குழந்தைகள் உலகம்

"என்ட பெயர் கிருஷ். உன்ட பெயர் என்ன...?"

"என்ட பெயர் சந்தோஷ்"

"உன்ட அப்பா, அம்மாட பெயர் என்ன?" - கிருஷ்

மாற்றம் பெற்று வேறொரு பள்ளியில் சேர்ந்த சந்தோஷ் முதல் நாள், முதன் முதலாக சந்தித்துக் கொண்ட கிருஷுடன் அறிமுகமானான்.


நாட்கள் நகர்ந்தன. இருவரும் இணை பிரியா நண்பர்களானார்கள். கிருஷ் நல்ல வசதியான மதிப்புக்குரிய பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவன். சந்தோஷ், அதற்கு எதிர்மாறு. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.

"சந்தோஷ்... உங்க வீட்ட கார் இருக்குதா...?" - கிருஷ்

"இல்லை..." - சந்தோஷ்

"அப்போ பைக்?" - கிருஷ்

"இல்லை..." - சந்தோஷ்

"ஒன்னுமே இல்லையா... உங்க வீடு பெரிய வீடா?" - கிருஷ்

"இல்லை. சின்ன கொட்டில் வீடு தான். கிடுகால வேய்ஞ்சிருக்கு..." - சந்தோஷ்

"ஹா ஹா ஹா..." - கிருஷ் வாய்விட்டு சிரித்தான்

"எங்க வீட்டில எல்லாமே இருக்கு தெரியுமா? எனக்கு என்ன வேணுமோ எல்லாமே வாங்கி தந்திருக்காங்க..." - கிருஷ்

"அப்பிடியா...?" - சந்தோஷ்

சந்தோஷுக்கு ஆச்சரியம் இருந்தாலும் உள்ளுக்குளே அவமானமாக இருந்தது. கிருஷ் கேட்டதில் ஒன்று கூட நம்மிடம் இல்லையே என்ற வருத்தமும் அவமானமும் கோபமாக மாறிக்கொண்டிருந்தது. அதே வேகத்தோடு வீடு சென்றவன்,

"அம்மா... இனிமே நான் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போக மாட்டன். என்னை கார்ல சரி பைக்கில சரி கொண்டுபோய் விடனும். இல்லைனா நான் பள்ளிக்கூடம் போகவே மாட்டன். இப்பவே சொல்லிட்டன்... " என்றவாறு புத்தக பையை சுழற்றி வீசினான்.

"சரி சந்தோஷ் குட்டி... அப்பா வந்ததும் வாங்கி தாறன். இப்போ வந்து சாப்பிடுங்கோ... " சந்தோஷின் தாய் பாசத்தோடோ கூற,

"எனக்கு சாப்பாடு வேண்டாம். எப்ப பார்த்தாலும் ஒரே சாப்பாடு தான். நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்து சிரிக்கிறாங்கள்..." சந்தோஷ் கோபத்தோட சாப்பாட்டு தட்டினை தட்டி விட்டுடு வெளியே சென்றான்.

மாலையானதும் சந்தோஷின் தந்தை வேலை முடித்து வந்ததும் முதல் முறைப்பாடே இதுவாக தான் இருந்தது.

அன்புடன் சந்தோஷை அள்ளி அணைத்துக்கொண்ட அவனது தந்தை அன்போடு அறிவுரைகளையும் குடும்பம் பற்றியும் சொல்லிகொடுத்த பொழுது அவனும் 'சரி' என ஏற்றுக்கொண்டான்.

காலங்கள் உருண்டோடின.

பாடசாலையில் கலைவிழா நடைபெற்ற பொழுது சந்தோஷின் தாயும் தகப்பனும் வந்திருந்தார்கள். சந்தோஷ் அவர்களை கிருஷிடம் அறிமுகம் செய்து வைத்தான். ஆரம்பத்தில் தள்ளியே நின்றவன் அவர்களது பாசத்தில் மயங்கி அவர்களுடன் இணைந்து கொண்டான். வேலை நிமித்தமாக கிருஷின் பெற்றோர் விழாவிற்கு வரவில்லை என்ற வருத்தம் அவன் மனதுக்குள் இருந்தாலும் சந்தோஷின் அம்மா, அப்பாவை "அம்மா, அப்பா" என அழைத்து பழகினான்.

நாட்கள் நகர இவர்களது நட்பினை அறிந்து கொண்ட கிருஷின் பெற்றோர் அவனை கண்டித்து வைத்தனர்.

