்தநரம்புகளால் என்றேனும்
மரணம் வந்துவிடாதா.......?
இப்படி பேசினாலும்
கோழை என்று கொக்கரிக்கும்
உலகில் ஏன் காதலென்று
ஒன்று வந்து தொலைந்தது.. ?
காதல்.........இனிது மட்டுமல்ல
மிகக் கொடியதும் கூட..
நேசிப்பில் கூடக்கூடிய மனங்கள்
கசப்பில் கூடுகள் எரித்து
ஒன்று சேராவிட்டால்..!
---
-இரா.சந்தோஷ் குமார்.