சிற்பியின் காதலி_ உலக அதிசயங்களும் உடன் வந்த கதைகளும்

சிற்பியின் காதலி
கி.மு. 353 நூற்றாண்டிலிருநு 350 வரையிலான காலம். தலை நகரில் இருக்கும் சிற்பக் கூடத்தில் உளிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கோண்டே இருந்தது. நான்கு மாதங்களாக டிமோதியஸ் வடிவமைத்த அந்த பெண்ணின் சிற்பம் பூர்த்தியாகும் நிலையிலிருந்தது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் சிலையின் அழகு பன் மடங்காகத் தெரிந்தது. சிலையின் கண்களை மட்டும் திறப்பதற்காக முழுப் பௌர்ணமி நாளை தேர்ந்தெடுத்து இருந்தான் டிமோதியஸ். அகன்ற தோள்கள், நெற்றியில் இழையோடும் கற்றைச் சுருள் முடி, மிகக் குறைவான ஆபரணப் பொலிவுடன் வடிவமைக்கப்பட்ட சிலையில் இயற்கையின் அழகு கூடுதலாகவே இருந்தது. இடுப்பில் இழைந்தோடும் கச்சையின் இறுக்கத்தால் இளமையின் அழகு எடுப்பாகத் தெரிந்தது.
நாளை பௌர்ணமி. அதற்கு முன் சிலையின் பூரணத்துவத்திற்காக அனைத்து பணிகளையும் முடித்திருந்தான் டிமோதியஸ். தூக்கமில்லாமல் பல நாட்களாக அல்லும் பகலும் உழைத்த களைப்பில் அருகில் இருக்கும் தூணில் சாய்ந்து சிறுது நேரம் கண் அயர்ந்தான். “டிமோதியஸ்” என்ற குரலைக் கேட்டு எழுந்தவன் சுற்றும் முற்றும் மிரட்சியுடன் பார்த்தான். ஒரு பெண்ணின் குரல். சிற்பக் கூடத்தில் அப்படி எந்தப் பெண்ணும் பணியில் இல்லை. சகசிற்பிகள் மும்முரமாக அவர்கள் தம் பணியில் மூழ்கி இருந்தார்கள். டிமோதியஸ் கலவரத்துடன் தன்னை ஒரு முறை கிள்ளிப்பார்த்துக் கொண்டான். மீண்டும் அதே குரல். “டிமோதியஸ், உன்னைத்தான் அழைத்தேன்” சிலையும் பேசுமோ! மனதிற்குள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் டிமோதியஸ். “ஏன் பேசாது சிற்பியே, உன் கண்ணிற்கு கல் என்றால் கல். கன்னி என்றால் கன்னி” மென் அலைகளாகக் காற்றில் தவழ்ந்து வந்தது சிலையின் தொடர் சிர்ப்போலி.
“எனதருமை சிற்பியே, நம்பமுடியவில்லையா? நீ வடித்த சிலைதான் பேசுகிறேன். என் வடிவத்தை தீர்மானித்த உனக்கு எனக்கென்ன வேண்டும் என்று யூகிக்க முடியவில்லையா? ஆண்டாண்டு காலமாக இந்த ஆண்கள் ஏனோ சுயநலவாதிகளாகவே இருக்கிறார்கள். ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் நீங்கள், எங்களுக்கு எது வேண்டுமென்று உணர மறுக்கிறீர்களே” குழப்பத்துடன் சிலை அருகில் சென்ற டிமோதியஸ், சிலையின் உதடுகள் மெலிதாக அசைவதைக் கண்டவுடன் துணுக்குற்று, சக சிற்பிகளை அழைக்க எண்ணினான். “டிமோத்யஸ், நீ என்ன சிறு குழந்தையைப் போல நடந்து கொள்கிறாய். உன் சுவாசத்தின் வெம்மையை மிக அருகில் உணர்ந்த கன்னி நான். நமக்குண்டான இந்த நெருக்கத்தை, சகசிற்பிகளிடம் வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறாயா? இப்போதாவது பதட்டப்படாமல் சகஜ நிலைக்கு வந்து நான் எங்கிருக்கிறேன் என்று சொல்”
இயல்பு நிலைக்குத் திரும்பிய டிமோதியஸ் மெதுவாக பேச ஆரம்பித்தான். “ஒரு சிற்றரசின் தலை நகரமான ஹாலிகானஸில் நீ இருக்கிறாய். இந்த நாட்டை 24 வருடங்கள் மிகச் சிறப்பாக ஆண்ட மன்னன், “மாசொலூஸ்” இறந்த பிறகு, அரசி ஆர்ட்டிமிசியாவின் விருப்பத்திற்கிணங்க அரசருக்கு நினைவுச் சமாதிக் கூடம் ஒன்றை எழுப்பிக் கொண்டிருக்கிறோம். புகழ் பெற்ற கிரேக்க சிற்பிகளான லியோசார்ஸ், பிரையக்ஸிஸ் மற்றும் ஸ்கோபஸ் அனைவரும் இந்தக் சிற்பக் கூடத்தில்தான் பணியாற்றுகிறார்கள். இந்த நினைவுக் கூடத்தை பல மாடிகள் உயரத்திற்கு எழுப்ப தீர்மானித்து இருக்கிறார்கள். பல கட்டிடக் கலைஞர்களும், சிற்பிகளும், வரை பட வல்லுனர்களும் இங்கே குழுமியிருக்கிறார்கள். எனக்குண்டான பொறுப்பினில் தான் உன்னைப் படைத்தேன். இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணியினை தன் வாழ்க்கையின் ஒப்பற்ற லட்சியமாக அரசி ஆர்ட்டிமிஸியா கருதுகிறாள்.”