"கிருஷ்... இனிமேல் அந்த பொடியன் கூட சேரக்கூடாது... சரியா... அவங்க சரியில்லாதவங்கள்... உன்கூட பழகிறதே உன்கிட்ட இருந்து எதையாவது பறிக்கத் தான். அவனுகிட்ட கொஞ்சம் கவனமாக பழகணும்... களவு எடுக்க கூடியவன். விளங்கிச்சா..." கிருஷின் தாயார் கூறினார்.

"அப்பிடி இல்லைமா... சந்தோஷ் ரொம்ப நல்லவன்..." கிருஷ் கூறினாலும்

"நான் சொல்றதை நீ கேளு. உனக்கு புரிஞ்சுக்கிற வயசு இல்லை. சொல்லுறதை கேட்டு நடந்துக்க... "

அதற்கு மேல எதுவும் கதைக்க முடியாமல் சரி என சொல்லிவிட்டு நகர்ந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாலும் அவனது அம்மா சொன்னவையும் அவனது மனதின் ஓரத்தில் விழித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னரான அவர்களது நட்பில் தூய்மை இருக்கவில்லை.

வகுப்பறையில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்துக்கும் சந்தோஷ் தான் காரணமாக இருக்கும் என கிருஷ் ஆசிரியரிடம் சொல்லி கொடுத்து, அடிவாங்கி கொடுத்த பின்னர் அவன் இல்லை வேறு ஒருத்தன் தான் என தெரிந்து கொண்ட பின்னர் இவர்களது நட்புக்குள் விரிசல் ஏற்பட்டது. சந்தோஷ் தேடி சென்று கதைத்தாலும் குற்ற உணர்வில் கிருஷ் முகம் கொடுக்க விரும்பாது தவிர்த்துக் கொண்டு வந்தான்.

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகின.

நான்கைந்து நாட்கள் கிருஷ் பாடசாலைக்கு வரவில்லை. காரணமும் தெரியாது குழம்பி நின்ற சந்தோஷ் ஒரு நாள் பாடசாலை செல்லாது கிருஷின் வீட்டுக்கு சென்றான்.

"உனக்கெல்லா அம்மா சொல்லிருக்க இங்கெல்லாம் வரக்கூடாது என்று. போ... போ... இங்கே நிற்காதை..." கிருஷின் வீட்டு வேலையாள் தடுத்தார்.

"நான் உள்ளுக்க வரலை அண்ணே... கிருஷ் கொஞ்ச நாளா பள்ளிக்கூடம் வரல... அதான் பார்த்துட்டு போக வந்தன்... கிருஷ் நிற்கிறானா...?" - சந்தோஷ்

"தம்பிக்கு சரியான காய்ச்சல்... உள்ளே படுத்திருக்கிறார். பார்க்கவெல்லாம் முடியாது..."

"காய்ச்சலா... ப்ளீஸ் அண்ணே... பார்த்துட்டு உடனே போயிடுவன்... கொஞ்சம் கருணை காட்டுங்க அண்ணே..." - சந்தோஷ்

"அதெல்லாம் முடியாது. அப்புறம் என்ட வேலைக்கு வேட்டு தான். நிற்கவேண்டாம். போயிடு..."

சத்தம் கேட்டு வெளியில் வந்த கிருஷ் சந்தோஷை உள்ளே வரச் சொன்னான்.


"ஒருத்தருமே என்னை வந்து பார்க்கலை. நீயாச்சும் வந்தியே. தாங்க்ஸ் சந்தோஷ்... என்னை மன்னிச்சுகோடா..." - கிருஷ்

"ஒன்றும் தேவையில்லை... இப்ப காய்ச்சல் எப்பிடி இருக்கு..?" - சந்தோஷ்

"இப்ப பரவாலைடா... இன்னும் ரெண்டு நாள்ல பள்ளிக்கூடம் வருவன்... வீட்டுக்குளையே அடைஞ்சி இருக்குறது தான் கஷ்டமா இருக்கு. பயித்தியமே பிடிச்சுடும் போல இருக்கு..." - கிருஷ் கூறினான்

"வாவேண்டா... வெளியில கொஞ்சம் போயிட்டு வருவோம்..." என சந்தோஷும் கேட்க

"நல்ல ஐடியாடா... பொறு வாறன்" என்றுவிட்டு வேலையாளிடம் பக்கத்து கடைக்கு போயிட்டு வாறதாக சொல்லிவிட்டு இருவரும் வெளியில் வந்தார்கள்.

