ஒரு வங்கக் குயிலின் ராகம்

(அவள்.... பர்மாவில் நிகழ்ந்த இனவெறி கலவரத்தில் தந்தையையும் , கற்பையும் இழந்த கல்லூரிக் குயில். ..கல்கத்தா அகதிகள் முகாம் ஒன்றில் தாயோடு அவள் வாடுகிறாள். வஞ்சிக்கப்பட்ட தன வாழ்க்கையைக் கூறி பாடுகிறாள்..அந்தப் பெண் குயிலின் கண்ணீர்ப் பாடல்தான் இது . )

கங்கை நதியினிலே
என் ஓடம் மிதக்கிறது
கரையேற்றும் துணைதேடி
நாளெல்லாம் அழுகிறது

பூவிரியும் தோட்டத்தில்
விளையாடும் தென்றல்போல்
நான்கூட ஒருநாளில்
மனம்போல வாழ்த்ததுண்டு

நீரருவி புரண்டோடி
நிலைத்துள்ளி பாய்தல்பொல்
நான்கூட எழில்வனத்தில்
மான்போல மகிழ்ந்ததுண்டு

ஊர்த்தூங்கும் வேளையிலே
வெள்ளாடு பலியாச்சு
நான்தூங்கும் வேளையிலே
என்வாழ்வு பறிபோச்சு

ஓரிரவில் ஒருகயவன் -என்
ஓடத்தில் பயணித்தான்
அதற்கான விதியிதுதான்
என்றென்னை அழவைத்தன்

ஒட்டியவன் குற்றமின்றி
ஓடத்தின் பாவமென்ன
பாட்டிசைத்துக் கேட்கின்றேன்
பழக ஒரு துணைவருமோ?

பறிமாறிய சுகமல்ல
பறிபோன சோகமிது
பாவத்தைச் சுமக்கிறது
பாசம்தர யார்வருவார்?

யாரேனும் கை தந்தால்
என் ஓடம் கரையேறும்
வாழ்வெல்லாம் கடன்பட்டு
பயணத்தின் சுமை தாங்கும்

கங்கை நதியினிலே
என் ஓடம் மிதக்கிறது
கரையேற்ற வருவாரோ
காத்திருந்து அழுவேனோ? (1988)

("சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள்" என்ற எனது கன்னி முயற்சி நூலிலிருந்து)


(நிஜமான அவள் கண்ணதாசனின் நாவலொன்றின் நாயகி ... அந்தக் கதாப்பாத்திரம் கவிதையானது.... இந்தக் கவிதை கண்ணதாசனுக்கு சமர்ப்பணம் ஆகிறது )

எழுதியவர் : கவித்தாசபாபதி (16-Apr-15, 6:09 pm)
பார்வை : 65

மேலே