இதயச் சுவரிலே கண்ணீர் வரி

சாகா வரம்பெற்ற சங்கத் தமிழன்னை
ஆஹா எனப்புகழும் அற்புத - மீகாமன்
கடலூர் பிறந்து கதைநாவல் எல்லாம்
சுடச்சுடத் தந்தச் சுடர்.
எழுத்தென்னும் காந்தம் இவருள் நிறைந்து
இழுக்கின்றத் தன்மை படைக்க –அழுத்தமாய்
நாவல் சிறுகதை நற்றமிழ் மக்களுக்காய்
ஆவலாய் படைத்த ஜெயம்.
கருதிய எண்ணம் கலைவண்ணம் ஆக்கி
தருவதில் ஓங்கித் திளைத்து - விருதுகள்
தொட்டு விளையாடி வந்தே விடைபெற்றார்
விட்டுப் எமையும் பிரிந்து.
இலக்கிய வானின் எழுவான் மறைவால்
உலுக்கிய நெஞ்சில் துயரம் – நிலவ
அவரின் பிரிவிற் கிரங்கல் இதய
சுவரிலே கண்ணீர் வரி!
(மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்காய் )