கனவே கலைந்து போ பாகம்- 10 துப்பறியும் திகில் தொடர்பலவீன மனதுள்ளோர் படிக்க வேண்டாம்

முன் கதைச் சுருக்கம்
பிரசாத் நந்தினி மீதான கொலை முயற்சியை பார்க்கிறான். நந்தினி அதை மறுக்கிறாள்.....
................................................................................................................................................................................................
அதிகாலை சூரியன் கோபி மஞ்சூரியன் நிறத்தில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
பிரசாத் படுத்திருந்தது மேன்சன் தண்ணீர் தொட்டி மேல்.
நேற்றிரவு என்ன நடந்தது ? நேற்று காலை என்ன நடந்தது ?
“ டேய், மச்சி போலிஸ் கான்ஸ்டபிள் உன்னைத் தேடி வந்திருக்கார் ! ” ரூம்மேட் பாலா அறிவித்தான்.
கீழே இறங்கினான்.
“ இன்ஸ்பெக்டர் மூர்த்தி உங்களை கையோடு கூட்டி வரச் சொன்னார் ”
சற்று நேரத்தில் கான்ஸ்டபிளோடு புறப்பட்டான்.
தடயவியல் துறை அலுவலக முன்னறை போலிஸ் பட்டாளத்தால் நிரம்பி இருந்தது.
“ வாங்க பிரசாத்! கன்னிகாபுரம்னதும் டிஸ்பி முரளி சார் உங்களைப் பற்றி நிறைய சொல்லி கான்டாக்ட் பண்ணச் சொன்னார்.” வரவேற்றார் மூர்த்தி. “ பாவம், அந்த சின்னப் பொண்ணு! ரோஸ் மேரிதானே பேரு? டாக்டருங்களால செய்ய முடிஞ்சது அவளை நிம்மதியாக்கி சாக விட்டதுதான். டாக்டர் மேகலா நல்லா நேக்கு தெரிஞ்சவங்க ! ”
பதட்டம் தணிந்து பிரசாத் அந்த சூழ்நிலைக்குப் பழகிய பின், மெதுவாக கேட்டார்;
“இந்த சடலத்தை அடையாளம் காட்ட முடியுமா? ”
“ ஓ....... ! ! ஓவ்வ்..... ! ஓ..................... ! ஓஓ ! ! ! ”
வெள்ளைத் துணி எடுக்கப்பட்டதும் சடலத்தை பார்த்த பிரசாத் வீரிட்டு கத்தி ஓட முயன்றான். இருவர் இரு பக்கம் பிடித்துக் கொண்டனர்.
பெண் பிணம்! நந்தினியை ஒத்த பெண் பிணம்! தலை இருக்க வேண்டிய இடத்தில் ரத்தமும் சதைத் துணுக்குகளும்... ! ! சிதறலாக இருந்தது !!
பிரசாத் ஆசுவாசமானதும் இன்ஸ்பெக்டர் தனது கடமைக்கு வந்தார்.
“கன்னிகாபுரத்துக்கும் ப்ரியம் அபார்ட்மெண்ட்டுக்கும் இடையில இருக்கிற ரயில்வே ட்ராக்குல கிடைச்ச சடலம் இது. கொலைகாரன் ஏதோ மயக்க ஊசி போட்டுருக்கான். மயக்கம் தெளிஞ்சப்புறம் மல்லாக்க படுக்க வச்சு ரெண்டு கையையும் முகத்துல எடுத்து வச்சு பாறாங்கல்லை தூக்கி முகத்துல ஒரே போடா போட்டுருக்கான்!! கையுறை போட்டிருக்கான்! ஒரு கைரேகையும் கிடைக்கல! தோள் பட்டையை பிடிச்சி அழுத்தின அடையாளம் இருக்கு, உடம்புல நகைங்க, பர்சுல பணம் இருக்கு; மற்றபடிக்கு திருட்டு, வன்புணர்ச்சி எதுவுமில்ல ! ”
பிரசாத் கொடூரம் தாங்காமல் கண்களை மூடி அரற்றினான்.
