பெட்டிக்கடை கந்தசாமி மாமாவும் ஒரு பொணமும்

உழுது திரும்பிய
மழைக்குப் பிந்திய நாளொன்றின்
மாலை வேளையில்
கம்மாக்கரையில்
வண்டியும் மாடும் கவிழ்ந்து விழுந்து
சக்கர அச்சில் சிக்கிக் கால் சிதைந்த
கந்தசாமி மாமா...

இருபத்தைந்து வருடங்களுக்கு
மேலாக
இதே ஊரில் இந்த இடத்தில்
சின்னதாக
பெட்டிக்கடை
வைத்து நடத்தி வந்தார்..

கடனாக எத்தனை முறை
கேட்டாலும்
கடுப்பு காட்டுவாரே ஒழிய
ஒரு போதும் தராமல் விட்டதில்லை...

அவுக எல்லாம்
எத வச்சு திருப்பி தருவாகனு
இத்தனை தூரம்
கடன் தாரீக..
மயிலு அத்தை கேட்டாலும்
சும்மா கெட டி...
போகும் போது கொண்டா போகப் போறோம்
பாவம்
நண்டும் சிண்டுமா
நாலஞ்சு புள்ளைகள
வச்சு அல்லாடிக்கிட்டு இருக்கிறவங்க கிட்ட
துட்டா முக்கியம்..
என்றே அத்தையின் வாயடைப்பார்...

இப்படிக் கடைசிவரை
பெட்டிக் கடையே வைத்து
பெட்டிக் கடை கந்தசாமி
என்ற பட்டப் பெயரோடு
ஒரு நல்ல நாளில்
செத்துப் போனார்..

பெட்டிக்கடை கந்தசாமி மாமாவுக்கு
நல்ல சாவு என்று
ஊரே கொண்டாடித் தீர்த்தது...

சென்னைல
பன்னாட்டு கம்பெனில
வருசத்துக்கு ஒரு புரமோசன் வாங்கி
லகரங்களில் சம்பளம் வாங்கியதாக
வியந்து சொல்லப்பட்ட
செல்லப்பன்
நாலே வருசத்துல
தற்கொலை செஞ்சு
பொணமா ஊருக்கு திரும்பினப்ப...
எந்த அடைமொழியும் இல்லாமலே
பொணமாகவே புதைக்கப்பட்டான்
இதே ஊர்ல...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (29-Mar-15, 5:12 pm)
பார்வை : 239

மேலே