அனைவரும் கற்கக் கல்வி ---- அறுசீர் விருத்தம்

அனைவரும் கற்கக் கல்வி

"அனைவரும் கல்வி கற்றால்
-----அச்சமே நாட்டில் இல்லை .
தினைத்துணைத் துன்பம் மேனும்
----- தீண்டுதல் இல்லை நம்மை
மனைத் தொழில் சிறக்கும் நல்ல
------மக்களும் பிறப்பார் ; மீனின்
சினைத்துணைச் சிறப்புக் கூட
------- செழித்த நல்மரமாய் ஓங்கும் !!!!

கற்றவர் மிகுந்த நாடு
------- கருத்தினால் உயர்ந்த நாடு .
மற்ற நல்வளங்கள் யாவும்
-------- மல்கிடப் பெற்ற நாடு .
பெற்றிடு செல்வம் யாவும்
------ பெயர்ந்திடா வண்ணம் காக்கும் .
நற்றவர் மலிந்த நாடு .
------ நலம் பல மண்டும்நாடு .

உண்டுநற் கல்வி நாட்டில்
------- உயர்ந்தவர் , தாழ்ந்தார் என்னும்
பண்டையப் பாகு பாடு
------ பறந்தது ; கல்வி யார்க்கும்
கொண்டிடு பொருளாம் என்று
------- கொட்டிடு முரசம் கேட்க
வண்டியை ஒட்டுவோனும்
------ வகையுறக் கற்றல் வேண்டும் .
s
மாடுகள் மெய்ப்பனும் நல்ல
------ மனத்தால் கற்க ! கல்வி .
வீடுகள் விளக்குவோனும்
------ விரைந்து நற்கல்வி கற்க !
காடுகள் , கழனி தம்மை
------ கவினுறத் திருத்துவா ரும்
ஓடி நற் கல்வி கற்க !
------ ஒய்ந்திடல் கூடா தென்பேன் .

கல்வியிற் சிறந்த நாடு
------ கருதிய பெருமை சேர்க்கும் .
எல்லையில் வளர்ச்சி தங்கும்.
------ எதிலுமே எடுத்துக் காட்டாய்
பல்வகை யானும் ஓங்கிப்
----- பாரினில் அணியாய் நிற்கும்
நல்லன யாவும் கூடி
------- நாடுறு நாடாய் நிற்கும் .!!

ஆணொடு பெண்ணும் கற்றே
----- அளவிலா மேன்மை கொள்க !
வீணர்கள் ஆண்பெண் பேதம்
------- விளைத்திட முற்பட் டாலும்
கோணிய அவர் தம் கொள்கை
----- குப்பையில் தள்ளி விட்டு
மாணுடை கல்வி தன்னை
----- மாந்துக மாதர் எல்லாம் .

மாதரார் கற்ற நாட்டில்
----- மானுடம் வெற்றி கொள்ளும் .
பாதகம் ஏதும் இன்றிப்
----- பக்குவச் சூழல் ஓங்கும் .
சேதமே இல்லை நாட்டில்
----- செழிப்பெலாம் சிறந்து நிற்கும்
ஆதலால் சொன்னேன் இங்கு
------ அனைவரும் கற்க கல்வி,!!

கவிதையாக்கம்
திருமதி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Apr-15, 5:47 pm)
பார்வை : 101

மேலே