“ இது...இது...இது.. நந்தினியாகவும் இருக்கலாம்;; நந்தினியோட தங்கை வினோதினியாகவும் இருக்கலாம்;; ” மெதுவாகச் சொன்னான்.
“ எப்படி சொல்றீங்க? ”
“ சார், நேத்து வெள்ளிக்கிழமை. நந்தினிக்கு லீவ். நந்தினி நேத்து ராத்திரி எனக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னாங்க. நான் எட்டு மணிக்கு ப்ரியம் அபார்ட்மெண்ட் போனேன். நந்தினியை பார்த்தேன். அவங்களுக்கு வினோதினின்னு தங்கை உண்டு. நந்தினியும் வினோதினியும் இரட்டைப் பிள்ளைங்க. ரெண்டு பேரும் மூணு மணி நேர வித்தியாசத்துல பிறந்தவங்க. தங்கச்சி சின்ன வயசுல ராமேஸ்வரம் கடல்ல மூழ்கி செத்துட்டதா வதந்தி. “தங்கச்சி சாகல. கோவாவுல இருக்கா ; இன்னைக்கு என்னைப் பார்க்க வரப் போறா”-ன்னு சொன்னாங்க நந்தினி. தங்கச்சிய பட்டினப்பாக்கம் பஸ் ஸ்டாண்டு போய் அழைச்சிட்டு வரணும்னாங்க. நானும் அவங்களும் ஆட்டோ வச்சி போனோம்... நான் ஹோட்டல் குருபிரசாத் கிட்ட இறங்கிட்டேன். சார், நந்தினி ரொம்ப ஃப்ரண்ட்லி. அந்த அபார்மெண்ட்ட வாங்கினதுதான் அவங்களுக்கு பிரச்சினையா விடிஞ்சிருக்கும் ! இல்லாட்டி இவ்வளவு கொடூரமா கொலை செய்ற அளவுக்கு அவங்களுக்கு எதிரிங்க கிடையாது.. ! !!”
சொல்லி விட்டு தலையில் அடித்துக் கொண்டான் பிரசாத். மூச்சு வாங்கினான். அவன் பேச்சை டேப்பில் பதிவு செய்தார் இன்ஸ்பெக்டர்.
பிரசாத்தை உள்ளே உட்கார சொல்லி விட்டு அடுத்து இன்ஸ்பெக்டர் விசாரித்தது ஆட்டோ டிரைவரை.
“ இந்த போட்டோவை பார்; இவங்க உன்னோட ஆட்டோவில ஏறுனாங்களா? ”
“ ஆமா சார். ப்ரியம் அபார்ட்மெண்ட் கிட்ட ஏறுனாங்க... ”
“ இவங்க மட்டும் தனியாவா? ”
“ இ...இல்ல சார், ஒரு சாரும் ஏறுனாரு”
“ உள்ள உட்கார்ந்திருக்காரே அவரா? ”
“ ஆ...ஆமா சார். தங்கச்சிய கூட்டிட்டு வரணும்னாங்க. சார் ஹோட்டல் குருபிரசாத் கிட்ட இறங்கிட்டார். அந்தம்மாவை பட்டினப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டுல இறக்கி உட்டேன். ”
“ இவங்களப் பார்க்க வேற யாராவது வந்தாங்களா? ”
“ யாரும் வரல்ல சார், ஆங். ஒரு பொம்பளை வந்தாங்க. நந்தினியம்மாவோட ரசிகையாம். நந்தினியம்மாவ கட்டிப் பிடிச்சி அணைச்சுக்காத குறையா அவங்க இறக்கி விட்டாங்க. ஆட்டோ காசும் அவங்கதான் கொடுத்தாங்க. அப்புறம் நான் போயிட்டேன் சார்.”
ஒரு சப் இன்ஸ்பெக்டர் பட்டினப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து வந்தார். ஆட்டோகாரரை அனுப்பி விட்டு இரண்டு பேரும் பேசிக் கொண்டனர்.