“அது சரி, என்னை வார்த்தைக்கு வார்த்தை சிலையென்றே அழைக்கிறாயே நான் ஒன்றும் ஜடப் பொருளில்லை. உன் உன்னதக் கற்பனையில் உதித்த அழகிய கன்னி” என்று டிமோதியஸிடம் செல்லமாக கடிந்து கொள்ள, அவன் “அரசி ஆர்ட்டிமிஸியாவை மனதில் வைத்துத்தான் இந்த சிலை வடித்தேன், எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளையும் அதுதான்” என்றான். நீண்ட நேரம் சிலை பேசாதது குறித்து கவலை கொண்ட டிமோதியஸ் சிலைக்கு மிக அருகில் வந்து யாரும் கேட்கா வண்ணம், அதன் காதில் கூறினான். “உனக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறேன் நான். எழில் என்ற பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?” “பரவாயில்லையே, கவித்துவமாகத்தான் எனக்கு பெயர் சூட்டி இருக்கிறாய். ஏன் உன் அன்பிற்கு பாத்திரமான அரசியின் பெயரை வைத்து அழைப்பதுதானே?” என்று செல்லமாகச் சிணுங்கிய எழில் மீண்டும் பேச அரம்பித்தாள். “டிமோதியஸ் இந்த நகரைப்பற்றி மேலும் கொஞ்சம் கூறேன். கேட்க எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது”
டிமோதியஸ் தொடர்ந்தான். “இது ஒரு அழகான கடற்கரைப் பட்டிணம். இயற்கை எழில் கொஞ்சும் தலை நகரம். மற்றபடி போர்க் காலங்களில் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கென்றே அமைந்த குறுகிய கணவாயில் அரசர் நிரந்தரமாக போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதால் மாற்று வழி ஏதுமில்லாமல், எதிரிகள் பல முறை திணறியபடி பின் வாங்கியிருக்கிறார்கள்.”
“உன்னிடம் பேசும் போது நேரம் போவதே தெரிவதில்லை சிற்பியே. உங்கள் அரசரைப்பற்றியும் கொஞ்சம் சொல்லேன்” என்று கெஞ்சினாள் எழில். “முதலில் ஆட்சி செய்த அரசர் ஹெகடொமஸ் என்ற அரசரின் நேரடி அரசியல் வாரிசுதான் இறந்து போன அரசர் மாசொலூஸ். அரசர் ஹோகடொம்ஸுக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் பிறந்த ஆர்ட்டிமிஸியாவைத்தான் மாசொலுஸுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்” என்றான் சிற்பி. அவன் பேசுவதையே ரசிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த எழில் “டிமோதியஸ், நான் முதன் முதலாக கண் விழித்தவுடன் உன்னைத்தான் பார்க்க வேண்டும். தயவு செய்து என் வேண்டுகோளை மறுதலித்து விடாதே. உன்னைப்பற்றியும் நான் ஒரு கற்பனை உருவத்தை என்னுள் வடிவமைத்திருக்கிறேன். அன்றைக்கு உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். நீ போய் ஓய்வெடுத்துக்கொள்” என்று தொடர்ந்து மௌனமானள் எழில்.
