அம்மா
ஆறாம் பொறப்புண்ணு
ஆறுமுகம்னு பேருவச்ச
ஆரிராரோ பாட்டுச்சத்தம்
காதோரம் பாடிவச்ச
தொட்டில்கட்ட எடமில்லாம
தோள்மேல ஒறங்கவச்ச
உன் ஒப்பாரி சத்தம்தானே
எனக்கு ஆராரோ ஆகிப்போச்சி!
நடவுநட்டு நீ வந்தா
நண்டுவாசம் மணமணக்கும்
நடுசாமம் ஆனாலும்
உன் கால்கள் பரபரக்கும்!
காடுமல தேசமெல்லாம்
ஓயாம நீ திரிஞ்ச
என் கைநாட்டு அப்பனையும்
கரைசேத்து தூக்கிவச்ச!
ஆடுநாலு வாங்கிவிட்டு
அக்காக்குனு சொல்லிவச்ச
ஆடுமேய்க்க அண்ணன் படிப்ப
பாதியில நிறுத்திவச்ச!
நாலுஆடு நாற்பதாச்சி
அதுல பாதி வித்துபோச்சி
ஆத்தங்கர ஓரத்துல
ஒரு ஏக்கர் நெலமுமாச்சி!
மழைக்குக்கூட கொஞ்சநேரம்
பள்ளிக்கூடம் ஒதுங்கலயே
ஆனாலும் எங்களுக்கு
பாடம் சொல்லி தந்தத்தாயே!
ஓயாம உழைச்சி வந்து
ஓய்வெடுத்த ஒத்ததிண்ணை
ஊருவிட்டு வந்தபின்னே
போனதம்மா ஒத்தகுடிசை!
தாய்மடியும் தவழ்ந்த மண்ணும்
எப்போதும் தந்த சொகம்
தொலைதேசம் அலைஞ்சாலும்
சோகம் மட்டும் மிஞ்சுதம்மா!