எந்தன் தீரா காதல்
உன் போல் ஒரு பெண்
உலகில் இல்லை...
உண்மையைச் சொன்னால்
உன்னால் மட்டுமே
என்னை வசப்படுத்த முடிந்தது...
என் மனதின்
ஆறாத காயம் ஒன்று
உன்னால் தான்...
உன்னிடம்
பேசுகின்ற பொழுது
எனக்குள் நிகழும்
சில போராட்டங்களை
நீ அறியாய்...
உனக்கான விதத்தில்
நான் .......ஒன்றும் இல்லை...
எனக்கான வாழ்வில்
எல்லாமும் நீ தான்...
எவர் வரினும்
எது நேர்ந்திடினும்
எனக்கு
எல்லாமே நீ தான்...
என்னை காயப்படுத்திய
நிகழ்வுகளின்
நீட்சியானது
நித்தமும்...
எல்லா வலிகளையும்
சகிப்புக்கு ஆட்படுத்தி
நிஜத்தினை
நெஞ்சில் பூட்டிவைத்து
உள்ளம் வருந்தி
உணர்வுகளுக்கு தீயிட்டு
காதல் பிணி கொண்டு
பின்னிரவுகளில்
தூக்கம் தொலைத்து
நொடி தோறும்
நினைவுகள் சுமந்து
கவலைகள் சூழ்ந்த வாழ்வு...
உன்னிடம்
எனக்கான
அங்கீகரிப்பிற்கான
ஆவல் மேலோங்கி
உந்தன்
நினைவுகள் விடுத்து
எதையும்
இழப்பதற்கு தயாராய்...
நீ காலையில்
சூடிய மலர்
மாலையில்
வாடுவது
உன்னிடம்
விடைபெறப்போகும்
வேதனையில் தான்...
எனது பாதையில்
பூத்த பூக்களை
நோக்குவதை விடுத்து
எனது நாசியில்
நுழையத் துடிக்கும்
வாசனையையும் தவிர்த்து
வாழும் தவத்தில்
எல்லாவற்றையும் மீறி
ஏதோ ஒன்று
என்னுள் புகுந்ததை
உணர்கிறேன்...
காலில் தைத்த
முள்ளினை
அகற்றுகையில்
ஏற்படும்
சுகமான வலியினை
ஒத்தது அந்த உணர்வு...
இறுக்கமான சூழலில்
நேர்திடும்
நிஜங்களை விழுங்கி
நெற்றிப்பொட்டில்
தெறித்தாற்போல்
நீ கூறும் அத்தனையும்
எதார்த்தமென
ஏற்கின்ற
என் இதயம்
உனது குரல்
கலைந்தப் பின்
மறுபடியும்
பின்நோக்கிச் சென்று
உன் நினைவுகளையே
சுமந்து நிற்கின்றது....
நீ போடும்
கோலங்களுக்காக
ஏங்கி நிற்கும்
உன் வீட்டு
முற்றம் போல்...
வெற்றிடமாய்
காத்து நிற்கின்றது
என் இதயம்...
ஒவ்வொரு முறையும்
நாமிருவரும்
பேசி முடித்தப் பின்
விடை பெறுகையில்
பிரிந்து விட்ட சோகம்
நெஞ்சில்
படர்ந்த நிலையே
நீடிக்கின்றது...
செய்வது அறியாது
செல்லும் திசை அறியாது
செலவிட்ட நாட்களின்
செழுமையை உணராதவன்...
இனி
செத்தால் தான்
தீருமோ
எந்தன் தீரா காதல்....