தமிழின் சுவை

தமிழின் சுவை!!

கரும்பிணில் பிழிந்த சாரும் - வாழைக்
கனியுடன் கலந்த தேனும்,
பருப்புடன் சேர்த்த சோற்றில் - கலந்த
பசுவின் நெய்யின் சுவையும்,
பனைவெல் லத்தோடு வார்த்த - சுவைமிகு
பாகுடன் கலந்த பாலும்,
தந்திடும் சுவையது போலே - நாவில்
தமிழும் இனித்திடும் என்பேன்!

அம்மா என்ற ழைக்கும் - மழலையின்
அழகு குரலில் ஒலிக்கும்,
அனைத்து தழுவிக் கொஞ்சிடும் - அன்னையின்
அன்பு இதழிலும் இனிக்கும்,
குழலோடு இணைந்த யாழ்போலே - இசை
குறைவிலா மணக்கும் பண்,
இவையனைத் துமொன்றாய் கலந்த - எங்கள்
இன்னுயிர் தமிழே தாயே!

குக்கூ குயிலின் ஓசை - கூட்டில்
கொஞ்சிடும் பறவைக லொன்றாய்,
பூனை குடிக்கும் பாலை - நாவால்
புதுமை செய்திடும் அழகு,
யானைக் கூட்ட மொன்று - காட்டில்
சேனை யோடே செல்லும்,
இத்தனை அழகு மொன்றாய் - மொழியில்
எங்கினு முண்டோ சொல்வீர்!

கோடி மீன்கள் ஒளிரும் - வானில்
குலவும் மேகமும் நிலவும்
குழந்தைகள் வியந்து பார்க்கும் - வாயில்
குழைந்த பருக்கை தவழும்,
வேம்பும் மாவும் ஒன்றாய் - மெல்ல
வீசும் தென்றல் காற்றாய்,
குழந்தை யோடே வளரும் - எங்கள்
கன்னித் தமிழும் மெல்ல!

பார்த்திபன்.ப
10/04/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (11-Apr-15, 1:06 pm)
Tanglish : thamizhin suvai
பார்வை : 601

மேலே