"கிருஷ்... எங்க வீட்டுக்கு போயிட்டு வருவமா... எங்க அம்மாகிட்ட சொன்ன காய்ச்சலுக்கு ஏதாவது செய்து தருவாடா.... உடனே மாறிடும்..." - சந்தோஷ் கேட்கவும்

"சரிடா.." ஒத்துக்கொண்டான் கிருஷ்


சந்தோஷின் அம்மாவும் கிருஷுக்கு கைவைத்திய மருந்து தயார் செய்து கொடுக்கவும் அவனும் வாங்கி குடித்தான். அன்று மாலை வரை அங்கேயே நின்றான்.

மாலை வரை வீடு வராததால் கிருஷை தேடிக்கொண்டு அவனது பெற்றோர் சந்தோஷின் வீட்டுக்கு வந்து சந்தோஷின் குடும்பத்தை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு கிருஷை அழைத்துக்கொண்டு சென்றனர். வீட்டுக்கு சென்ற கிருஷ்

"என்னை விடுங்கோ... நான் சந்தோஷ் வீட்டுக்கு போக போறான். இனிமே அங்க தான் இருப்பன்..." -முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்

"என்ன சொன்ன... அவ்வளவு திமிரா உனக்கு... " என அவனது அம்மா அடிக்க வரவும்,

"உங்களுக்கு அடிக்க மட்டும் தானே தெரியும். எவ்வளவு வேணும் எண்டாலும் அடியுங்கோ... " என்று அவனே முன்னே வந்தான்.
கொஞ்சம் தடுமாறிப்போன அம்மா அவனை பார்த்து முறைக்க,

"ஏன் நின்றுட்டீங்க... எனக்கு உங்க கிட்ட இருந்து கிடைக்கிறது இந்த அடி மட்டும் தானே. எப்பவாவது அன்ப பேசியிருக்கீங்களா? நான் நித்திரையால எழும்ப முதலே வேலை வேலை என்று ஓடிடுவீங்க... நான் நித்திரை கொண்ட பிறகு தான் வாறீங்கள். எப்பவாச்சும் எனக்கு சோறு தீத்தியிருக்கீன்களா...? சந்தோஷ் வீட்ட நின்ற அந்த ஒரு நாள் சொர்க்கம். அவங்க கிட்ட எதுவுமே இல்லை. ஆனாலும் எனக்கு எதுவுமே தெரியல. அவங்ககிட்ட அவ்வளவுக்கு அன்பு இருக்கு. வேறு எதுவுமே தேவைப்படல. அப்பிடியே இருந்திடலாம் போல இருக்கு. இங்க ஏதேதோவெல்லாம் இருக்கு. ஆனா, என்கூட அன்ப பேச யாருமே இல்லை. எல்லாம் இருந்தும் என்ன பிரயோசனம். எனக்கு தேவையானது எதுவுமே இல்லையே... காய்ச்சல் வந்ததுக்கு ஆஸ்பத்திரிக்கு போனது கூட யாரோ ஒருவர் கூட. இது தானா பாசம்.? எனக்கு நீங்க வேணும் அம்மா. என்கூடவே இருங்க... ப்ளீஸ் அம்மா... " கண்ணீர் மல்க கூறினான்.

கேட்டுக்கொண்டிருந்த தாய் செய்வதறியாமல் திகைத்துப் போயி நின்றார்.

"என்னை மன்னிச்சிடுடா தங்கம்... உனக்காகத்தான் நான் ஓடிட்டு இருக்கன். உனக்கே வேண்டாம் என்ற பிறகு இதெல்லாம் இனிமே வேண்டாம்டா தங்ககுட்டி. எனக்கு நீ மட்டும் போதும்டா. இனிமே நான் உன்கூடவே இருப்பன்... சந்தோசமா..." - கிருஷை அள்ளி அணைத்துக்கொண்டார்.

"அம்மா..." கிருஷ் இழுக்க

" என்ன... சந்தோஷ்ஷா... எனக்கு இனி ரெண்டு பிள்ளைகள் அவனையும் சேர்த்து. அவன் எப்பவேணும்னாலும் இங்க வரலாம். நீயும் அவங்க வீட்ட போயிட்டு வா..." - அம்மா கூறவும்

"அம்மானா அம்மா தான்..." என தாயை கட்டி அனைத்து கன்னத்தில் முத்தம் பதித்தான்.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (3-Apr-15, 7:12 pm)
பார்வை : 331

மேலே