அணைக்கப் பழகவேண்டும்
போனால் போகட்டும்
பொதுசொத்துதானே என்றெண்ணி
புறக்கணித்துப் போகாமல்
நம்சொத்து என்றெண்ணி
நாசூக்காய் எடுத்துரைத்து
பகலில் எரியும்
வீதி விளக்குகளை
அணைக்கப் பழகவேண்டும்
அடுத்தவன் பொருளை
அபகரிக்கும் கொடுந்தீ
அகத்தில் எரிவதை
அணைக்கப் பழகவேண்டும்
அருகிருந்து சீவியத்தை
ஆள்கின்ற ஒருயிர்முன்
அழகென்னும் ஓவியமாய்
அசைகின்றக் காவியத்தை
அகக்கண்ணால் பார்க்கின்ற
அவமானத் தீயதனை
அணைக்கப் பழகவேண்டும்
இன்பத்துக்காய் புகைத்துவிட்டு
எரிகின்ற வெண்சுருட்டில்
இருக்கின்ற தீக்குஞ்சு
ஏற்படுத்தும் விபரீதம்
இல்லாமல் போவதற்கு
சொல்லாமல் அணைக்கப்
பழகவேண்டும்
ஏழ்மையிலும் உழைத்து
இல்லாமல் வாடுகின்ற
ஏழைகளின் வீட்டு
அடுப்பில் எரியாமல்
எரியும் வயிறை
இலவசமாய் அணைக்கப்
பழகவேண்டும்.
அணைக்கப் பழகும்போதே
தீயை மட்டுமல்ல
தீயைவிடக் கொடியதாய் எரிகின்ற
சமுதாயக் காடுகளின் காய்ந்த சருகாம்
சாதிமதக் கொடுமைகளையும்
கைதேர்ந்த இலஞ்ச ஊழல்களையும்
ஏற்றத் தாழ்வுகளையும்
அணைக்கப் பழகிவிட்டால்
இந்த உலகம் உன்
முற்போக்குச் சிந்தனையை
நிச்சயம் அணைக்கப்
பழகிக்கொள்ளும்!
*மெய்யன் நடராஜ்