“ இந்த ஆட்டோவாலா சொல்றது சரிதான். நான் விசாரிச்ச வரைக்கும் பட்டினப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில கால்மணி நேரமா அந்த பொம்பளையும் நந்தினியும் நின்னுட்டு இருந்திருக்காங்க. அப்புறம் பஸ்ஸேறி டூமிங்குப்பத்து ஸ்டாப்பிங்ல இறங்கி இருக்காங்க. ”
“ அப்ப தங்கச்சி அங்க வரல்ல? ”
“ஏன் சார், இந்த காலத்துல மொபைல் போன் வச்சுக்காத பொண்ணும் இருப்பாளா? ”
“ வச்சிட்டிருந்திருப்பா... திருடு போயிருந்தா? ”
“ ராத்திரி எட்டு மணிக்கு ப்ரியம் அபார்ட்மெண்ட்டை விட்டு கிளம்பி இருக்காங்க. ஒன்பது மணிக்கு டூமிங் குப்பத்துல இறங்கி இருக்காங்க. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி மரணம் ராத்திரி ஒன்பதரையிலிருந்து பத்துக்குள்ள. ஒன்பது டு ஒன்பதரை என்ன ஆச்சு? ”
“ அதான் தெரியல! ”
“ நந்தினி லோகல் பொண்ணு; சின்னத்திரை நடிகை வேற. பத்துக்கு ரெண்டு பேருக்காவது அவங்களைத் தெரியும்; கூட வந்த பொம்பளையை எந்த அடையாளம் வச்சு எங்க போய்த் தேடுறது? ”
“ பிரசாத் சொல்றதும் லாஜிக்தான். சடலத்து கிட்ட சூட்கேஸ் கிடந்தது! கொலையானது நந்தினின்னா கைப்பை தானே கிடைக்கணும்? லோகல்ல இருக்கற பொண்ணுங்க சூட்கேஸ் தூக்கிட்டு அலைய மாட்டாங்களே? ”
“ நந்தினி தங்கச்சிய தேடி பஸ் ஸ்டாண்ட் போயிருக்கணும்; தங்கச்சி ரயில்வே டிராக் வழியா வீட்டுக்கு வந்திருக்கணும். அப்ப எவனோ போட்டுத் தள்ளியிருக்கணும்.! ”
“அந்த மயக்க ஊசி போட்டா நிமிஷத்துல மயங்கிடுவாங்களாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொன்னிருக்காங்க. இவ்வளவு நேரம் அந்தப் பொண்ணு ரயில்வே டிராக்ட்ல விழுந்து கிடந்தா துணிமணி தூசி படிஞ்சு போயிருக்குமே? அப்படி எதுவும் இல்லையே? அப்ப அவ எங்க இருந்தா? ஏன் அவளை உடனே கொல்லலே? ”
“சார், இப்படி இருக்கலாமோ? இந்தப் பொண்ணு ப்ரியம் அபார்ட்மெண்ட்டுக்குப் போயிருக்கணும். அந்த அரை குறை கட்டடத்துல இருந்துகிட்டு அக்காவுக்காக வெயிட் பண்ணியிருக்கணும். அப்பத்தான் யாரோ மயக்க ஊசி போட்டிருக்கணும். அதுக்குள்ள ஏதோ ஆள் நடமாட்டம் இல்லே ஏதோ இடைஞ்சல்.. கொலைகாரன் ஓடிப் போயிருக்கணும். பிற்பாடு பொண்ணை தூக்கிட்டு வந்து கொலை பண்ணியிருக்கணும்...! ”
“ ஏன்யா ஒரு அழகான பொண்ணை கொலை பண்ண ஆயிரத்தெட்டு வழி ! வெறும் கையாலே கழுத்தை நெரிச்சா இவ சாக மாட்டேன்னா சொல்றா? எதுக்கு அவ்வளவு கொடூரமா கொலை பண்ணனும்? ”
“சார், செத்தது நந்தினி இல்லேன்னு இன்னொரு விதமாயும் சொல்லலாம். மயக்க ஊசி போட்டா மயக்கமாயிடுவாங்க. ஆனா நந்தினி வழி முழுக்க பேசிட்டு வந்திருக்காங்க. பிரசாத் கூட, அப்புறம் அந்த ரசிகை கூட.... அப்புறம் சார். செத்தது வினோதினின்னா நந்தினி எங்கே? ”
“ அந்த கதையும் இருக்கே! பிரசாத்தை கூப்பிடுங்க! ”
இன்னொரு சடலமும் அங்கிருந்தது. தூங்குகிற பாவனையில் உடம்பில் ஒரு கீறல் கூட விழாமல்..... நந்தினி ! ! ! ! ! !
