மழை என்பது யாதென

அடுக்கடுக்கான வீடுகளிடை
அந்த வீடு நோக்கி நடந்து
கொண்டிருந்தாள்
கனத்த இதயத்துடனும்
கையில் பூவுடனும்.

கறுத்திருந்தது வானம்
அன்று போலவேஇன்றும் .....
கன்னத்தில் வீழ்ந்த
துளி ஒன்று கண்ணீரில்
கலந்துருண்டு
கோடிட்டு செல்கிறது


கல்லூரி நாள் ஒன்றில்
கனத்த மழைக்கு
ஒதுங்கிய பொழுதொன்றில்
அவளை அவனிடத்து
அறிமுகம் செய்தது
இந்த மழைத்துளி ...


"ஏதாவது பேசலாமே
இந்த மழை நிற்கும் மட்டும்"...
மழையை ரசித்தபடி நின்ற
அவள் மௌனத்தைக் கலைத்தான்
எதைப் பேசுவது .... சரி ..
"மழை என்பது"...

அவன் தொடர்ந்தான் ........
ஒவ்வோர் வார்த்தையும்
மழைதுளியாய்...

மழை.... வானம்
எழுதும் கவிதை.
வானத்து விரல்கள்
வேகத்திற்கேற்ப
விதம் விதமாய்
ஸ்வரம் சமைத்து
புதுப் புது
ராகங்களுடன்
பூமியைத்
தழுவிச்செல்லும்
புதுமையான
சங்கீதம்.
சாரலாய் தலை
வருடித் தூங்க வைக்கும்
தாலாட்டு முதல்
சண்ட மாருதமாய்
சாவைக் காவும்
ஒப்பாரி வரை
தன்னகத்தே
புதைத்து வைத்திருக்கும்
புரியாத இசை.......

காதில் இன்னமும் ரீங்காரம்
இட்டுக் கொண்டிருந்தது
அவன் வசீகரக் குரல்

மழை நனைந்து
நிலம் இளகி இருந்தது
மரத்தில் இருந்து
நீர்த்திவலைகள்
முத்து முத்தாய் வீழ்ந்து
தெறித்துக் கொண்டிருந்தன
மங்கிய ஒளியில் மௌனமாக
அவன் இன்னமும் உறங்கிக்
கொண்டே இருந்தான்
அந்தக் கல்லறையில்..
மெல்ல மெல்லக் குனிந்து
முத்தமிடுகிறாள்
அவன் தூக்கம் கலையாமலே....

முகில் கிழித்தொரு மின்னல்
கிளை விட்டுப் பரவி
பேரிடியாய்
இறங்குகிறது அவள் மேல்
தொலைவில் சோகமாக
ஒலித்த துணை இழந்த
மழைக் குருவி ஒன்றின்
இசை இறுதியாக
அவள் செவியை நிரப்பிக்
கொண்டிருக்க.....
கண்களை மூடி கொண்டாள்
அவன் கல்லறை அருகே .....

ஆக்ரோஷமாக
வீழ்ந்து கொண்டே இருக்கின்றன
ஒவ்வோர் துளியும் இப்போது..
ஒவ்வொரு துளியிலும்
அவன் சொல்ல மறந்த கதையும்
அவள் சொல்ல நினைத்த கதையும்
மெல்ல மெல்லக் கரைந்து
வெள்ளமாய் கடலை நோக்கி
விரைந்தோடிக் கொண்டிருந்தன...


குறிப்பு : படைப்பு எழுத அருமையான தலைப்பைத் தந்து ஊக்கம் அளித்த தா.கு அவர்களுக்கு முதற்கண் நன்றிகள் கூறிக் கொள்கிறேன்...

எழுதியவர் : உமை (23-Apr-15, 11:04 pm)
பார்வை : 112

மேலே