வாருங்கள் எழுதுவோம்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு பாவலர் மார்களே...வணக்கம்...
சில தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் கன்னியப்பன் தாத்தா இட்டிருந்த பதிவினைப் பார்த்தேன் "சட்கோண பந்தம்" குறித்து பதிவு செய்திருந்தார். அதிலே அவர் பதிவேற்றியிருந்த படத்திற்கான கவிதை வடிவினைக் கேட்டார்..பின்பு அவரே கண்டறிந்து பதிவும் செய்தார். வெண்பா எழுதத் தெரிந்த அணைத்து புலவர்களும் மிகவும் சுலபமாக "சட்கோண பந்தம்" எழுதலாம். இதோ இலக்கணங்கள் தருகிறேன் கூடவே நான் இட்டிருக்கும் படத்தில் உள்ளவாறு வார்த்தைகளை அடுக்கினால் "சட்கோண பந்தம்" தயார்..
இதோ இலக்கணங்கள்...
1) வெண்பாவின் தளைகள் ஏதும் தட்டாமல் ஓசை நயம் மாறாது அமைதல் வேண்டும்.
2) 2-4-6-8-10-12 ஆகிய எழுத்துக்கள் ஒன்றி வரவேண்டும்..
3) மேலே படத்தில் கொடுத்ததுபோல் எழுத்துக்கள் வரிசையாக அமைதல் வேண்டும்.
இதனால் ஏற்படும் பயன்
இது சித்திர கவி வகைகளுள் ஒன்று ஆகையால் இதனை எழுதி சட்கோண பந்தத்தில் அடைத்து நீங்கள் விரும்பும் நபருக்கு பரிசாகத் தரலாம்
சாதாரணமாக ஒரு கவி எழுதித் தருவதை விட சித்திர கவிகள் மிகவும் இனிமை பயக்கும்.
தமிழில் நாலுவகை கவிகள் உண்டு
ஆசுகவி-குறிப்புக்கு உடனுடன் கவிதை பாடுதல்.
மதுரகவி- சாந்த நயம் ததும்பும் பாடல்கள் புனைதல்.
சித்திரக்கவி- லாவகமாக படத்தில் கவியை அடைத்துப் பாடுதல்.
வித்தாரக்கவி- எழுது மற்றும் சொற்பொருளில் வல்லமை மிக்குப் பாடுதல்.
இதிலே நீங்கள் சித்திர கவி வல்லவராகத் திகழ்கவும் வாய்ப்புண்டு...
மரபு எழுதத் தெரியாதவருக்கு.....
தாங்களும் "சட்கோண பந்தம்" எழுத ஆசைப் பட்டால் படத்திற்கு ஏற்று எழுத்துக்களை அடைத்து அதனை ஒரு எண்ணத்தில் இட்டு எனக்கோ அல்லது மரபு(வெண்பா) அறிந்த
மற்ற பாவலர்களுக்கோ அனுப்பி வைத்தால் அவர்கள் தங்கள்; பாவை வெண்பா இலக்கணத்தில் செப்பனிட உதவுவார்கள்.....
மரபறிந்த மற்ற பாவலர்கள்..
1) விவேக்பாரதி
2) திரு. கன்னியப்பன்
3) மலேசிய அபி
4) திருமதி.சியாமளா ராஜசேகர்
5) திரு.காளியப்பன் எசேக்கியல்
5) திரு.மெய்யன் நடராஜன்
6) கந்ததாசன்
7) திரு.கவித்தா சபாபதி
"வாருங்கள் வாருங்கள் வண்டமிழி லேகவிகள்
தாருங்கள் தாருங்கள் தந்திட்டால் - நீருங்கள்
பாவின் புலமையினை பார்த்தறிய வாய்ப்புண்டு
தாவி விரைவீர் திரண்டு !"
இப்படிக்கு...
வித்தக இளங்கவி
விவேக்பாரதி