நெருக்கத்திலும் இறுக்கத்திலும்

என்னை நீயும், உன்னை நானும்,
ஒருவருக்கொருவர்
பரஸ்பர அறிமுகமாகி
நாட்களிலேயே கடந்திருக்கும் நாட்கள்;
ஒவ்வொரு நாளும் செல்ல சண்டைகளும்
தீராக்காதலுமாகவே
கடந்துகொண்டு இருந்ததை
நீயும், நானும், நாமும் அறியாமல்!

திடீரென்று கனவின் விழிப்பாய்
கக்கத்தில் நீ நிறைகிறாய்!
செல்லமாக அணைத்துக் கொள்(ல்)கிறாய்;
பதற்றத்துடன்,
"நாம் நண்பர்கள்தானே?"
என்கையில்,
என் கையில் உன் கையைப் பிணைத்து,
"நாம் நண்பர்கள்தானா?",
என்கிறாய் மீண்டும் செல்ல கோபத்துடன்.

பதிலேதும் பேசத் தோன்றவில்லை;
இந்த நெருக்கமும், இறுக்கமும் சொல்லாததையா
என் பேச்சில் சொல்லிவிடப் போகிறேன்?
நெற்றியில் நீ வைத்திருக்கும்
ஒட்டுப் பொட்டினுஞ்சிறியதாய்
ஒற்றை முத்தம் வைத்து
கண்ணடித்தபடியே சொல்கிறேன்,
"நாம் நண்பர்கள் தானே?", என்று!

உன்னிடமிருந்து வந்த அந்த முறைப்பு
அந்த நெருக்கத்தையும், இறுக்கத்தையும்
கொஞ்சமும் குறைத்திருக்கவில்லை!!

எழுதியவர் : மு.பாலகுருநாதன் (8-Apr-15, 1:33 am)
சேர்த்தது : மு. பாலகுருநாதன்
பார்வை : 69

மேலே