“சார்ர்ர்ர்! ” பிரசாத் அலறினான். “ எனக்கு யாரைப் பார்த்தாலும் நந்தினியாவே தெரியுது! ”
“ இல்லல்ல... அது நந்தினி மாதிரிதான் இருக்கு! இந்தம்மா காந்தி நகர்ல ஆட்டோ பிடிச்சிருக்காங்க. கோடம்பாக்கம் போகச் சொல்லியிருக்காங்க. கோடம்பாக்கம் வந்ததும் அடுத்து எங்க போகணும்னு ஆட்டோக்காரன் கேட்டிருக்கான். பதில் வரல்ல. ஆட்டோவை நிறுத்திட்டு இறங்கிப் பார்த்திருக்கான். இந்தம்மா பேச்சு மூச்சில்லாம கெடக்கவும் எங்களுக்கு கால் பண்ணிட்டான். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி இவங்க செத்தது நேத்து அதாவது ஆகஸ்டு இருபதாம் தேதி அதிகாலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள்ள...! பொண்ணு போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கா..கழுத்துல தாலி இருக்கு; ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கா.... சடலம் கிடைச்ச நேரமும் இடமும் தற்கொலையை விட கொலைக்குத்தான் வாய்ப்பு அதிகமாக்குது... ”
“ அப்ப அது கண்டிப்பா நந்தினி இல்ல சார் ” - திட்டவட்டமாக பதில் வந்தது பிரசாத்திடமிருந்து ! ! !! ! !!
“ எப்படி சொல்றீங்க? ”
“ நந்தினிக்கு போதைப் பழக்கம் கிடையாது. போதை மருந்துப் பழக்கம் இருக்கறவங்க எப்படி நடந்துப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா எனக்கு அந்தப் பழக்கம் இருந்தது. நந்தினி கல்யாணம் ஆகாதவங்க. கல்யாணத்தை வெறுக்கறவங்க; அன்னைக்கு அவங்க பேசும் போது மாப்பிள்ளையை பரண்ல வைக்க முடியாதுன்னாங்க. ஆம்பளைங்களோட அந்தரங்க நெருக்கம் இல்லாதவங்கதான் இப்படியெல்லாம் யோசிச்சு பேச முடியும் ! இந்த சடலம் நந்தினியோடது இல்ல! ”
“அதாவது பிரசாத்.. பொண்ணுங்க சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணா இருக்கும்... ”
அதற்குள் அங்கு வந்தார் தடயவியல் நிபுணர் டாக்டர் மேனகா.
“அந்த யங்மேன் சொல்றது சரி. நந்தினியோட ஆபிஸ்ல கிடைச்ச கைரேகை, கண் ரேகை இதெல்லாம் இந்த சடலத்தோட ஒத்துப் போகல. அதனால இது நந்தினி இல்ல ! ”
“அப்போ முதல் சடலம் ஒத்துப் போகுதா? ” இன்ஸ்பெக்டர் மூர்த்தி மேனகாவைக் கேட்டார்.
“அய்யே, முதல் சடலத்துக்கு கண்ணு, கை எதுனா மிச்சம் வச்சீங்களா? கொத்து பரோட்டா பண்ணி குதறி வச்சிருக்கீங்க ?”
மூர்த்தி நாக்கைக் கடித்தார்.