பௌர்ணமி நாளும் வந்தது. டிமோதியஸ் எழிலிற்கு துளியும் வேதனை தராத படிக்கு உளியினால் மெல்ல மெல்ல கண்களை வடிவமைத்தான். இடையிடையே எழில் சிணுங்கும் போதெல்லாம், தன் முத்தத்தாலும், மூச்சுக்காற்றாலும் அவளின் வேதனையை மறக்கச் செய்தான். ஒரு கோடி நிலவு வெளிச்சத்தின் கீற்று எழிலின் கண்களில் தெரிந்தது. சிற்பக் கூடமே ஒளியில் ஜொலித்தது. பால்வெளியின் முழுத்தீண்டலில் இன்பத்தை அனுபவித்தான் டிமோதியஸ். மெல்லிசையாக மீண்டும் காற்றில் எழிலின் குரல் எதிரொலித்தது.
“எனதருமை அழகிய சிற்பியே, உன் முதல் மென் உளி தீண்டலிலேயே உன்னை நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போதாவது தயவு செய்து என்னை நம்பு. நான் உங்கள் அரசி ஆர்ட்டிமிஸியா இல்லை. உன் காதலி எழில். மறுக்காமல் என் அன்பை ஏற்றுக்கொள்” என்று கூறிய எழில், டிமோதியஸ் அருகில் வந்து அவனை முத்தமிட்டாள். மிகுந்த வாஞ்சை மேலிட எழிலை உடனே அணைத்துக்கொண்ட டிமோதியஸ் மூர்ச்சையுற்று கீழே சரிந்தான்.
மன்னன் மாசொலஸ் கிரேக்க நாட்டுக் கலாச்சாரத்தையும், கிரேக்க வழிபாட்டு முறைகளையும் பின் பற்றியதால், அரசி ஆர்ட்டிமிஸியா மன்னரின் நினைவு மண்டபத்தைக் கட்ட கிரேக்க சிற்பிகளை ஏற்பாடு செய்திருந்தாள். மன்னன் இறந்த உடனே, அண்டை நாட்டவரான ரோடின்ஸ் கப்பற்படைகளை ஹாலிகானஸுக்கு அனுப்பி வைத்தான். ஆனால் அரசியோ தன் கப்பற்படைகளை கிழக்குத் துறைமுகத்தில் மறைவாக ஒளித்து வைத்திருந்தாள். ரோடியன்ஸ் வீரர்கள் போர்க் கப்பலிலிருந்து நகரை முற்றுகையிடக் கிளம்பியவுடன் எதிரிகளின் கப்பல் முழுவதையும் கைப்பற்றிய அரசி, தன் படைகளை அவர்களின் கப்பலிலேயே அனுப்பி அந்த நாட்டில் முற்றுகையிட்டு வெற்றி பெற்றாள். போருக்கான செலவு அரசரின் நினைவுச் சமாதிச் செலவு என்று அரசாங்க கஜானாவும் காலியாகிக் கொண்டே வந்தது. நிதிப்பற்றாக் குறையை ஈடுகட்ட மக்களிடம் பலவிதமான வரிகளை வசூலித்தாள்.
அரசர் இறந்த இரண்டு வருடத்திற்குள் , அரசியும் உயிர் துறந்தாள். இருவரின் அஸ்திக்கலசமும், பூர்த்தியடையாத நினைவுச் சமாதியிலேயே வைக்கப்பட்டது. துர் தேவதைகளை விரட்டுவதற்காக ஏராளமான விலங்கினங்களைக் கொன்று அவற்றை சமாதிக்குச் செல்லும் மண்டபப் படிக்கட்டுகளில் புதைத்தார்கள். மாசொலுஸ் மற்றும் ஆர்ட்டிமிஸியாவின் சமாதி மண்டபம் நாளடைவில் தொடர் இயற்கையின் சீற்றத்தாலும், கல்லறைத் திருடர்களாலும் கால வெள்ளத்தில் சிதைந்து போனது.
சமீப காலங்களில் மீண்டும் புணரமைக்கப்பட்ட உலக அதிசயங்களுள் ஒன்றான மாசொலுஸின் சமாதியைக் காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமிருக்கிறார்கள். அப்படி வருபவர்களில் இறந்து போன தன் காதலன் டிமோதியஸ் மீண்டும் வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் எழில் என்ற பேரழகி அந்தக் கல்லறை மண்டபத்தில் இன்றளவும் காத்துக்கொண்டிருக்கிறாள்.