காதல் மொழி

காதல் மொழி

காதலுக்கும் மொழியுண்டு!
கற்கவும் வழியுண்டு!
காதல் மனங்கொண்டு
காதல் செய்வீரானால்
காதல் மொழி தானே
காதலில் கனிவதுண்டு!

மௌனமே காதல் மொழி!
மனமே புரியும் மொழி!
கண்கள் பேசும் மொழி!
கைகளில் அசையும் மொழி!
கால்களால் எழுதும் மொழி!

உடலும் பசி உணராது
உளமும் தனை நினையாது.
விடயமும் வேறறியாது.
விளங்கும் காதல் மொழி.

இராமனவன் சொன்ன மொழி--
இலகுவான காதல் மொழி?
கண்களின் கம்பன் மொழி
பெண்ணவளின் அம்பு மொழி.!

விலங்கினமும் உறவு சொல்லும்
உளம் மொழிந்து களவு கொள்ளும்
காதலாகி கலக்கும் மொழி
ஈதலது இதய மொழி.

தலை வாராது வாடி நிற்பாள்
நிலை மாறது காட்டி மறுப்பாள்
பூச்சூடி வாசலில் புன்னகைப்பாள்
ஆச்செல்லாம் சரியென்பாள்.

பூசைத் தட்டுக் காட்டுவாள்
கோவில் பக்கம் வாவென்பாள்!
வாசலை மறித்துக் கொள்வாள்.
பேசாமல் போவென்பாள்!

வாசல் ஓரம் தேடி இருப்பாள்.
வீசி விழி பாடி முனுப்பாள்
சடைப்பின்னல் சுழட்டுவாள்!
கடைக்கண்கள் உருட்டுவாள்
சந்திக்கத் தேடுவாள்!

தலைவிரித்துப் பார்த்திருப்பாள்!
கலகம் செய்யக் காத்திருப்பாள்!

கைகளை முன்னே ஆட்டி
கண்களை கவிழ நோக்கி
கட்டழகு இரசியென்பாள்!
கைகளை பின்னே கட்டி
கண்களை ஓரம் விட்டு
காத்திருப்பேன் என்றிடுவாள்.

பின்னழகைக் காட்டியவள்
பிரியமனமில்லையென்பாள்!
முன்னழகைக் காட்டியவள்
முத்துதிர்த்து விழிகசிய
நித்தம் வா எனவழைப்பாள்!

உடம்பினை முறுக்கிவிட்டு
முடியவில்லை தனிமையென்பாள்!
கால்பதித்து விரலாலே
கவியெழுதி காதல் சொல்வாள்!

அல்வாவை பிரித்திடுவாள்!
அகராதி விரித்திடுவாள்!
அல்லென்றால் இரவென்பாள்!
அந்தவேளை வாவென்பாள்!
அல்லியும் பறித்துக்காட்டி
அர்ததமும் விளக்கிடுவாள்!

காதலிக்க மொழி வளரும்!
காதலும் உடன் வளரும்!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (22-Apr-15, 6:51 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
Tanglish : kaadhal mozhi
பார்வை : 78

மேலே