என் சொப்பனத்து உயிர்ப்புகள்

இன்றெனக்கு திருமணமாம்
என்னருகினில் மிக நெருக்கமாய்
என்னவன் முதல்முறையாக
என் விரல் பற்றிக்கொண்டு ...

அதிகமாய் வெட்கத்தில்
முகம் சிவந்துள்ளதென
காதருகினில் மெல்ல
கிசுகிசுத்தானவன்

காதலித்தவனையே
கரம்பிடிக்கிறேனின்று
கடும்போரட்டத்திற்குப்பின்
பெற்றோரின் முழுஆசியுடன் ..

** எவ்வாறு...
** என்வாழ்வில்
** வந்தானென்று
** நினைவில்லையெனக்கு

** சககல்லூரி தோழனாய்
** சரியானதொரு மழைப்பொழுதில்
** என் கண்ணில் விழுந்தானவன் ...

** நானும்
**அவனும்
** முழுவதும்
** நனைந்திருந்தோம்
** மழையிலன்று...

கெட்டிமேளம்
கெட்டிமேளம்
சப்தங்கள் ஒலிக்கிறது
சங்கீதமாய் செவிகளுள் ..

அய்யரின்
மந்திர முணுமுணுப்பினூடே
மஞ்சள் அரிசியும்
மஞ்சள் மலர்களும்
மங்கள வார்த்தைகளும்
தூவப்படுகின்றன எங்கள்மேல் ...!

** கண்களின் வழிநுழைந்து
** இதயத்தை ஈர்த்தவனல்ல
** அவன் ...

** சக மாணவனுக்கு
** கல்லூரிப்பணம் செலுத்தும்போது
** இதயம்வழி நுழைந்து
** கண்களில் உயிர்த்தவனவன் ...

அக்கினி சாட்சியாய்
என் சுண்டுவிரல்பிடித்து
சுற்றிவரும் போது
சூடாயிற்று முதல்முறை
என் உடல் முழுவதும் ..

கோபத்தை கண்களில்
கொப்பளித்து கொண்டிருந்த
உறவுகளுக்கு மத்தியில்
வாழ்த்துக்களும்
வந்து குவிந்து கொண்டிருந்தது ...

** இதற்கு முன் என்கைகளை
** பற்றியிருக்கிறான் ...
** இரத்த தானமளித்து
** வெளிப்பட்ட என் கைபிடித்து
** பாராட்டும் பாவனையில் ...

**அன்று
**என் விழிகள்
**அவன் விழிகளை
**புதிதாய் சந்தித்துப்பின்
**மீண்டன என்னுள் ...

**இலேசாய் புன்னகைத்தான்
**இதயத்தாலிணைந்தோம்
**நாங்களன்று
**எமைமறந்து ...

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
மெட்டி அணிவிக்க
மெல்ல என் கால்விரல்களை
பற்றினான் ...

நீர் வாளிக்குள்
மோதிரமெடுப்பதாய்
என் விரல்களை
எதேச்சையாய் கிள்ளினான் ...

என் கைக்குள் பற்றியிருந்த
தேங்காயை பிடுங்க
முயன்றவனிடம்
முழுவீரியம் நான் காட்ட
விட்டுக்கொடுத்தான் ...

**என்னுள் மெல்ல நுழைந்து
**எப்படி எல்லாமுமாய்
**மாறினானோ
**அறியவில்லை நான் ...

**கல்லூரி முடித்து
**காத்திருப்புகள்
**தொடர்ந்தது ...

**காதல் மட்டும்
**சாகாது உயிர்கொண்டு
**சாதிக்க துடித்தது ...

என் உயிரில் கலந்தவனுக்கு
என்னையே தரும் புனிதநாளின்று
எனக்கின்று முதலிரவாம்
என் உடல் மெல்ல நடுக்கத்தில்

அவன் சுவாச காற்றுபடும்
என் பின் கழுத்து ...
அவன் முத்தம் பதிக்கும்
என் நடு நெற்றி...
அவன் விரல் தீண்டும்
என் உடல்...
மெல்ல சிலிர்க்கும்
என் காது மடல்களென

என்னவாகப் போகிறேனோ
நானும் ...
இன்றுவரை
எனைக் கொன்று கொண்டிருந்த
என் சொப்பனத்து உயிர்ப்புகளும் ...!
----------------------------------------------------------------------
*** குமரேசன் கிருஷ்ணன் ***

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (12-Apr-15, 7:08 am)
பார்வை : 338

மேலே