ஆலமரத்து நிழல் எங்கே

என் ஊருக்கு நான் வந்து எத்தனை நாள் ஆனதோ
மனதில் கணக்கு ஏதும் வைத்திருக்கவில்லை நான்
பேருந்தை விட்டு இறங்கி நடக்க தொடங்கினேன்

இரண்டு மைல் தொலைவு நடந்திருப்பேன்
தாகத்தால் வறண்டு போன நாக்கு
தண்ணீரின் துணையை தேடியது

இன்னும் சில தொலைவு நடந்தால் போதும்
கந்தசாமி அண்ணனின் தேநீர் கடை வந்துவிடும்
தாகத்தோடு பசியையும் தீர்த்து விடும்
அவர் கையால் போட்டு தரும் தேநீர்

குளிர்ந்த காற்றோடு நிழலையும் தந்துவிடும்
பிரம்மாண்டமான ஆலமரம்
அதனருகே சிறிதாய் இருக்கும் அவர் கடை

ஜாதி மத பேதமின்றி நிழலை தரும் அந்த மரத்தடியில்
சில மணி துளிகள் அமர்ந்தால் போதும்
தாயின் மடியில் படுத்து உறங்கிய உணர்வு நெஞ்சோடு எழும்

உத்வேகத்தோடு நடப்பதை தொடர்ந்தேன் நான்
சற்று தொலைவில் அந்த கடையின் பலகை தெரிந்த போது
என் உத்வேகம் குறைந்து மனம் வாட தொடங்கியது

கந்தசாமி தேநீர் கடை.. கந்தசாமி டீ ஸ்டால் ஆகி இருந்தது
செயற்கை கூரைக்கு கீழ் நாற்காலிகள் வரிசையாய் இருந்தன

ஆனால்,
குழந்தைகளாய் எங்களை எண்ணி
கைகளாய் தன் கிளைகளை விரித்து
பாசத்தோடு நிழல் தந்த ஆலமரம் அங்கில்லை...

தேநீர் குடித்து விட்டு நடந்த என்னுள்
கேள்வி மட்டுமே நிறைந்திருந்தது
நான் அதிகம் நேசித்த அந்த ஆலமரத்து நிழல் எங்கே.......

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (28-Mar-15, 8:46 pm)
பார்வை : 98

மேலே