வான் வெளியின் வர்ணங்களில் - தேன்மொழியன்

வான் வெளியின் வர்ணங்களில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விண்ணில் சிறைப்பட்ட
விண்மீனின் விளிம்பில் ..
விதைக்காத விருப்பமென
முடிவிலியின் நெருக்கத்தோடு
மெய் வலியாய் வெடிக்கிறாய் .

உள்ளிருந்து வெளிப்பட்டு
அடங்காதா அதிர்வெண்ணில்
கணிப்பின்றி கடந்திடும்
அணுக்கதிரின் வேகத்தில்
அற்புத சிலையென நகர்கிறாய் ...

கிளர்ச்சியில் விரைந்திட்ட
பாதையறியா விண் படகில்
எடையிழந்த உடலாகி
எழுதிடாத சாதனைகளை
சரித்திர பக்கமென நிரப்புகிறாய் ..

சுழற்சியை மறந்திட்ட
விண்கல முகப்பினில்
தகவல் தவறுகையில்
உலகையே வெறுத்திடும்
வான்வெளி மகளாய் மிதக்கிறாய் ..

யாதுமென வாழ்ந்திட்ட
ஏதோ ஒரு வடிவமாய்
வெற்றிட வெளிகளில்
மரணமிலா தேசமொன்றில்
உயிர் படைத்து ஈர்க்கிறாய் ...


- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Apr-15, 12:09 pm)
பார்வை : 114

மேலே