சடலக் கிடங்கு – கே-எஸ்-கலை
விடியவே விடியாது
என்ற உறுதியுடன்
விடியற் காலைகளில்
வீடுகளைத் திறக்கின்றன
செய்திகள்....
செம்மரம்...
நிரூபித்துவிட்டது
மரங்களை விட
மலிந்தவன்
மனிதன் என்பதை !
பசி வாட்ட – அந்த
பசியை ஓட்ட பயணித்த
கூலிகள்....
பாவம் அந்த “கூலிகள்”
அவர்கள் இன்று
பாவத்தின் கூலிகள் !
ஏழைகளுக்கும்
கோழைகளுக்கும்
இடையில் நடக்கும்
போர்களில் எப்போதும்...
வெற்றிக் கொடிகள்
கோழைகளுக்கும்
வெள்ளைக் கொடிகள்
ஏழைகளுக்கும்
நிரந்தரமாக்கப் பட்டிருக்கின்றது !
துப்பாக்கிச்
சன்னங்களின்
துட்டச் சாதனைகளில்
துர்ப்பாக்கியங்கள் விளைய
துடிப்படங்கத் துடிக்கின்றது
பிரபஞ்சம் !
சடலக் கிடங்காகிப்
புழுத்துக் கொண்டிருக்கும்
பிரபஞ்சத்தின் மேடுகளில்
உறைந்துக் கொண்டிருக்கின்றது
மனிதத்தின் ரத்தம்....!
அநியாயத்திற்கு எதிராக
நீளமாக, அகலமாக - ஓர்
அறிக்கைச் சமர்ப்பித்துவிட்டு...
புதுவருடம் கொண்டாட
பணியாரம் செய்ய
ஆயத்தமாகிறது “அரசியல்!”
தமிழனுக்கு புதுவருடம்
சித்திரையா? தையா?
விவாத மேடைகளில்
சூடேற்றிக் கொள்கிறான்
“தமிழன்!”