“ மேம், ” பிரசாத் மெதுவாக அழைத்தான். “ ஆகஸ்டு ரெண்டாம் தேதி கிரேஸ் ஹாஸ்பிடல்ல நந்தினி ரத்த தானம் கொடுத்தாங்க. நந்தினியோட ரத்த க்ரூப் ‘ பி பாசிட்டிவ்’’. அந்த ரத்த பாக்கெட் இன்னும் அந்த ஆஸ்பத்திரியில தான் இருக்கும். கிரேஸ் ஹாஸ்பிடல்ல ரொம்ப எமர்ஜென்சின்னாதான் ரத்தம் எடுப்பாங்க. அதனால ரத்தம் கொடுக்கற ஆளுங்க ரொம்ப ரொம்ப கம்மி. நந்தினி பேரு பாக்கெட்டுல இல்லைன்னாலும் இவங்க ரத்தம்தான் அதுன்னு எல்லோருக்கும் தெரியும். அத வச்சி ஏதாவது செய்யலாமா? ”
“ செய்யலாம்தான். ஆனா வினோதினி நந்தினியோட இரட்டைச் சகோதரியா இருக்கற பட்சத்துல நந்தினியோட டிஎன்ஏ வினோதினிக்கும் ஒத்துப் போகும்... ! ”
“ அப்ப எப்படி கண்டு பிடிக்கிறது? ” – மூர்த்தி கேட்டார்.
“ வினோதினி பற்றிய விவரங்கள் வேணும். உதாரணமா வினோதினி கல்யாணமானவளா இருந்து கன்னி ஜவ்வு கிழிஞ்சு போயிருக்கலாம்; அந்த ஒரு அடையாளமே போதும்; கை கால்களில் எலும்பு முறிவு இருக்கலாம்; குழந்தை பெற்ற அடையாளம், தழும்பு – இப்படி எத்தனையோ வாழ்வியல் அடையாளங்களை வச்சு கண்டு பிடிக்கலாம்.... ! ”
உரையாடல் தொடர்ந்தது. அடுக்கடுக்கான உத்தரவுகளும், விவரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணமிருந்தன.
“சார் ” பிரசாத் இடைமறித்தான், “சார், நந்தினியோட வீட்டுல எனக்கு சில அமானுஷ்ய அனுபவம் கிடைச்சுது... ! கழுத்துல தாலியோட இருக்கற இந்தப் பொண்ணு நந்தினியோட ஆபிஸ்ல இருந்ததுக்கான ஆதாரமும் என் கிட்ட இருக்கு! ”
பிரசாத் சொன்னதை இன்ஸ்பெக்டர் கேட்டார். யோசனையில் ஆழ்ந்தார்! செத்தது நந்தினியும், வினோதினியும் என்றிருந்தால் கேஸூக்கு ஒரு உருவம் கிடைக்கும் ! இப்போது இந்த மூன்றாவது பெண் ! போதாததற்கு அமானுஷ்யம் !
“ ப்ரியம் அபார்மெண்டில் ஆவி” என்று தமிழ் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது இன்ஸ்பெக்டருக்கு நினைவில் ஆடியது!
“பிரசாத், நீங்க ஒண்ணு பண்ணுங்க. எதையும் ஆதாரத்தோட சேர்த்து சொன்னீங்கன்னா எனக்கு உபயோகமா இருக்கும் ! ”
பிரசாத் நகர்ந்தான். சட்டென்று அடித்தது அழுகிய வெங்காய வாடை! இனி இங்கிருப்பது நல்லதல்ல.
டாக்டர் மேகலாவை உடனே பார்க்க வேண்டும்!
“ நீங்க நந்தினிக்கு என்ன வேணும்? ” புன்னகையுடன் மேனகா கேட்ட கேள்விக்கு “ ப்ரண்ட்” என்று சொல்லி விட்டு அத்தோடு வெளியில் வந்தான் பிரசாத்.
ஜெபமணி இல்லமும், நந்தினி வீடும் போலிஸ் வளையத்துக்குள் வந்தன.
தொடரும்....