நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும்

ஓர் நிறுவனத்தின் தலைவருக்கு தனது தொழிலில் சுமார் ஒரு கோடி நஷ்டமாகி விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அமர்ந்தார்.
அப்போது அங்கு வயதில் பெரியவர் ஒருவர், இவருக்கு அருகில் வந்து அமர்ந்து, சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு, "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு "தொழிலில் நஷ்டம். மனமுடைந்து விட்டேன்" என்றார்.
"எவ்வளவு ரூபாய் நஷ்டம்? "
"ஒரு கோடி ரூபாய்"
"ஓ அப்படியா, கவலைப் படாதீங்க, நான் யார் தெரியுமா?" என்று கூறி அந்த ஊரின் பிரபல பணக்காரர் பெயரை சொல்லி, "சரி ஒரு கோடி பணம் கிடைத்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்க, "ஆமாம் எல்லாம் சரியாகிவிடும்" என்றார் நிறுவனத் தலைவர்.
பின்பு அந்த பணக்காரர் செக் ஒன்றில் கையெழுத்திட்டு, "இது 2 கோடிக்கான செக். நீ கேட்டதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
பிறகு அந்த நிறுவனத் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்று, செக்கை பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின்பு அலுவலக ஊழியர்களை அழைத்து, ‘’நமது நிறுவனத்தில் ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 2 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதை களைந்து, நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
பணிகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டறியப்பட்டு களையப்பட்டன. அனைத்து ஊழியர்களையும் ஒத்துழைக்க வைத்தார். அவருடைய எண்ணங்கள், செயல்பாடுகள், திட்டமிடல்கள் எல்லாம் சரிந்துப்போன தொழிலை நிவர்த்தி செய்வதிலேயே இருந்தது.
ஒரு வருடம் கழித்து. அலுவலக கணக்குகள் அலசப்பட்டன. அந்நிறுவனம் 4 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது.
அடுத்த நாள், காலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 2 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். தூரத்தில் அந்த செல்வந்தரும் அவரது மனைவியும் வருவதைக் கண்டார். சில விநாடிகள் கழித்து பார்த்தால் அவரது மனைவி மட்டும் வருகிறார், அந்த செல்வந்தரை காணவில்லை.
நிறுவனத் தலைவர் அவரது மனைவியிடம், "மேடம் ஐயாவை எங்கே?’’ எனக் கேட்க, அவரது மனைவியோ பதட்டத்துடன், "ஐயோ உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்துவிட்டாரா?" எனக் கேட்டார்.
"இல்லம்மா, ஏன் அப்படி கேட்கிறீங்க?"
"இல்லை சார், அவர் மனநிலை சரி இல்லாதவர். தான் ஒரு பணக்காரன் என்றும், ‘செக்’ தருகிறேன் என்றும் சொல்லி இங்கு இருப்பவர்களிடம் போலியான செக்கில் கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்"
நிறுவன தலைவருக்கு ஒரு நிமிடம் எதுவும் பேச முடியவில்லை.
அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுதான் என்னை வெற்றியடைய வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து புன்முறுவலுடன் கிளம்பினார்..

எழுதியவர் : மை சூ பாண்டியன் (29-Mar-15, 9:30 pm)
பார்வை : 250

மேலே