சிவப்பு மொழி -ரகு

உஷ்ணக் காற்றில்
கதகதத்தது கட்டிலோடு
கலைந்த விரிப்புகளும்

அடிக்கடி
விலகி விரசம் சிந்தும்
விடாக்கொண்டனாகியது
சேலை

மணித்துளிகளில்
சிதறின
ரணங்களாவன

முத்தச் சத்தங்கள்
வாங்கி
முகாரி இசைத்தது
மின்விசிறி

நிகழ்விற்குப் பின்
நீர்த்திருந்த உடல் பார்த்து
உச்சுக் கொட்டியது
பல்லியொன்றும்

ஒருவழியாய்
ஒரு வலியோடு
காமப் பல் பிடுங்கி
வெளியில் தள்ளி
சார்த்தியாயிற்று கதவை

கண்ணாடி
மறைக்கவில்லை
அலங்கோலத்தோடு
விழி ஈரத்தையும்

எங்கேனும்
பூக்களோ சில மொட்டுக்களோ
தப்பித்திருக்கும்
வேறுவிதமான பார்வையிலிருந்து

வெள்ளி அலைகலாவன
தழுவியது
மனக் கால்களை

ஜன்னல் திரை விளக்கியபோது
தெரு விளக்கில்
சத்தமிட்டு படித்துக் கொண்டிருந்தது
கொலுசொலிக் குழந்தை!

எழுதியவர் : சுஜய் ரகு (7-Apr-15, 9:15 pm)
பார்வை : 397

மேலே