பிரிவே பிரிந்து விடு

=^=^+^^+^^+^^+^^+^^+^++^^+^^+^^

பிரிவே பிரிந்து விடு
பிரியமானவனின் நினைவுகள்
தீண்டும் பொழுதுகளில்
அந்தி தென்றல் காற்று தீண்டி -இவள்
மனதின் வலிகளை புண்படுத்துவதேனோ

விழிகளின் வலிகளை ஏந்திய
விழிகளுக்கு மட்டுமே
வீணான விடியலின்
வில்லங்கம் புரிந்திருக்கும்

பூமாலை கசங்கா -இவள்
தூக்கத்தின் துயரத்தை
மலர்ப்படுக்கையின் தலையணை
மாத்திரமே தாங்கிக் கொண்டு
உறைந்து போய்விடுகிறதே-தினமும்
பட்டுப் புடவையின் வாசனை நுகரா
வண்டினை நினைத்து

வெண் மேகங்களும் சதி செய்தே
இருளை அழைத்து வருகின்றது -இவள்
ஏக்கத்தின் தனிமையினை
சீண்டிபார்த்து -தன் தீரா தாகத்தை
கருமுகிலோடு உரசி -இவள்
மேனியின் மயிர்த்துளை உணர்வினை
உசுப்பி விட்டு தான் மட்டும்
இருளின் அமைதியோடு குடித்தனமாகின்றதே
தேன் தடவிய இவளிதழ் காய்ந்து கிடப்பதை பாராமல்

யுகம் முடியும் முன்னே -இவள்
மனக்கனவுகள் தீக்குழம்பில்
கருகிப்போன பாறைத் துகளாய்
தினமும் தீய்ந்து போகின்றதே

மூங்கிலில் முழ்கிப்போன
சிலிர் காற்றாய் -இவள்
தவிப்பினை பட்டப்பகலிலும்
முகம் சுளிக்கவைக்கின்றதே

முழு இரா வேளையும்
மது தடவிய மயக்கும் மன்மதஅம்பு
துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றது -இவள்
இதயத்தினோரம் ஈர விழியினை
உலரச் செய்து
காகித ஓடத்தில் மிதக்கிறதே
கனவுகளை கட்டிக் கொண்டு

தூரல் நின்ற பின்
வாடைக் காற்று ஏனோ

இவள் உயிர் பிரிந்த பின்
வலிதரும் ஊழிக் காலம் ஏனோ
தலைவன் இன்றி தலைவி இவள்
மெளன மொழி தானோ

எழுதியவர் : கீர்த்தனா (23-Apr-15, 6:15 pm)
பார்வை : 1255

மேலே