சந்தைக்குப் போன அம்மா

அப்பா கொடுத்த
ஐம்பது ரூபாய்க்குள்
அந்த வாரத்துக்குண்டான
மளிகைச் சாமான்களும்
காய்கறிகளும்
வாங்கியாகவேண்டிய
கட்டாயத்தோடு
சந்தைக்குப்போன அம்மா
திரும்பி வந்துகொண்டிருந்தாள் ,
எனக்குப் பிடித்த
அரிசிப் புட்டுடனும்
தங்கை கேட்ட
கண்ணாடி வளையல்களுடனும்,
பிரியமாய்ச் சாப்பிடுவோமென
வாழையிலையில் வைத்துக் கட்டிய
சூடான மிளகாய் பஜ்ஜிகளுடனும்,
பித்த வெடிப்பேறிய
செருப்பில்லாத
தனது பாதங்களில்
" மறந்துவிட்டேன் " என்கிற
பொய்யை அணிந்துகொண்டும் .............

எழுதியவர் : குருச்சந்திரன் (27-Apr-15, 9:21 am)
பார்வை : 265

மேலே